
முகத்தில் பருக்கள், குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் தோன்றுவதற்கு முக்கியமாக 7 வகையான காரணங்கள் கூறப்படுகின்றன. அவை யாவை என்பதை சற்று விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
1.பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS): பாலிஸிஸ்டிக் ஓவரியில் ஆன்ட்ரோஜென்ஸ் என்ற ஹார்மோன், அதிகமாக சுரப்பதால் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் செபம் (Sebum) எனப்படும் சரும மெழுகை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. இதனால் சரும துவாரங்கள் அடைபட்டு பருக்கள் உண்டாக காரணமகின்றன.
2. மெனோபாஸ் (Menopause): மெனோபாஸ் காலத்தில் பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பில் குறைபாடு உண்டாகும். இதனால் ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்டோஸ்டெரான் ஹார்மோன்களின் விகிதத்தில் வேறுபாடு உண்டாகும். இதனால் அவர்களின் தாடையோரப் பகுதிகளில் பருக்கள் உண்டாவது வழக்கமாகிறது.
3.ஹார்மோன் சுரப்பில் வேறுபாடு: பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களிலும், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் ஹார்மோன் சுரப்பில் ஏற்றத் தாழ்வு உண்டாவது சகஜம். அப்போது சருமத்தில் எண்ணெய்ப் பசையின் உற்பத்தி அதிகரிக்கும். இதன் காரணமாகவும் பருக்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
4. கருத்தடை மாத்திரைகள்: பெண்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது அவை ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தவும் உதவும். சில வகை மாத்திரைகள் பக்கவிளைவாக பருக்கள் உண்டாகச் செய்வதும் வழக்கம்.
5. மன அழுத்தம்: பெண்கள் மன அழுத்தத்திற்கு உட்படும்போது கார்ட்டிசோல் ஹார்மோன் சுரப்பு மற்றும் சருமத்தின் அடியில் உள்ள சரும மெழுகின் உற்பத்தி அளவும் அதிகரிக்கும். இதனால் பருக்கள் உண்டாகி வெளிவருவது இயல்பு.
6.சரும பராமரிப்பு சாதனங்கள்: சில வகை சரும பராமரிப்பு சாதனங்கள், எண்ணெய்ப்பசை கொண்ட காமெடோஜெனிக் என்ற கூட்டுப்பொருள் சேர்த்து தயாரிக்கப்படுவதுண்டு. இது சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை அடைத்து, பருக்கள் உருவாகி வெளிவரக் காரணமாகும்.
7. டயட்: அதிகளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட பால் பொருட்கள் உபயோகித்து தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும், உடலில் வீக்கங்களை உண்டாக்கவும் செய்யவும். இதன் காரணமாகவும் பருக்கள் உண்டாகும் வாய்ப்புண்டு.
உணவியல் மற்றும் வாழ்வியலில் சில மாற்றங்களைப் பின்பற்றி பருக்களின் வரவை குறைக்க முயலலாம்.