
ஜப்பானியப் பெண்கள் ஐம்பது வயதைக் கடந்த பின்னும் முதுமைத் தோற்றம் பெறாமல், சுருக்கம் இல்லா சருமம் மற்றும் வசீகரமான முக அழகுடன் திகழ்வதற்கு தினமும் அவர்கள் தம் அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிப்பதற்குப் பயன்படுத்தும் பத்து வகை ஜப்பானிய மூலிகைகளே காரணம் என்று தெரிகிறது. அந்த மூலிகைகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.
1.ஷிசோ (Shiso-Perilla Leaf): இந்த மூலிகை இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை சூரியக்கதிர்களால் சருமத்தில் உண்டாகும் ஆரோக்கியக் குறைபாடுகளைத் தடுக்கவும், சருமத்தில் முன் கூட்டியே உண்டாகும் சுருக்கங்களைத் தவிர்க்கவும் உதவி புரிகின்றன.
2.மாட்சா (Green Tea powder): இந்தப் பவுடரில் உள்ள அதிகளவு கேட்டசின்ஸ், சருமத்திலுள்ள நச்சுக்களையும் வீக்கங்களையும் நீக்கவும், கொல்லாஜென் உற்பத்தியைப் பெருக்கவும் சிறந்த முறையில் உதவுகின்றன.
3.கோம்பு (Kelp): இது ஒரு கடற்பாசி வகையை சார்ந்த மூலிகை. இதில் அயோடின் சத்து மற்றும் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் சருமத்தின் உறுதித்தன்மை குறையாமல் பாதுகாக்கவும் உதவும் பல்வேறு கனிமச்சத்துக்களும் உள்ளன. இவை உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன் வகைகளின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவி புரிகின்றன.
4.யோமோகி (Yomogi-Japanese Mugwort): 'குணப்படுத்தும் மூலிகை' என அழைக்கப்படும் இச்செடி, எரிச்சலுள்ள சருமப் பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து எரிச்சல் உண்டாக்கும் கிருமிகளை இயற்கை முறையில் வெளியேற்ற உதவுகிறது.
5.குட்ஸு (Kudzu Root): சருமப் பராமரிப்பில், சருமத்தில் உள்ள துவாரங்கள் இறுக்கமுறவும், சருமத்தில் நீட்சித் தன்மை மேம்படவும் இந்த மூலிகை பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் சருமம் மென்மையும், இளமைத் தன்மையும் பெறுகிறது.
6.உமே (Japanese Plum): இதில் நிறைந்துள்ள சிட்ரிக் ஆசிட், செல்கள் புத்துயிர் பெறவும், மந்தமான தோற்றம் கொண்ட சருமம் பள பளப்புப் பெறவும் உதவுகிறது. இளமைத் தோற்றம் நீடிக்க உதவும் டானிக் என இப்பழத்தைக் கூறலாம்.
7.கோபோ (Burdock Root): இது நச்சுக்களை நீக்க உதவும் மூலிகை. இரத்தத்தை சுத்திகரிக்கவும் பருக்களை நீக்கவும் உதவும்.
8.சான்ஷோ (Japanese Pepper): இரத்த ஓட்டம் மேம்படவும், மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும் உதவி புரியும். இது மறைமுகமாக சரும வீக்கங்கள் நீங்கி, சருமம் புதுப் பொலிவுபெற உதவுகிறது.
9.ஆஜீரு (Aojiru-Barley Grass): இது க்ளோரோஃபில் அதிகம் நிறைந்துள்ள ஒரு சூப்பர் உணவு. இது உடலுக்குள் உள்ள அனைத்து நச்சுக்கள் நீங்கவும், சோர்வுற்ற சருமம் புத்துயிர் பெறவும் உதவுகிறது. மேலும், வயதான தோற்றம் பெறச் செய்யும் செயல்பாடுகள் தாமதமாக நடைபெறவும் உதவி புரியும்.
10.அஷிட்டபா (Ashitaba-Tomorrow's Leaf): செல்களுக்கு புத்துயிர் தரக்கூடிய இலைகள் இவை. சோர்வுற்ற சரும செல்களுக்கு புத்துயிர் கொடுக்கவும், நிறமியின் செயல்பாட்டை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் சிறந்த முறையில் உதவி புரியும்.