
பெண்களுக்கு ஏற்ற அழகிய குர்த்திகள் ஏராளம் உண்டு. சில வகையான குர்த்திகள் எப்போதும் விரும்பப்படும் வகையில் ஸ்டைலாக, ஃபேஷனபிளாக இருக்கும். அந்த வகையில் ஏ - லைன் குர்த்திகளுக்கு தனி இடம் உண்டு. அதன் சிறப்புகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏ- லைன் குர்த்தி செட்டுகளின் வடிமமைப்பு;
ஏ- லைன் குர்த்தி செட்டுகள் இடுப்புக்கு மேல் வரை உடலுக்குப் ஃபிட்டாக இருந்து பின்பு படிப்படியாக ஓரத்தை நோக்கி விரிந்து, ஆங்கில A வடிவத்தை உருவாக்குகிறது. இதனால் இதை அணியும் பெண்களுக்கு அழகான, பொருத்தமானத் தோற்றத்தை தருகிறது. இதனால் பெண்கள் அதிகம் இதை விரும்பி அணிகிறார்கள்.
ஏ- லைன் குர்த்தி செட்டுகள் பருத்தி, ரேயான், பட்டு மற்றும் கிரேப் உள்ளிட்ட பல்வேறு துணி வகைகளில் டிசைன் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை அணிந்து கொள்ள மிகவும் சௌகரியமாக இருக்கிறது.
இவற்றில் பெரும்பாலும் எளிமையான வட்டக் கழுத்து, வி வடிவக் கழுத்து, போட் நேக் எனப்படும் படகு வடிவக் கழுத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கும். குட்டையான அல்லது நீண்ட ஸ்லீவ்களைக் கொண்டிருக்கும்.
பல ஏ லைன் குர்த்தி செட்டுகளில் எம்ராய்டரி டிசைன்கள், விதவிதமான பிரிண்ட்கள் மற்றும் பிற அலங்காரங்கள் உள்ளன. அவை கூடுதல் நேர்த்தியையும் நுட்பத்தையும் சேர்க்கின்றன.
இந்த வகை குர்த்திகள் முழங்கால் வரை நீளம் மற்றும் பாதம் வரைக்கும் உள்ள நீளத்திலும் கிடைக்கின்றன.
ஏ லைன் குர்தி செட்ட அணிவதால் உண்டாகும் நன்மைகள்;
இதம் மற்றும் வசதி;
இவை பெரும்பாலும் பருத்தி, பட்டு அல்லது ஷிபான் போன்ற இலகு ரக துணிகளால் தயாரிக்கப்படுவதால் இவற்றை நாள் முழுவதும் அணிந்தாலும் உடலுக்கு இதமாக சௌகரியமாக இருக்கிறது.
தினசரிப் பயன்பாடு;
இவற்றை தினசரி உபயோகத்திற்கும், அலுவலகம் செல்லும் போதும் பயன்படுத்தலாம். லெக்கின்ஸ், ஜீன்ஸ், பலாஸ்ஸோ பாண்டுகள் அல்லது ஸ்கர்ட்களை மேட்சாக அணிந்து கொள்ளலாம்.
அனைத்து உடலமைப்புக்கும் பொருத்தம்;
இடுப்பிலிருந்து உருவாகும் ஏ போன்ற வடிவம் பெரும்பான்மையான உடல் அமைப்பு கொண்ட பெண்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. ஒல்லியான பெண்கள் முதல் பருமனான பெண்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
கலாச்சார முக்கியத்துவம்;
இந்த வகை குர்தி செட்டுகள் இந்திய கலாச்சார பாரம்பரியத்தையும் கைவினைத் திறனையும் வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. அதேபோல நவீன ஃபேஷனுக்கு ஏற்ற வகையிலும் பாரம்பரியத்துடன், நவீன டிசைன்களை இணைந்தும் உருவாக்கப்படுகிறது. பழமையும் புதுமையும் கலந்த அழகியதோர் தோற்றம் தருகிறது.
எல்லாக் கால நிலைகளுக்கும் பொருத்தம்;
இவை எல்லா வகையான கால நிலைகளுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. பருத்தியால் ஆன ஏர் லைன் குர்திகள் கோடைகாலத்தில் அணிவதற்கும் பட்டு அல்லது கனமான துணிகளால் செய்யப்பட்ட குர்த்திகள் குளிர் கால மாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும். பாந்தினி, ரேயான் மற்றும் பிளாக் பிரிண்ட்கள் உட்பட பல்வேறு வகையான பிராண்டுகளில் இவை கிடைக்கின்றன. இவற்றை விசேஷமான தினங்களில் அணிந்து கொள்ளலாம். அதேபோல சாதாரண நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல் சுற்றுலா செல்வதற்கும் மற்றும் விசேஷங்களுக்கும் அணிந்து கொள்ளலாம்.