
தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டி அத்துண்டுகளை முகம், கழுத்து, கை, பாதம் பகுதிகளில் தேய்த்து, அரைமணி நேரம் ஊறவைத்து பின் பயத்தம்மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் ப்ளீச் தோற்றுப்போகும்.
பழுத்த பப்பாளி பழத்துண்டில் ஒன்றை எடுத்து முகம், கழுத்து,பாதப்பகுதிகளில் தேய்த்து, கடலைமாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வறண்ட தோலும் மினு மினுக்கும்.
இளம் நரையைத் தடுக்க உணவில் பச்சைக் காய்கறிகள், பழவகைகளை நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள்.
வெள்ளரித் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் சாற்றினை முகம் முழுவதும், குறிப்பாக கண்களின் அடிப்பகுதிகளில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்து கடலைமாவு கொண்டு கழுவினால் கரும்புள்ளிகள், தேமல் மறையும்.
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் சமயத்தில் சீகைக்காய் பொடியுடன் ஒரு கரண்டி புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் தலைமுடி மிருதுவாக இருப்பதுடன், தயிர் சிறந்த கன்டீஷனரும் கூட.
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றை சம அளவாக எடுத்துச்சேர்த்து அரைத்து, இந்த விழுதைத்தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு கொட்டிப்போய்விடும்.
குளிர், பனிக்காலங்களில் குளித்தவுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் ஒரு சொட்டு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு குழைத்து, கை, முகம், கழுத்து போன்ற இடங்களில் தடவி விடுங்கள். இதனால் நாள் முழுவதும் தோல் பளபளப்பாக இருப்பதோடு உடம்பில் வறட்டுத்தன்மையும் இருக்காது.
முகம் வறண்டு பளபளப்பின்றி இருக்க தோலுக்குரிய சத்துக்கள் குறைவதே காரணமாகும். எனவே தோலுக்கு சக்தியளிக்கக் கூடிய காய்கறிகள், முட்டை, பால், கீரை வகைகள் ஆகியவகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாரம் ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில், கருவேப்பிலை அரைத்து உருண்டையளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
கோரைக் கிழங்கை வாங்கி, அம்மியில் அரைத்து, குளிக்கும்போது உடலில் பூசிக் குளித்தால், தேவையில்லாத பகுதியில் வளரும் உரோமம் உதிரும். கை, கால்கள் மழமழவென்று பளபளப்பாக இருக்கும்.
காய்ந்த எலுமிச்சைகளைத் துண்டாக்கி தோல்களை மிக்ஸியில் போட்டுத் தூளாக்கிக் கொள்ளவும். முகம் கழுவுவதற்கு பத்து நிமிடம் முன் இப்பொடியை சிறிதளவு எடுத்து பாலுடன் குழப்பி ஊறிய பின் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
வாரம் இரண்டு முறை தேங்காயை அரைத்தெடுத்த பாலைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும், செம்பட்டை நிறம் மாறும்.