
பழங்கள் சாப்பிட்டால் அவை உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். மேலும் முகத்தையும் உடலையும் பளபளப்பாக ஆகும். அதேபோல சில வகையான பழங்களின் தோல்கள் முகப்பளபளப்பிற்கு உதவுகின்றன.
1. ஆரஞ்சுத் தோல்;
பயன்கள்; விட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சுத்தோல் சருமத்தை ஒளிரச் செய்யவும் கரும்புள்ளிகளை குறைக்கவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. இறந்த சரும செல்களை அழிக்கிறது மற்றும் துளைகளை திறக்கிறது.
பயன்படுத்தும் விதம்; தோல் உரித்து ஆரஞ்சுப் பழத்தை உண்டு முடித்ததும் அதன் தோலை நிழலில் உலர்த்தி பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை சிறிதளவு தயிர் உடன் கலந்து ஃபேஸ் பேக் போல உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை முகத்தில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும். முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
2. எலுமிச்சை தோல்;
பயன்கள்; இதில் சிட்ரிக் அமிலம் உள்ளது. அதனால் அது சருமத்தை பிரகாசமாக வைக்கிறது. சருமத்தின் நிறத்தை சமன் செய்கிறது. முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெயைக் குறைக்கிறது. முகப்பருவை தடுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளன.
பயன்படுத்தும் விதம்; எலுமிச்சை தோலை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து ஃபேஸ் பேக் உருவாக்க வேண்டும். இதை முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும். முகம் ஜொலி ஜொலிக்கும்.
3. வாழைப்பழத் தோல்;
பயன்கள்; விட்டமின்கள் ஏ,பி மற்றும் சி நிரம்பிய வாழைப்பழத் தோல் சருமத்தை ஈரப்பதம் ஆக்குகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. சருமத்திற்கு ஊட்டமளிக்கும் ஆக்சிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது.
பயன்படுத்தும் விதம்; வாழைப்பழத்தின் உள் பக்கத்தை மெதுவாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். 15 லிருந்து 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவவேண்டும்.
4. பப்பாளித் தோல்;
பயன்கள்; இறந்த சரும செல்களை வெளியேற்றும் பாப்பைன் போன்ற நொதிகள் இதில் உள்ளன. இவை மென்மையான மற்றும் துடிப்பான சருமத்திற்கு வழிவகுக்கும். வயதாவதைத் தடுத்து முகத்தை இளமையாக வைக்கும்.
பயன்படுத்தும் விதம்; பப்பாளி தோலின் உட்புறத்தை முகத்தில் வட்ட வடிவில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
5. கிவிப் பழத்தோல்;
பயன்கள்; ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் விட்டமின் சி அதிகம் உள்ள கிவித் தோலில் உள்ள பண்புகள், கரும்புள்ளிகளை அழித்து முகம் பொலிவு பெற உதவுகிறது.
பயன்படுத்தும் விதம்; கிவி பழத்தோலை காயவைத்து அரைத்து தயிருடன் கலந்து பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். முகம் புத்துணர்ச்சி பெறும்.
6. ஆப்பிள் பழத்தோல்;
பயன்கள்; ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் ஆப்பிள் தோலில் புதுப்பித்தல் மற்றும் நெகிழ்ச்சித் தன்மையை ஏற்படுத்துகிறது மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது.
பயன்படுத்தும் விதம்; கொதிக்கும் நீரில் ஆப்பிள் தோல்களை போட்டு வேகவைக்கவேண்டும். பின் அதை வடிகட்டி அந்தத் தண்ணீர் ஆறியதும் அதை முகத்தில் தடவிக்கொள்ள வேண்டும். இருபது நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவேண்டும். இது முகத்தில் உள்ள துளைகளை இறுக்கி பளபளப்பை சேர்க்க சேர்க்கும் டோனராக பயன்படுகிறது.