
குழந்தைகளிடம் நாம் எதை சொன்னாலும் அதை உடனேயே கற்பனை செய்து பார்க்கக்கூடிய திறன் கொண்டவர்கள். குழந்தைகளுக்கு நாம் கதை சொல்லும் போது அவர்களின் அறிவுத்திறன் வளர்க்கிறது. இவ்வாறு நாம் குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்ப்பதால் என்ன பயன் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்ப்பது பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்குமான உறவை மேம்படுத்துகிறது. தற்போது இருக்கும் அவசர உலகத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து பேசக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதனால் குழந்தைகளுடனான நெருக்கம் குறைகிறது.இதை சரிசெய்வதற்கு குழந்தைகளுக்கு தினமும் ஒரு கதை சொல்வதன் மூலமாக அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
2. குழந்தைகளுக்கு நீதிக்கதையும், தன்னம்பிக்கை கதை, வரலாற்றுக் கதை போன்ற கதைகளை சொல்லி வளர்க்கும் போது அவர்களின் உள்ளத்தில் தன்னம்பிக்கை வளர்கிறது. அவர்களும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலை பெறுகிறார்கள். வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் எதிர்க்கொள்ளும் தைரியம் பிறக்கிறது.
3. குழந்தைகள் நல்ல கதைகளை கேட்கும் போது அவர்களிடத்திலே நல்லொழுக்கம் வளர்கிறது. கதையில் சொல்லக்கூடிய கருத்துக்கள் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றது. இதனால் அவர்கள் ஒழுக்கம் மிகுந்தவர்களாக வளர்வார்கள்.
4. கதையின் சொல்லப்படும், பேசப்படும் புதிய சொற்களையும் அதன் அர்த்தத்தையும் நன்றாக தெரிந்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு சொல் அறிவு வளர்கிறது.
5.குழந்தைகள் கதைகளை கேட்பதால் அதில் உள்ள கருத்துகளை புரிந்துக் கொள்ளும் புரிதல் அவர்களிடம் அதிகரிக்கிறது. ஏன், எதற்கு என்ற கேள்விகளை கேட்கிறார்கள். இதனால் குழந்தைகளின் ஆர்வம் தூண்டப்படுகிறது. அவர்களின் புரிதல் திறனும் அதிகரிக்கிறது.
6. கதைகள் வழியாக குழந்தைகள் கலாச்சாரத்தை அறிந்துக் கொள்கிறார்கள். பல நாட்டுக் கதைகளைக் கேட்பதன் மூலமாக குழந்தைகள் பல நாட்டினுடைய கலாச்சாரத்தை அறிந்துக் கொள்கிறார்கள். இது, குழந்தைகளுக்கு எல்லா விதமான மக்களையும் பழக்க வழக்கங்களையும் புரிந்துக்கொண்டு வளர உதவியாக இருக்கிறது.
குழந்தைகளின் வயதுக்கேற்ப அவர்களுக்கு கதைகள் சொல்வது அவர்களின் புரிதல், அறிவுத்திறனை வளர்க்க மிகவும் உதவும்.
குழந்தைகளுக்கு எளிமையான கதைகளை முதலில் சொல்வது சிறந்தது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கற்பனை, அறிவுசார்ந்த கதைகளை சொல்லலாம்.
உதாரணத்திற்கு காகமும், குடமும் என்ற கதையை சொல்லலாம். தாகமாக இருந்த காகம் ஒன்று அங்கிருந்த குடத்தில் இருந்த நீரை அருந்த முடியாமல் தவிக்கிறது. பிறகு காகம் சிறிய கற்களை குடத்தில் போட்டு நீரை மேலே கொண்டு வந்துக் குடிக்கிறது. இந்த கதையின் மூலமாக குழந்தைகள் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை கற்றுக்கொள்வார்கள்.
3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு கற்பனை கதைகள், விலங்குகள் பற்றி கதைகள் சொல்லும் போது ஆர்வத்துடன் கேட்பார்கள்.
6 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள் அறிவியல், வரலாற்றுக் கதைகளை விரும்புகிறார்கள்.
9 வயது முதல் 12 வயது உள்ள குழந்தைகள் மர்ம கதைகள், புத்திசாலித்தனமான கதைகள் போன்றவற்றை கேட்க விரும்புகிறார்கள்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது மட்டுமில்லாமல் அவர்களுடன் கலந்துரையாடுவது மிகவும் அவசியமாகும். இதனால் அவர்களுக்கு கதை நன்றாக புரிவதோடு கற்பனைத்திறனும் மேம்படுகிறது.