
வாரன் பஃபெட் அவர்கள் மதிப்பு சார்ந்த முதலீட்டு முறையைப் (value investing) பின்பற்றுகிறார். அவரைப் பொறுத்தவரை தங்கமானது பின்வரும் காரணங்களால் நல்ல முதலீடு அல்ல.
தங்க முதலீடு வளராது - எவ்வளவு வருடங்கள் ஆனாலும் தங்கத்தின் அளவு அதிகரிக்கப் போவதில்லை. இதற்கு மாறாக, பங்குகளின் அளவு கூட வாய்ப்பு உண்டு.
தங்க முதலீடு பணத்தை ஈட்டி தராது - தங்கத்திலிருந்து அவ்வப்போது பணத்தைப் பெற முடியாது. கடன் பத்திரங்கள் வட்டிகளைக் கொடுக்கும். நிறுவனங்கள் அவ்வப்போது ஈவுத் தொகை கொடுக்கும்.
தங்கமானது உபயோகமான பொருள் அல்ல - தங்கத்தினால் சில தொழிற்சாலை சார்ந்த உபயோகங்கள் இருப்பினும், அதேபோன்ற உபயோகங்களைக் குறைந்த விலையில் வெள்ளியின் மூலம் பெற முடியும் என்பதனால் தங்கமானது உபயோகமான பொருள் அல்ல.
தங்கத்தைப் பாதுகாக்க செலவாகும் - தங்கத்தைப் பாதுகாக்க காப்பீடு, இடம் தேவைப்படும். தங்கத்தை பத்திரமாக வைத்திருப்பதற்கு நாம் செலவழிக்க வேண்டியுள்ளது.
அடுத்த ஐந்து வருடங்களில் தங்கத்தினைக் குறித்த கேள்விக்கு வாரன் பஃபெட் பின்வருமாறு கருத்தைத் தெரிவிக்கிறார்.
"தங்கம் எப்படி இருக்கும் என்று எனக்குக் கருத்து கிடையாது. ஆனால் , உங்களைப் பார்ப்பதைத் தவிர , இப்போதைக்கும் அப்போதைக்கும் இடையே தங்கம் வேறு ஒன்றும் செய்யாது என்று என்னால் சொல்ல முடியும். கோக்க கோலா பணம் சம்பாதிக்கும் என்று உங்களுக்குத் தெரியும். நான் வெல்ஸ் பார்கோ நிறைய பணம் சம்பாதிக்கும் என்று நினைக்கிறேன். காப்பீட்டினையும், இடத்தையும், மற்றும் சிலவற்றையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வாத்தினை விட, முட்டைகளை இடும் வாத்தினை வைத்திருப்பதென்பது மிகவும் சிறப்பானது."
"I have no views as to where it will be, but the one thing I can tell you is it won't do anything between now and then except look at you. Whereas, you know, Coca-Cola (NYSE:KO) will be making money, and I think Wells Fargo (NYSE:WFC) will be making a lot of money and there will be a lot - and it's a lot - it's a lot better to have a goose that keeps laying eggs than a goose that just sits there and eats insurance and storage and a few things like that.
வாரன் பஃபெட் போடும் தங்க முதலீட்டுக் கணக்கு:
உலகத்தில் உள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு 7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். அதற்கு சமமாக அமெரிக்காவில் உள்ள மொத்த பண்ணை நிலங்களையும் ஏழு எக்ஸான்மொபில் நிறுவனங்களையும் வாங்கினாலும் கூட மீதி ஒரு டிரில்லியன் அமெரிக்கன் டாலர்கள் பாக்கியிருக்கும்.
என்னிடம் உலகத்தில் உள்ள மொத்த தங்கமான 67 அடி கன சதுர தங்கத்தை ஒரு புறம் வைத்து, மற்றொரு புறம் அமெரிக்காவின் மொத்த பண்ணை நிலங்களையும் ஆறு எக்ஸான் மொபில் நிறுவனங்களையும், பாக்கி ஒரு டிரில்லியன் டாலர் பணத்தையும் வைத்தால் நான் பண்ணை நிலங்களையும் எக்ஸான்மொபில் நிறுவனங்களையுமே தேர்ந்தெடுப்பேன் என்கிறார்.
வாரன் பஃபெட் விலை உயர்ந்த உலோகங்களின் முதலீட்டிற்கு எதிரானவர் அல்ல. அவர் வெள்ளியில் ஒரு பில்லியன் டாலருக்கு பணத்தை முதலீடு செய்துள்ளார். வெள்ளியில் எண்ணற்ற பயன்பாடுகள் உள்ளதால் அதில் அவர் முதலீடு செய்துள்ளார். வெள்ளியானது மருத்துவத் துறை, தொழிற்சாலைகள், மின்னணுவியல் துறை என பல்வேறு துறைகளில் முக்கிய பங்காற்றுகிறது.
இத்தகைய காரணங்களினால் வாரன் பஃபெட் தங்கத்தின் முதலீட்டிற்கு எதிராக உள்ளார்.