
உங்களின் முக அழகைக் கூட்டிக் காட்டுவதில் புருவம் மற்றும் இமை ஓரப் பகுதியில் உள்ள முடிகளின் பங்கு அதிகம் என்றால் அது மிகையாகாது.
முக அழகைக்கூட்டுவது மட்டுமின்றி, மேக்கப் போடும்போது முகத்தின் வசீகரம் கூடவும், தன்னம்பிக்கை அதிகரிக்கவும் உதவும். அதிக செலவின்றி அடர்த்தியான புருவம் பெறவும், இமையோர முடிகள் (Eyelashes) நீண்டு வளரவும் வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய 5 எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.விளக்கெண்ணெய் (Castor Oil) உபயோகித்தல்:
புருவங்கள் மற்றும் இமைகள் மீது விளக்கெண்ணெயில் அவை நன்கு ஊறும்படி தடவி வைக்கலாம். சிறிது நேரம் அமைதியாக கண் மூடிப் படுத்து ரெஸ்ட் எடுக்க நினைக்கும் நேரங்களில், ஒரு சிறிய மஸ்காரா பிரஷ் அல்லது காட்டன் பஞ்சியில் விளக்கெண்ணெயை தொட்டு அவற்றின் மீது தடவலாம். விளக்கெண்ணெயில் உள்ள அதிகளவு வைட்டமின்கள், ப்ரோட்டீன்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் முடிக் கால்களைச் சுற்றியுள்ள நுண்ணறைகளை சிறப்பாகச் செயல்பட வைத்து, புருவம் மற்றும் இமைப்பகுதி முடிகள் கரு கருவென அடர்த்தியாக வளர உதவும்.
2.ஆலுவேரா (Aloe vera): ஃபிரஷ் ஆலுவேரா ஜெல்லை எடுத்து புருவங்களின் மீது தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பிறகு முகத்தை நன்கு கழுவிவிடவும். இதை தினசரி இரண்டு வேளை தொடர்ந்து செய்து வர, புருவப்பகுதி ரோமங்கள் அடர்த்தியாகவும் வலிமையுள்ளதாகவும் வளர ஆரம்பிக்கும். ஆலுவேரா ஜெல்லில் உள்ள அதிகளவு வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் ரோமங்களின் வேர்ப்பகுதி நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படச் செய்து அடர்த்தியான முடிவளர உதவும்.
3.தேங்காய் எண்ணெய் (Coconut Oil): பொதுவாக தேங்காய் எண்ணெய் ஒவ்வொருவர் வீட்டிலும் எப்பொழுதும் இருக்கக் கூடிய பொருளாகும். தேங்காய் எண்ணெயில் லாரிக் (Lauric) அமிலம் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு ஐப்ரோ பிரஷ்ஷை தேங்காய் எண்ணெயில் தொட்டு படுக்கைக்குச் செல்லும் முன் புருவம் மற்றும் இமைகள் மீது அளவோடு தடவி விட்டால், அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள் முடியின் வேர்ப்பகுதி நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி அடர்த்தியாக வளர உதவும்.
4.ரோஸ் மேரி ஆயில்: ரோஸ் மேரி ஆயிலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை உடனடியாக உடலின் இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சிறப்பாகப் பாய உதவும். இந்த எண்ணெயில் சில துளிகள் எடுத்து தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபாவுடன் கலந்து பஞ்சில் நனைத்து புருவம் மற்றும் இமைகளின் முடிகள் மீது லைட்டாகத் தடவி வைக்கலாம். தினசரி இதை செய்து வந்தால் சில வாரங்களில் புருவம் அடர்த்தியாக வளர்வதைக் கண் கூடாகக் காணலாம்.
5.வெங்காய ஜூஸ் (Onion Juice): ஆனியன் ஜூஸ் புருவங்களில் மட்டும் உபயோகிக்க ஏற்றது. வெங்காயத்தில் உள்ள அதிகளவு சல்ஃபர் உடனடியாக சருமத்தின் அடிப்பகுதியில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். ஆனியன் ஜூஸை வாரத்தில் இரண்டு முறை புருவங்களில் தடவி இருபது நிமிடங்கள் வைத்திருக்க அது முடி வளர்ச்சியை ஊக்குவித்து சீக்கிரமே அடர்த்தியான புருவங்களைப் பெறஉதவும்.