
குழந்தைகளின் சருமம் மென்மையாகவும் இளஞ்சவப்பு நிறத்திலும் இருப்பது அவர்களின் ஆரோக்கியத்தின் அடையாளம். ஆனால், பல காரணங்களால் குழந்தைகளின் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு அலர்ஜி, தொற்று, சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள். இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் 5 முக்கிய சருமப் பிரச்சனைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
1. டயப்பர் ரேஷ் (Diaper Rash): டயப்பர் ரேஷ் என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான சருமப் பிரச்சனை. டயப்பர் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் ஈரப்பதம், சிறுநீர் மற்றும் மலத்தின் தாக்கம் காரணமாக பின்புறத்தில் சிவப்பு நிறத்தில் தோன்றும் தடிப்புகள், கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஆகியவை ஏற்படும். இது வராமல் தடுப்பதற்கு அடிக்கடி டயப்பரை மாற்றுவது நல்லது. ஒவ்வொரு முறை டயபர் மாற்றும்போதும் குழந்தையின் பின்புறத்தை நன்கு சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும்.
2. தோலழற்சி (Eczema): இது ஒரு நாள்பட்ட சரும நோய். இது குழந்தைகளில் மிகவும் பொதுவாகக் காணப்படும். இதனால், சிவப்பு நிறத்தில் தோன்றும் தடிப்புகள், கொப்புளங்கள், அரிப்பு போன்றவை ஏற்படலாம். இது ஏற்படுவதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் மரபணு, அலர்ஜி, சுற்றுச்சூழல் காரணிகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இவற்றை சரி செய்வதற்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் கிரீம்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்ப்பது மூலமாகவும் இது வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
3. பருக்கள் (Acne): பருக்கள் பொதுவாக பருவமடைதல் காலத்தில் ஏற்படும். ஆனால், சில குழந்தைகளுக்கு இது சிறு வயதிலேயே ஏற்படலாம். முகம் தோள்பட்டை மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படும். குழந்தைகளுக்கு முகப்பருக்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. குழந்தைகளின் முகத்தை அடிக்கடி சுத்தப்படுத்துதல், மோசமான உணவுகளைத் தவிர்த்தல் போன்றவை இதற்கு விரைவில் தீர்வளிக்கும்.
4. தோல் தொற்று (Skin Infection): பாக்டீரியா, வைரஸ் அல்லது புஞ்சை தொற்று காரணமாக குழந்தைகளுக்குத் தோல் தொற்று ஏற்படலாம். இதனால், சருமம் சிவந்து போதல், கொப்புளங்கள், சீழ் மற்றும் அரிப்பு ஆகியவை ஏற்படும்.
5. வறண்ட தோல் (Dry Skin): குளிர்காலம், குளிர்ந்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் ஆகியவை குழந்தைகளின் தோலை வறண்டு போகச் செய்யும். வறண்ட தோல் உரிதல், சிவந்து போதல் மற்றும் அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். இது ஏற்படாமல் பார்த்துக்கொள்ள சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருப்பது அவசியம். இதற்கு ஈரப்பதத்தை தக்க வைக்கும் கிரீம்களைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளின் சருமப் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொதுவானவை. குழந்தைகளுக்கு ஏதேனும் சரும பிரச்சனை இருப்பின் உடனடியாக குழந்தை மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும். சரியான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் குழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.