
லினன் என்பது ஆளி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கையான துணி வகையாகும். தற்போது மக்களால் அதிகம் விரும்பப்படும் லினன் துணிகளின் வகைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. Plain லினன்;
இது மிகவும் அடிப்படையான லினன் வகையாகும். இது எளிமையான மேல் கீழ் நெசவைக் கொண்டுள்ளது. ஆனால் மிகவும் வலுவானது. மென்மையான மேற்பரப்பு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் ஈரத்தை உறிஞ்சக்கூடியது. மேஜையில் விரிக்கும் துணிகள், துண்டுகள் மற்றும் திரைச்சீரைகள் போன்ற அன்றாட பொருள்களுக்கு இந்த வகை லினன்தான் பயன் படுத்துவார்கள். மேலும் சட்டைகள், ரவிக்கைகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் நீடித்து உழைக்கும் தன்மையால் இது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
2. டமாஸ்க் ( Damask) லினன்;
இது ப்ளைன் மற்றும் சாட்டின் லினனை இணைப்பதன் மூலம் ஜக்கார்டு தறியில் உருவாக்கப்படுகிறது. மென்மையான துணியில் நேர்த்தியான மலர் அல்லது வடிவியல் டிசைன்களைக் கொண்டுள்ளது. நேர்த்தியான தோற்றம் காரணமாக இது மேஜை துணி, நாப்கின்கள் மற்றும் அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
3. தளர்வாக நெய்த லினன்;
தளர்வாக நெய்யப்படும் லினன் இலகு ரகமாகவும் ஈரத்தை அதிகம் உறிஞ்சக்கூடியதாகவும், காற்றோட்டமான நெசவையும் கொண்டிருக்கும். இது துண்டுகள் நாப்கின்கள், டயப்பர்கள் போன்ற சுகாதாரத் துணிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இதில் காற்று ஊடுருவுதல் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை உண்டு.
4. ஷீட்டிங் (Sheeting) லினன்;
இது அகலமான மென்மையான நெசவைக் கொண்டுள்ளது. ஆனால் உறுதியான உணர்வைத் தருகிறது. மற்ற லினன் வகைகளுடன் ஒப்பிடும்போது இது கடுமையானது. படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவை செய்ய பயன்படுகிறது. இதன் வசதியான அமைப்பு காரணமாக சில நேரங்களில் ஆடைகள் மற்றும் சூட்டுகள் போன்றவையும் செய்ய பயன்படுகிறது.
5. ஹாலந்து லினன்;
இது ஒரு கனமான ஒளிப்புகா துணியாகும். இது பெரும்பாலும் எண்ணெய் அல்லது ஸ்டாச்சுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் விறைப்பு தன்மை மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மையால் ஜன்னல் திரைச்சீலைகள் மற்றும் பிற வீட்டு அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
6. கேம்ப்ரிக் (Cambric) லினன்;
இது மெல்லியதாகவும் இலகு ரகமானதாகவும் மென்மையானதாகவும் இருப்பதால் கைக்குட்டைகள் உள்ளாடைகள் மற்றும் பிற லேசான ஆடைகள் போன்ற மென்மையான துணி வகைகள் செய்ய ஏற்றது. இதன் மென்மை மற்றும் மெல்லிய நெசவு காரணமாக இந்த வகை துணிகள் ஒரு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது.
7. வெனிஸ் லினன்;
இது சாட்டின் நெசவுடன் கூடிய பட்டுப்போன்ற மென்மையான துணியாகும். பெரும்பாலும் டமாஸ்க் வகையாக கருதப்படுகிறது. இதன் ஆடம்பரமான உணர்வு மற்றும் தோற்றம் காரணமாக நேர்த்தியான திரைச்சீலைகள் மற்றும் அலங்கார ஜவுளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
8. ஹக்காபேக் (Huckaback) லினன்;
இது ஒரு கடினமான வாஃபிள் அல்லது தேன்கூடு போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. ஈரம் உறிஞ்சும் தன்மையால் துண்டுகள் மற்றும் பிற பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. மென்மையான அமைப்பு தேவைப்படும் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக தைக்கப்பட்ட சட்டைகள் மற்றும் கால்சட்டை.
9. கூடை (basket weave) நெசவு லினன்;
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நூல்களை ஒரு கூடையைப் போல, குறுக்குவெட்டு வடிவத்தில் ஒன்றாக நெசவு செய்வதன் மூலம் உருவாக்கப்பட்டது. ஜாக்கெட்டுகள், பேன்ட்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட ஆடைகளுக்கு ஏற்றது.
10. ஹெர்ரிங்போன் (Herringbone) லினன்
இதன் தனித்துவமான V- வடிவ நெசவு முறையால் அடையாளம் காணப்படுகிறது. பிளேஸர்கள், கோட்டுகள் மற்றும் ஸ்டைலான கால்சட்டைகளுக்கு இது பிரபலமானது .
11. ட்வில் (Twill) லினன்;
இது துணியை மென்மையாகவும் சுருக்கங்களுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் ஆக்குகிறது. கால்சட்டை, ஜாக்கெட்டுகள் மற்றும் கனமான லினன் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது .
12. கேன்வாஸ் (Canvas) லினன்;
உறுதித்தன்மைக்கு பெயர் பெற்ற ஒரு கனமான, அடர்த்தியான லினன் வகை. வெளிப்புற ஆடைகள், பைகள் மற்றும் கனரக ஆடைப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.