உங்களிடம் இந்த 5 அணிகலன்கள் இருந்தால் நீங்களும் ஃபேஷன் குயின் தான்!

must-have-fashion-accessories
must-have-fashion-accessories
Updated on

பெண்கள் என்றாலே அழகுதான். அதிலும் தங்களை விதவிதமாக அலங்கரித்துக்கொள்வதில் அவர்களுக்கு எப்போதுமே அலாதியான பிரியம் உண்டு. என்னதான் விலையுயர்ந்த மாடர்ன் ஆடைகளை அணிந்தாலும், அதற்கேற்ற சரியான அணிகலன்களை அணியவில்லை என்றால் அந்த தோற்றமே முழுமையடையாது. நமது இந்தியப் பாரம்பரியத்தில் ஆடைகளுக்கு நிகராக நகைகளுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. 

சாதாரணமாக வீட்டில் உடுத்தும் காட்டன் குர்தி முதல் கல்யாணப் பட்டுப்புடவை வரை, எல்லாவற்றுக்குமே பொருத்தமான ஆபரணங்களை மேட்ச் செய்தால் நீங்கள் ஒரு தேவதையாகவே காட்சியளிப்பீர்கள். தலையில் ஆரம்பித்து பாதம் வரை நம்மை ஸ்டைலாக மாற்றும் சில அட்டகாசமான அலங்காரப் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.

பொட்டு, மூக்குத்தி!

நம் ஊர் பெண்களின் அடையாளமே அந்த ஒற்றைப் பொட்டுதான். புருவ மத்தியில் வைக்கும் அந்த சின்னப் பொட்டு முகத்தின் ஒட்டுமொத்த களைப்பையும் நீக்கி ஒரு தனி அழகைக் கொடுக்கும். உங்கள் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப கலர் கலராகவோ அல்லது சிம்பிளான கல் வைத்த ஸ்டிக்கர் பொட்டுகளையோ பயன்படுத்தலாம். 

அதேபோல, முகத்திற்கு இன்ஸ்டன்ட் பிரகாசத்தைத் தருவதில் மூக்குத்திக்கு பெரிய இடமுண்டு. சின்னதாக ஒரு கல் வைத்த மூக்குத்தி அணிந்தாலும் முகம் சட்டென்று பளிச்சென்று மாறிவிடும். மாடர்ன் உடைகளுக்கு சிறிய ரிங் வகையிலான மூக்குத்திகளை அணிவது தற்போது இளசுகள் மத்தியில் செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஜிமிக்கி, நெத்திச்சுட்டி!

பொதுவாக எந்த ஒரு பாரம்பரிய நிகழ்ச்சி என்றாலும் பெண்களின் முதல் சாய்ஸ் ஜிமிக்கி கம்மல்தான். உங்கள் முகத்தின் வடிவத்திற்கு ஏற்றவாறு ஒரு அழகான ஜிமிக்கியை அணிந்தால், பார்ப்பவர்களின் கண்கள் வேறு எங்கும் செல்லாது. மலிவான விலையில் ஆரம்பித்து தங்கம் வரை பல டிசைன்களில் இது கிடைக்கிறது. 

விசேஷ வீடுகளுக்குச் செல்லும்போது, நெற்றியில் நெத்திச்சுட்டி அணிவது ஒரு ராஜரீகமான தோற்றத்தைக் கொடுக்கும். நெற்றியின் அகலத்திற்கு ஏற்ப சரியான அளவைத் தேர்ந்தெடுத்து அணிவது மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
பனிக்காலத்தில் கைகளை வறட்சியிலிருந்து காக்கும் 'மேஜிக்' டிப்ஸ்!
must-have-fashion-accessories

கைகளுக்கும் கழுத்துக்கும் ஆபரணங்கள்!

கைகளை அசைத்து பேசும்போது அந்த வளையல்களின் சத்தம் கேட்பதே ஒரு தனி சுகம்தான். மெட்டல், கண்ணாடி அல்லது மரத்தால் செய்யப்பட்டவை என உங்கள் டிரஸ்க்கு மேட்சாக கைகள் நிறைய வளையல் அணிவது ஒரு கிளாசிக் லுக்குக்கு உத்தரவாதம் தரும். 

அதேபோல, கழுத்து அமைப்பிற்கு ஏற்ப மெல்லிய நெக்லஸ், கழுத்தோடு ஒட்டிய சோக்கர் அல்லது நீண்ட நவரத்ன மாலைகளைத் தேர்ந்தெடுக்கலாம். முத்தாரம் மற்றும் பவள மாலைகள் அணிவது இப்போது மீண்டும் ஃபேஷன் உலகை பெருமளவு ஆக்கிரமித்துள்ளது.

ஒட்டியாணம், கொலுசு!

புடவை, பட்டுப்பாவாடை அல்லது தாவணி அணியும் போது இடுப்பில் ஒட்டியாணம் கட்டினால் அந்த கம்பீரமே தனி. குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்கள் உங்கள் பாரம்பரிய தோற்றத்தை பல மடங்கு உயர்த்தி காட்டும். இறுதியாக, பெண்கள் நடந்து வரும்போது மெல்லிய இசையை எழுப்பும் கொலுசுகள் எப்போதுமே எவர்கிரீன் ஃபேஷன்தான். பிளாக் மெட்டல் அல்லது சலங்கை வைத்த வெள்ளிக் கொலுசுகள் கால்களுக்கு ஒரு வசீகரத்தைக் கொடுக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சிவபெருமான் அணியும் 10 அணிகலன்கள் கூறும் வாழ்வியல் தத்துவங்கள்!
must-have-fashion-accessories

நாம் அணியும் ஆடைக்கு எந்த நகை பொருத்தமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, அளவாகவும் நேர்த்தியாகவும் அணிவதில்தான் உண்மையான அழகு அடங்கியுள்ளது. ஆடம்பரமான விலையுயர்ந்த நகைகள்தான் உங்களை அழகாகக் காட்டும் என்பது ஒரு மாயை. சரியான நிறம் மற்றும் டிசைன்களைத் தேர்ந்தெடுத்தால், சாதாரண கவரிங் நகைகள் கூட உங்களை ஒரு சிறந்த ஃபேஷன் ஐகானாக மாற்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com