
எரிச்சலூட்டும் சருமத்திற்கு:
எரிச்சலூட்டும் சருமத்தை மோர் மாஸ்க் போடுவதன் மூலம் சரி செய்யலாம். தயிரை நன்கு சிலுப்பி கெட்டிமோராக்கி ஒரு கரண்டி அளவு எடுத்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட சருமம் பொலிவுடன் காணப்படும்.
கருவளையங்கள் போக:
உருளைக்கிழங்கை மெல்லிய வில்லைகளாக நறுக்கி கண்ணுக்கு கீழ் பகுதியில் சிறிது நேரம் வைத்து கழுவி விடலாம் அல்லது உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் அடித்து கண்ணுக்கு கீழ் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கருவளையம் நீங்கி விடும்.
பொலிவிழந்த சருமத்திற்கு:
2 ஸ்பூன் ஆப்பிள் சாறுடன் சிறிது தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விட பொலிவிழந்த சருமம் கண்ணாடி போல் பளபளக்கும்.
முகப்பொலிவிற்கு சிறந்த பேக்:
சிறிது மஞ்சள் தூள், 2 ஸ்பூன் பச்சை பால், கடலை மாவு அரை ஸ்பூன், சில துளிகள் எலுமிச்சைசாறு ஆகியவற்றை கலந்து மென்மையான பேஸ்டாக்கி முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி விடவும். 20 நிமிடங்கள் கழித்து நன்கு காய்ந்ததும் அதனை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ எளிமையான அதே சமயம் எஃபக்டிவான ரிசல்ட் தரும் பேக் இது.
உதட்டு வெடிப்பு மற்றும் வறட்சிக்கு:
உதட்டில் வெடிப்பு மற்றும் உதடு வறண்டு பொலிவில்லாமல் இருப்பதற்கு காரணம் போதிய எண்ணெய் பசை இல்லாதது தான். சிலருக்கு உதட்டில் தோல் உரிந்து ரத்தம் கூட வரும். இதற்கு நெய் மிகச்சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படும். நெய்யை சிறிது எடுத்து உதட்டில் தடவி சிறிது நேரம் வைத்திருக்க வெடிப்புகளும், வறண்ட உதடும் காணாமல் மறைந்து பளபளக்கும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற:
சிலருக்கு உதட்டிற்கு மேல் பகுதியில் முடி வளர்ந்து அழகை கொடுக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் சிறிதளவு தண்ணீர் விட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். ஆறியதும் முடிகள் உள்ள இடத்தில் தடவி வர சருமத்தில் உள்ள முடிகளை முற்றிலுமாக நீக்கிவிடும்.
நெய் ஃபேஸ்பேக்:
சந்தனம் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் அத்துடன் நெய் சிறிது சேர்த்து நன்கு குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட முகத்திற்கு ஹைட்ரேட்டிங்கையும் உடனடி பொலிவையும் தரும்.
பாத வெடிப்பிற்கு:
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பாதங்களில் வறட்சி காணமாக வெடிப்பு உண்டாகும். உடல் எடை அதிகரித்தாலும் அழுத்தம் ஏற்பட்டு பாத வெடிப்பு உண்டாகும். இதற்கு மருதாணி இலைகள் சிறந்த தீர்வைத் தரும். குளிர்ச்சி தன்மையுடைய மருதாணி இலைகளை அரைத்து வெடிப்புகள் உள்ள இடங்களில் தடவி உலர்ந்த பிறகு கழுவிவர வெடிப்புகள் மறைந்துவிடும்.
சரும அரிப்பிற்கு:
சிலருக்கு சதா உடலில் அரிப்பு குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும். இதற்கு காரணம் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறட்சியாக காணப்படுவதுதான். இதற்கு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஈரப்பதமூட்டும் கிரீம் வகைகள் அல்லது மாய்ஸ்சரைசரை பயன்படுத்த அரிப்பு நீங்கி தூக்கம் கெடாமல் இருக்கும். அல்லது வீட்டு வைத்தியமாக சந்தனத் தூளுடன் பன்னீர் கலந்து குழைத்து உடலில் தடவி வர அரிப்பு காணாமல் போகும். அத்துடன் பருத்தி ஆடைகளை அணிவதும் நல்ல பலன் தரும்.
கை கால் மூட்டுகளின் கருமை நீங்க:
சிலருக்கு முழங்கை, கணுக்கால், முட்டி போன்ற இடங்களில் கருப்பு தட்டி இருக்கும். இந்த கருமை நீங்க எலுமிச்சை சாறுடன் சிறிது வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து கருமை படர்ந்த இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர கருமை மறைந்துவிடும்.