சுவிட்சர்லாந்திலும் தீ மிதி திருவிழாவா? நம்மூர் ராவண தகனத்தோடு ஒப்பிடப்படும் விசித்திர விழா!

Switzerland Tourism
Switzerland Tourism
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

லக உருண்டையில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒட்டிக் கொண்டிருந்தாலும்,பெரும்பாலான நாடுகளின் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் ஒன்றாகவே உள்ளன. சில விழாக்களைக் கொண்டாடும் முறைகளில்தான் மாறுபாடுகளேயோழிய, ‘மெயின் தீம்’ ஒன்றாகவே உள்ளன. அப்படிப்பட்ட ஒரு விழா இங்கு சூரிக்கில் சமீபத்தில் நடந்தது.

நமது நாட்டிலும் கோடை ஆரம்பித்ததும், அம்மன் கோயில்களிலும், தருமர் கோயில்களிலும் ‘தீ மிதியல்’ திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். பக்தர்கள்  விரதமிருந்து தீக்குழியில்(பூக் குழி என்றும் அழைப்பர்) பய பக்தியுடன் இறங்குவர்.

சிலர் நாலே  தாண்டாக ஓட, சிலர் ஆற அமர நடந்து வர, சுற்றிலும் நிற்பவர்கள் பக்திப் பரவசத்தில் கூச்சலிட, விழா சிறப்பாக நடந்தேறும். சுமார் 58 வருடங்களுக்கு முன்னர், எங்கள் கீழப்பெருமழை திரௌபதியம்மன் கோயில் தீ மிதியலின்போது தீயில் இறங்கியது இப்பொழுதும் மனதில் நிழலாடுகிறது. அப்பொழுதெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே கொடியேற்றி, இரவில் மகா பாரதக் கதையைச் சொல்வார்கள்.

இரவு 9 மணி வாக்கில் தொடங்கப்படும் கதை, சில நாட்களில் அதிகாலை 3, 4 மணிவரை கூட நீளும். கிட்டுப் பூசாரி கதை சொல்ல, ஆமாம் போட ஒருவரும், எதிர்க்கதை சொல்ல மற்றொருவரும் என்று, மூவர் இருப்பர். கதை கேட்க வருபவர்கள் காய்ச்சிய பால் கொண்டு வந்து கதை சொல்பவர்களுக்குக் கொடுப்பார்கள்.

அதே நெருப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு விழாவாக, சூரிக்கிலும் ஆண்டுதோறும் இவ்விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். நகரின் முக்கிய சதுக்கத் தில், நமது டெல்லி பகுதியில் ராவணன் பொம்மையைக் கொளுத்துவதைப்போல, வெண் பொம்மை ஒன்றைக் கொளுத்துகிறார்கள். அது நன்றாக எரிந்து அதன் தலை வெடித்துச்சிதறும் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்குத் தகுந்தாற்போல் அந்த ஆண்டின் கோடை அமையப் போவதாகத் தீர்மானிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பாலே முதல் பெல்லி டான்ஸ் வரை: மேற்கத்திய நடனக் கலைகளின் வர்ணஜாலம்!
Switzerland Tourism

அதற்கு முதல் நாள் அதே இடத்தில், பேரேட் என்றழைக்கப்படும், ஊர்வலம் ஒன்றை நடத்துகிறார்கள்.சாலையின் இரு மருங்கிலும் பார்வையாளர்கள் நிறைந்திருக்க, அலங்கார ஊர்திகள், இசைக்குழுக்கள் என்று இசையைப் பரப்பியபடி அவர்கள் ஒரே விதமான ஆடையில் நடந்து செல்வது கண்களுக்கு விருந்தாக உள்ளன.அந்த ஊர்வலம் ஓரிடத்தைக் கடக்க சுமார் ஒருமணி நேரம் ஆகிறது. அதில் கலந்து கொள்ளும் சிறுவர்கள் வண்ண ஆடைகள் அணிந்து, தங்கள் கைகளில் உள்ள பைகளில் சாக்லட்டுகளைக் கொண்டு வந்து, பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கும், ஏன்? பெரியவர் களுக்குங்கூட வழங்கியபடியே செல்கிறார்கள்.

வித விதமாக அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டிகள், அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள் என்று ஏகப்பட்டவை ஊர்வலத்தில் பங்கேற்கின்றன. அவற்றுக்குப் பின்னால் சூரிக் நகரில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் நாடு வாரியாக பெயர்ப் பலகைகளைச் சுமந்தபடி அணி வகுக்கிறார்கள்.

‘எங்கே’என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலும், (ஆமாங்க!இங்குள்ள ஓர் இடத்தின் பெயர் எங்கே!) ஏரியின் ஃபெரி துறைக் கரையிலும் நடைபெறும் இவ்விழாவினைக்காண கார், ரயில், ட்ராம்,ஃபெரி என்ற பலவித வாகனங்களிலும் வந்து செல்கிறார்கள். பல வாகனங்களும் புழக்கத்தில் இருப்பதால், பயணம் வெகு நிம்மதியாக அமைகிறது. நமது நாட்டிலும் நீண்ட கடற்கரையும், கடல் போன்ற ஏரிகளும் இருந்தபோதிலும் நீர்வழிப் போக்குவரத்தில் நாம் கவனம் செலுத்தத் தவறி விட்டோம். ரயில்களிலும், பஸ்களிலும் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் பயணம் செய்வதையே சுகமெனக் கருதுகிறோம். மணிக்கணக்கில் ட்ராபிக் ஜாம்களில் சிக்கி, நேரம், எரிபொருள், எனர்ஜி ஆகிய அனைத்தையும் வீணடிக்கிறோம்.

ரயில், பேரூந்து ,ஃபெரி, மலைமீது செல்லும் இழுவை ரயில்கள் என்று அனைத்திலும் நாம் வாங்கும் ஒரே பயணச் சீட்டில் இங்கு பயணிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மேட்ரியோஷ்கா பொம்மைகள், ரஷ்ய பாலே, வெங்காயக் கோபுரங்கள்: ரஷ்யாவின் காலத்தால் அழியாத கலை மரபு!
Switzerland Tourism

பொருளாதாரத்தில் நாடு முன்னேறுவதுடன், தனி மனித வாழ்க்கை திருப்திகரமாக அமைவதில்தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி அடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் அதனை அறிந்து செயல் படுவதாலேயே மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கள். அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுகிறார்கள். நாமோ எல்லைகளில் படைகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!

பேரேடின் அடுத்த நாள் அந்த இடத்திலேயே அந்தப் பொம்மை கொளுத்தும் விழா நடைபெற்றது. இவ்வருடம் அந்த பொம்மை விரைவாக எரிந்துவிட்டதாகவும், கோடை நன்றாகவே கழியும் என்றும் பேசிக்கொண்டார்கள்!

logo
Kalki Online
kalkionline.com