60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

Beauty care...
Beauty care...Image credit - pixabay.com

-தொகுப்பு: நான்சி மலர்

ந்தப் பதிவில் அறுபது வயதிற்கு மேல் சருமம் முதிர்ச்சியடைவதைப் பற்றியும் அதற்கான பராமரிப்பு டிப்ஸ் பற்றியும் பார்க்கப் போகிறோம்.

சரும முதிர்ச்சிக்கான அடையாளங்கள்

அறுபது வயதிற்கு மேல் நமது சருமத்தின் மேல் அடுக்கு (outer layer) மிகவும் மெலிதாகிவிடும்.   பழைய செல்கள் போய் புதிதாக செல்கள் உருவாவது குறைந்து, இறந்த செல்கள் சருமத்தின் மீதே படிந்துவிடும். சருமத்தின் மேல் லேயரான Epidermis பேப்பர் போன்று ஆகிவிடும். அதனால்தான் சரும சுருக்கம், கோடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. அதனால் இந்த வயதிலும் நம்முடைய சருமத்திற்கு அதிகப்படியான அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும்.

மெனோபாஸிற்குப் பிறகு சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மை குறைந்துவிடும். கொலோஜன் உற்பத்தியும் குறைவதால் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையும் குறையும். அதனால் சருமத்தில் கோடுகள் மற்றும் நிறமாற்றங்கள் (பிக்மெண்டேஷன்) வரும். அதை ஏஜ் ஸ்பாட்ஸ் (Age spots) என்றும் கூறுவார்கள்.

அழகு கலை நிபுணர் வசுந்தரா
அழகு கலை நிபுணர் வசுந்தரா
Visible difference
Visible difference

சிறுவயதில் வெயிலில் அதிகம் இருந்திருந்தால் வயதாகும்போது அந்த ஸ்பாட்ஸ் தெரிய ஆரம்பிக்கும். தாடைகளில் சருமம் தொய்வடைந்திருப்பதைக் காண முடியும். முன்பு ‘கொழு கொழு’ வென்று இருந்த முகம் இப்போது சற்று குழி விழுந்ததுபோல மாறியிருக்கும்.

அறுபது வயதில் சருமம் மெலிதாகும், நெகிழ்ச்சித்தன்மை குறையும். சிலருக்குச் சருமம் மிகவும் சிவந்துபோகும். சின்னதாக ஏதேனும் காயம்பட்டாலும் ஆறுவதற்கு நேரம் எடுக்கும். காற்று, வெயில் போன்றவற்றிற்கு அதிக சென்சிட்டிவாக இருக்கும். புது செல்கள் உற்பத்தி ஆவது குறையும். இதனால் பயப்படத் தேவையில்லை. அதற்கேற்ற சிகிச்சைகள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்தலாம்.

60+ சரும பராமரிப்புக்கு என்னென்ன செய்யலாம்?

முதலில் Cleanse பண்ண வேண்டும். வெறும் சோப்பையும், தண்ணீரையும் வைத்து குளிக்கும்போது செய்யும் கிளென்சிங் போதாது. கடைகளில் கிளென்சர் கிரீம் போன்றவற்றை வாங்கி கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் பயன்படுத்த வேண்டும். அடுத்து, ஈரப்பதமுள்ள நல்ல மாய்ஷ்டரைசரை (Moisturiser) வாங்கி பயன்படுத்தலாம். SPF கலந்த மாய்ஸ்டரைசராக இருந்தால் நல்லது. இரவில் கிரீம்களும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!
Beauty care...

இப்போது, நல்ல கிரீம்கள் ஸ்பெஷலான மூலப் பொருட்களைக்கொண்டு வருகின்றன. ரெட்டினால் (Retinol), ஆல்பா ஹைட்ராக்சி ஆசிட் (Alpha hydroxy acid), கொலாஜென் (Collagen) போன்றவை சேர்ந்த மாய்ஸ்டரைசர்கள் நல்ல பலன் தரும்.

கண்டிப்பாக வெயிலில் போகும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் சருமம் சேதமாகும். அதனால் ஏற்படும் பாதிப்பு  நமக்கு சிறிது நாட்கள் கழித்தே தெரியும்.

அறுபது வயதில் வாரத்திற்கு ஒருமுறையாவது எக்ஸ்பாலியேட் செய்யலாம். மைல்டாக இருக்கும் எக்ஸ்பாலியேட் கிரீமை வைத்து செய்வது சிறந்ததாகும். இப்போதெல்லாம் நிறைய சீரம்ஸ் (Serums) வந்துவிட்டன. அதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அந்த சீரம்களை காலையிலோ அல்லது இரவிலோ பயன்படுத்தலாம். விட்டமின் சி சீரம், நையாசினமைட், ரெட்டினால் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். அடிக்கடி பார்லர் போக முடியவில்லையென்றாலும் இப்படி செய்துகொள்வது நல்ல பலனைத் தரும்.

சருமத்திற்கான கிரீம்களை வாங்கும்போது விட்டமின் சி, விட்டமின் ஈ போன்றவை இருப்பதுபோல வாங்குவது சிறந்தது. எப்படி நம் உடலுக்கு ஊட்டச்சத்து முக்கியமோ அதேபோல சருமத்திற்கும் ஊட்டச்சத்துள்ள பொருட்கள் என்பது மிகவும் அவசியமாகும்.  விட்டமின் சி சருமத்தில் நன்றாக செயல்பட்டு பிக்மெண்டேஷனைக் குறைக்கும், விட்டமின் ஈ சருமத்தில் செயல்பட்டு வயதாகும் தன்மையைக் குறைக்கும். நையாசினமைட் சருமத்திற்குச் சரியான நிறத்தைக் கொடுக்கும். இதுபோன்று நன்றாக செயல்படக்கூடிய மூலக்கூறு உள்ள கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது நல்ல பயனைத் தரும்.

முக்கியமாக கண்களை சுற்றித்தான் அதிகமாக கோடுகள், சுருக்கங்கள் இருப்பதைக் காண முடியும். முன்பெல்லாம் 45 வயதிற்கு மேலேதான் இதுபோன்ற சுருக்கத்தைக் காணமுடியும். ஆனால், இப்போதெல்லாம்
20 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கே சுருக்கங்கள் வருகிறது. கண்களை அதிகமாக பயன்படுத்துவதே இதற்குக் காரணம். லேப்டாப், ஃபோன் போன்றவற்றை அடிக்கடிப் பார்ப்பதால் கண்ணைச் சுற்றியுள்ள கொலாஜென் பாதிக்கப்பட்டு சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படுகிறது.

கண்களுக்கான கிரீமை தினமும் பயன்படுத்த வேண்டும். காலையிலும் பயன்படுத்தலாம்; இரவு நேரங்களில் பயன்படுத்தும் கிரீம்களும் உள்ளன.   கிரீம் போட்டு அதிகமாகத் தேய்க்க வேண்டாம். மென்மையாக போட்டுவிட்டால் போதுமானது.  ரெட்டினால், விட்டமின் சி போன்றவை கலந்த கண்களுக்கான கிரீம்களும் உள்ளன. அதை வாங்கி பயன்படுத்தலாம்.

நீங்கள் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று நினைக்கையில், வெள்ளரிக்காய்சாறு, உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை எடுத்து கண்களை சுற்றி தடவிக்கொள்ளலாம். இதனால் கண்களை சுற்றியுள்ள கருவளையம் குறையும். தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை கண்ணை சுற்றி தடவி மசாஜ் செய்து விட்டுவிடலாம். கால்களை சற்று மேலே தூக்கி வைத்து தலை சற்று  கீழே வருவது போல படுத்துக் கொண்டால் ரத்த ஓட்டம் கண்களுக்கு நன்றாக வரும். இது கண்களில் உள்ள சோர்வைக் குறைக்கும். வெளியிலே போகும்போது 100 சதவீதம் UV Protection உள்ளதுபோல சன் கிளாசஸ் பயன்படுத்துவது நல்லதாகும். இரவு 8 மணி நேரம் தூங்க முடிந்தால் நல்லது. அப்படியில்லை யென்றால் மதியம் ஒரு மணி நேரம் குட்டி தூக்கம் போடுவது சிறந்தது.

ஆயில் மசாஜ்
ஆயில் மசாஜ் Image credit - pixabay.com

அறுபது வயதில் அவ்வப்போது ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம். சூடான எண்ணெய் மசாஜ் மற்றும் ஹேர் மசாஜ்கூட செய்துகொள்ளலாம். காலுக்கு ரிப்லக்ஸ் மசாஜ் செய்துகொள்ளலாம். இதுபோன்ற சிகிச்சைகளை பார்லர்களில் சென்று செய்துகொள்வது சிறப்பு. முழு உடலுக்குமே ஆயுர்வேதிக் சென்டர் போன்ற இடங்களுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். மூட்டு வலி போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

வயதாகிவிட்டது, வாழ்க்கையில் பிடிப்பேயில்லை என்று நினைப்பவர்கள் தங்களை நன்றாக பார்த்துக்கொள்ள இதுபோன்ற சிகிச்சை, சரும பராமரிப்பைச் செய்து கொள்ளலாம். இதை உடலுக்காக மட்டுமே செய்துகொள்ளாமல், மனதிற்காகவும் சேர்த்தே செய்யவேண்டும். இதனால் உடல் மற்றும் மனதிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். சிலசமயங்களில் யாரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும் என்று நினைக்கும்போது கூட பார்லர் அதற்கு சிறந்த இடமாக இருக்கும். நாம் பேசுவதைக் கேட்பதற்கு யாராவது இருந்தாலே அது பெரிய மனநிம்மதியை கொடுக்கும்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com