
இளநரை பிரச்னை தற்போது டீனேஜ் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே ஒரு மிகப்பெரிய தர்ம சங்கடமான பிரச்னையாக விளங்கி வருகிறது. முடி பாதுகாப்பு என்பது நம் ஆரோக்கியத்தின் மிக முக்கியமான ஒன்று. இளம் வயதிலேயே சிலருக்கு தலை நரைக்கத் தொடங்கிவிடும் இதற்குப் பெயர்தான் இளநரை. இந்த பிரச்னைக்கு தீர்வே இல்லையா என்னதான் தீர்வு என்று நீங்கள் யோசிக்கிறீர்களா இதோ கீழ்கண்ட 12-யோசனைகளும் இளநரையை தடுக்கும் குறிப்புகள் ஆகும்.
1-வைட்டமின் பி மாத்திரையை அல்லது வைட்டமின் பி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
2-நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சாற்றை கலந்து சூடாக்கி தேய்த்து குளித்துவர இளமையில் தோன்றும் நரையை தடுக்கலாம்.
3-பொதுவாக கூந்தல் பராமரிப்புக்கு மருதாணி பேக் மிகவும் பயனுள்ளது. மருதாணி ஒரு கப், தேங்காய் எண்ணை, எலுமிச்சைச் சாறு சிறிதளவு, தேயிலை நீர் இவற்றை முதல் நாளே கலந்து வைத்துவிட்டு அடுத்த நாள் இதை பேக் போட்டு 1 மணி நேரம் ஊறவைத்து குளிக்கவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் இளநரை மறையும். இது அதிக குளிர்ச்சி என்பதால் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை உபயோகிக்கக்கூடாது.
4-தேங்காய் எண்ணெயில் மூங்கில் இலைகளை போட்டு 14 நாட்கள் ஊறவைத்து பின்னர் அந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால் இளநரையைத் தடுக்கலாம்.
5-கரிசலாங்கண்ணி சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்துவர இளநரையைத் தடுப்பதோடு வயது கூடினாலும் நரை வருவதைத் தடுக்கலாம்.
6-வெற்றிலை, கருவேப்பிலை, மிளகு, சீரகம், கசகசா, கற்பூரம் இவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த எண்ணையை மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தி வந்தால் நரை வருவதைத் தடுக்கலாம்.
7-மருதாணி இலை, நெல்லிக்காய்ச்சாறு, தேயிலை நீர், முட்டையின் வெள்ளைக்கரு இவற்றைத் தேய்த்து 2 மணி நேரம் கழித்து தலையை அலச நரை வருவதைத் தடுக்கலாம்.
8-தினமும் காலையில் வெறும் வயிற்றில் திரிபலா நீரை பருகி வந்தாலும் இளநரை தடுக்கப்பட்டு நல்ல பலன் கிடைக்கும். (திரிபலா தூள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.)
9-வெந்தயம், வால்மிளகு, சீரகம் இவற்றை சமஅளவு எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர இளநரை மறைந்துவிடும்.
10-வெல்லம், பீட்ரூட், நாவல்பழம், சுண்டைக்காய், முருங்கைக்காய், கீரை, முட்டை, பேரீச்சம்பழம், திரிபலா சூரணம் இவற்றை சாப்பிட்டு வந்தாலும் இளநரையைத் தடுக்கலாம்.
11-தினமும் ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் இளநரையை தடுத்து கருமையான முடியை பெறலாம்.
12-மருதாணி, கருவேப்பிலை, வேப்பிலை ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து பொடியினை வெள்ளைத் துணியில் கட்டி எண்ணையில் போட்டு அந்த எண்ணையை உபயோகித்து வந்தால் முடி நரைப்பது தடுக்கப்பட்டு கூந்தல் கருப்பாக வளரும்.