ஆசிய நாடுகளில் உள்ள கலச்சாரம் சார்ந்த உணவுகளுக்கும், உடைகளுக்கும் உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் உண்டு. ஆசிய கலாச்சார உடைகளின் தனித்துவமான ஸ்டைல் மற்றும் ஆடைகளின் வடிவமைப்பு அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை அழகாக பறைசாற்றுவதாக அமைந்திருக்கும். வெளிநாடுகளில் இருந்து ஆசிய நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் அந்தந்த நாட்டினுடைய கலாச்சார உடையை அணிந்து பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அந்த உடைகளை அணியும் போது தானும் அந்த நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்றும் நபராக உணர்வார்கள். இத்தகைய உணர்வை கட்டாயம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டும். ஆசிய நாடுகளில் கலாச்சாரம் சார்ந்த உடைகள் அதிகமாக இருந்தாலும் அவற்றில் குறிப்பிட்ட 5 அழகிய ஆடைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கிமோனோ, ஜப்பானின் கலாச்சாரம் சார்ந்த உடையாகும். இது ஜப்பானின் தேசிய உடையாக அணியப்படுகிறது. இந்த ஆடை பார்ப்பதற்கு போர்த்தப்பட்டது போல நீண்ட கைகளைக் கொண்டிருக்கும். இது பொதுவாக சோரி செருப்புகள் மற்றும் டேபி சாக்ஸுடன் சேர்த்து அணியப்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கென்று வெவ்வேறு விதமான கிமோனோக்கள் இருக்கின்றன. இந்த ஆடை அணிவதற்கு சற்று கடினமானதாக கருதப்படுகிறது. இந்த ஆடையை முறையாக அணியும் விதத்தை 'கிட்சுகே' என்று சொல்கிறார்கள். தற்போது ஜப்பானியர்கள் இந்த கிமோனோ ஆடைகளை அரிதாகவே அணிகிறார்கள். இறுதி சடங்கு, திருமணம், பட்டமளிப்பு விழா போன்றவற்றிற்கு அணிந்திருப்பதை காண முடியும்.
கொரிய மக்களின் பாரம்பரியமான உடையை Hanbok என்று அழைக்கிறார்கள். இந்த உடையை தென்கொரியர்கள் Hanbok என்றும் வட கொரியர்கள் chosonot என்றும் அழைக்கிறார்கள். பல காலமாக கொரியர்கள் வெள்ளை நிறத்தில் Hanbok அணிய விருப்பப்பட்டார்கள். இது பார்ப்பதற்கு தூய்மையாகவும் சூரியன் மற்றும் ஒளியை பிரதிபலிக்கும் சின்னமாகவும் இருந்தது. சாதாரண மக்களுக்கு வண்ணமயமான Hanbok அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. Hanbok உடையை Joseon காலக்கட்டத்தில் உயர்ந்த பண்புடையவர், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கு அணிந்துக் கொண்டனர். தற்போது திருமணம், பிறந்தநாள், விடுமுறை போன்ற தினங்களில் hanbok அதிகமாக அணியப்படுகிறது.
சீனர்களின் பாரம்பரிய உடையாக Hanfu கருதப்படுகிறது. இந்த உடையின் தனித்துவமான டிசைன்கள் ஒவ்வொரு வம்சாவளியை குறிக்கிறது. பொதுவாக Hanfu பெரிய கைகள், சிக்கலான டிசைன்களையும், தொங்கும் அங்கியை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். Hanfu ஆடை 4000 வருடங்கள் பழமையான ஆடையாக Han வம்சாவளியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. முக்கிய நாட்கள், திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் இந்த பாரம்பரிய உடை அணியப்படுகிறது.
இந்தியாவின் பாரம்பரியமாக உடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. பல மடிப்புகளைக் கொண்டு அழகாக கட்டப்படும் புடவை இந்திய பெண்களுக்கு தனி அழகை சேர்க்கும். பங்களாதேஷ், நேபால், பாகிஸ்தான், ஸ்ரீலங்காவிலும் புடவை உடுத்தப்படுகிறது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கட்டாயம் பட்டினால் ஆன புடவைகள் இடம் பிடித்திருக்கும். காஞ்சிவரம் பட்டுப்புடவை, பன்னாரஸ் புடவை, சிக்கன்காரி புடவை என்று பலவகை புடவைகள் உள்ளன. ஆண்கள் குர்தா மற்றும் வேஸ்டி சட்டைகளை பாரம்பரிய உடைகளாக அணிகிறார்கள்.
வியட்நாமின் தேசிய உடையாக கருதப்படுவது தான் Ao dai ஆகும். இது நீளமான அங்கியை போன்ற அமைப்பைக் கொண்டு பட்டு அல்லது காட்டனில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பெண்கள் இந்த உடையை அணியும் போது நளினமாகவும், அழகாகவும் இருக்கும். தினமும் அணிவதற்கு பருத்தியாலான Ao dai உடையும், புதுவருடம் போன்ற பண்டிகைகளுக்கு மிகவும் விலை உயர்ந்த துணியில் செய்யப்பட்ட Ao dai ஐ அணிவார்கள். சிகப்பு நிறம் அதிர்ஷ்டத்தை குறிப்பதால் பண்டிகை காலங்களில் சிகப்பு நிற Ao dai அணிய விரும்புவார்கள். வெள்ளை நிறம் தூய்மையை குறிப்பதால் மாணவர்களின் சீருடையாக Ao dai பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்திலான Ao dai ராஜ குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாகும். கருப்பு நிறம் இறுதி சடங்கின் போது பயன்படுத்தப்படும்.