
மெலிதாகவும் (ஒல்லியாகவும்), உயரமாகவும் தோற்றமளிக்க சரியான உடைகளை தேர்ந்தெடுப்பதும், காலணிகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதும், பெல்ட் மற்றும் ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்துவதும் மிகவும் அவசியம். நாம் அணியும் உடைகளில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்வது நம்மை அழகாக தோற்றமளிக்க உதவும்.
செங்குத்து கோடுகளை உடைய ஆடைகளை பயன்படுத்துவது:
செங்குத்தான கோடுகளை உடைய உடைகளை தேர்வு செய்து அணிவது நம்மை மெலிதாகவும் உயரமாகவும் காட்ட உதவும். உதாரணத்திற்கு நேரான கோடுகளை உடைய பேண்ட்கள் மற்றும் நீளமான கோடுகளை உடைய ஜாக்கெட்களை அணிவது, அதுவும் ஒரே நேரத்தில் அணிவது மெல்லியதான மற்றும் உயரமான தோற்றத்தை கொடுக்கும்.
சட்டையின் காலர்களை உயரமாக வைத்து, ஜிப்பர்களை முழுவதுமாக மூடுவது போன்ற சின்ன சின்ன மாற்றங்களைக் கூட செய்யலாம்.
காலணிகள்:
ஸ்னீக்கர்கள் அல்லது தட்டையான பாதங்கள் கொண்ட காலணிகள் அணிவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை நம்மை குட்டையாகவும், பருமனாகவும் காட்டும். நேர்த்தியான ஷூக்களை தேர்ந்தெடுத்து அவற்றை மெல்லிதான ஜீன்ஸுடன் இணைத்து போட நன்றாக இருக்கும். ஷூக்கள் நம் கால்களை உயரமாக காட்ட உதவும்.
சற்று உயரமான குதிகால்களை உடைய ஷூக்கள் மற்றும் செருப்புகள் நம்மை உயரமாக காட்ட உதவும். ஆனால் அதிக உயரமான குதிகால்களை உடைய செருப்பை அணிவது காலில் வலியை உண்டாக்குவதுடன் வசதியாகவும் இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்லிம் ஃபிட் உடைகளை தேர்வு செய்வது:
ஸ்லிம் ஃபிட் உடைகள் நம்மை உயரமாகவும் மெலிதாகவும் காட்ட உதவும். ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அல்லது சிகரெட் பேண்ட் பார்வைக்கு கால்களின் நீளத்தை அதிகம் போல் காட்டும் தோற்றம் கொண்டவை. சட்டைகளை பொருத்தவரை ஸ்லிம் ஃபிட் சட்டைகளை தேர்ந்தெடுத்து அவற்றை உள்ளே இழுத்து இன் செய்து அணிவது நல்ல தோற்றத்தைத் தரும். சட்டையை வெளியேவிட்டால் ஒரு பேக்கி தோற்றத்தை கொடுக்கும். இதனால் குட்டையாக தெரிவோம். எனவே ஸ்லிம் ஃபிட் உடைகளை தேர்வு செய்து அணிவது நம்மை மெல்லிதாகவும், உயரமாகவும் காட்டும்.
உடலுக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்வது:
அதிக தளர்வான அல்லது அதிக இறுக்கமான உடைகள் நம்மை குட்டையாகவும், குண்டாகவும் காட்டும். எனவே உடைகளை தேர்வு செய்யும் பொழுது நம் உடலுக்குப் பொருத்தமான அளவில் உள்ள உடைகளை தேர்ந்தெடுத்து அணிவது அவசியம். பருத்தி அல்லது லினன் போன்ற துணிகள் நம்மை உயரமாக காட்ட உதவும்.
லைட் வாஷ் ஜீன்ஸை காட்டிலும் டார்க் வாஷ் ஜீன்ஸ் நம்மை மெலிதாகக் காட்டும். வி வடிவ கழுத்து டாப்ஸ் நம்மை உயரமாகவும், மெலிதாகவும் காட்ட உதவும்.
அணியும் பெல்ட் மற்றும் ஹேர் ஸ்டைலில் கவனம்:
பட்டையான பெல்ட்களை தவிர்த்து மெல்லிய பெல்ட் அணிவது நம்மை உயரமாக காட்ட உதவும். கனமான ஹேர் ஸ்டைல்களை தவிர்ப்பது நம்மை குட்டையாக காட்டுவதை தவிர்க்க உதவும். போனிடெயில் போடுவது, முடியைப் பின்னாமல் ஃப்ரீ ஹேரில் இருப்பது போன்றவை நம்மை உயரமாக காட்ட உதவும்.