
நம் முன்னோர்கள் சொல்லி பின்பற்றப்பட்டவைகளில் ஒன்று தலையில் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து ஊறவைத்து சீயக்காய் தேய்த்து குளிப்பது. இப்போது அது மறந்து போன ஒன்றாகி விட்டது. அதோடு தலைக்கு எண்ணெய் வைப்பதையும் மறந்து விட்டனர் பலர். சீயக்காய் போயே போச்சு! ஷாம்பு கொடிகட்டி பறக்குது! இதில் ஷாம்பு போட்டு குளிக்கும் போது செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்:
1. கடினமாக தேய்க்கக் கூடாது
தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் போது மென்மையாக தேய்த்து குளிக்க வேண்டும். சீக்கிரம் குளிக்க வேண்டும் என்கிற அவசரத்தில் தலைமுடி ரோமக்கால்களில் கடினமாக தேய்க்கும் போது முடி வெவ்வேறு திசையில் நகர்வதால் முடி உடையும். இது முடியை சேதப்படுத்தி முடி உதிர்விக்க வழி வகுக்கும். அதே போல் குளித்த பின் தலையை துவட்டும் போதும் மென்மையான துண்டை உபயோகித்து லேசாக துவட்டி எடுக்க வேண்டும். இதனால் முடி சேதமடையாது.
2. அதிகமாக ஷாம்பூ பயன்படுத்த கூடாது
பெரும்பாலானவர்கள் தலைக்கு குளிக்கும் போது அதிகமாக ஷாம்பு பயன்படுத்துவார்கள். தலையில் அதிக அளவில் ஷாம்பு போட்டு தேய்த்து குளிப்பதை வழக்கமாக செய்வதால் தலையில் உள்ள மேற்பரப்பில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை இது அழிக்கும். இதனால் முடி பாதிப்படையும்; வறட்சியையும் ஏற்படுத்தும்.
3. கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பது
பலர் ஷாம்பு பயன்படுத்தி குளித்த பின் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவது இல்லை. ஹேர் கண்டிஷனர் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. இதனால் தான் முடி உதிர்வு ஏற்படுகிறது. கண்டிஷனர் உபயோகித்தால், கூந்தலில் ஏற்படும் வறட்சியையும் முடி உதிர்வையும் குறைக்கும்.
4. குளித்தபின் முடியில் சீப்பை பயன்படுத்தக்கூடாது
பெண்கள் பெரும்பாலும் வீட்டில் வேலை முடித்து குளித்த பின் வெளியில் செல்லவோ, அலுவலகத்திற்கோ கிளம்புவார்கள் கிளம்பும் போது அவசரமாக ஈரமாக இருக்கும் தலையில் நேரடியாக சீப்பு பயன்படுத்தி தலைமுடி ஈரமாக இருக்கும் போது சீவுவார்கள். இதனால் முடி உடையும் தன்மையை கொண்டதாக இருக்கும். இப்போது சீப்பை பயன்படுத்துவது முடி உதிர்வை ஏற்படுத்தும். முடிந்தவரை பெரிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்தி சீவலாம். முடியின் நுனிப்பகுதியில் தொடங்கி மேற்பகுதி வரை மிக மென்மையாக பயன்படுத்தி சீவ வேண்டும். இதனால் முடி உதிராது.
5. சூடான நீரில் குளிக்க கூடாது.
சூடான நீரில் குளிப்பதை சிலர் பழக்கமாக வைத்திருப்பார்கள். அதே பழக்கத்தில் தலைக்கும் சுடுதண்ணீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் முடியின் மயிர் கால்களில் உள்ள பி.எச் அளவை பாதிக்கும். தலையில் பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனைகள் ஏற்படும். முடிந்தவரை குளிக்கும் தண்ணீர் அறையின் வெப்ப நிலையில் இருப்பது நல்லது. மிதமான வெப்ப நிலையில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். தலை முடி காய ஹேர் டிரையர் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை வெப்பநிலையை அதிகப்படியாக இல்லாமல் அளவாக வைத்து ஹேர் ட்ரை பண்ண வேண்டும். இதனால் முடி உதிர்வை தடுக்கலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.