சருமம் பளபளக்க வீட்டிலேயே எளிதில் செய்யலாம் குளியல் பொடி!

Bath Powder
Bath Powder
Published on

அறிவியல் சாதனங்கள் பெருகி விட்டாலும் அதற்கேற்றார் போல வசதிகளுடன் நாகரிகங்கள் வளர்ந்து நமது அன்றாட பழக்கங்களிலும் சில மாறுதல்களை தந்திருப்பது உண்மைதான். அன்று ஆற்றங்கரையில் நிதானமாக குளித்தது போய் அதன் பின் வீடுகளில் அமைத்த குளியல் அறையில் சோப்பு போட்டு  5 நிமிடம் 10 நிமிடம் என்று குளித்தார்கள்.


இப்போது உள்ள காலகட்டத்தில் காலை வேளையில் அவசர அவசரமாக எழுந்து இரண்டே நிமிடங்கள் மட்டும் உடலில் தண்ணீர் ஊற்றி அவசரமாக  குளித்தோம் என்று பெயர் பண்ணிவிட்டு உடனடியாக உடல் மீது ஒரு நறுமணத்தை பூசிக்கொண்டு அலுவலகம் அல்லது வெளியே செல்வது இயல்பாகிவிட்டது .
     

இது குறித்து ஒரு மருத்துவர் கூறும் போது தன்னிடம் வந்த ஒரு பெண் தைராய்டு மற்றும் பிசிஓடி இருப்பதால் தான் தனது கழுத்து மற்றும் உடல் பகுதிகள் கருமையாக மாறிவிட்டது என சொன்னதாகவும் இல்லை நீங்கள் சரியாக தேய்த்துக் குளிக்கிறீர்களா என்று கேட்டு அதற்குரிய வழிமுறைகளை சொல்லி ஒரு மாதம் கழித்து வாருங்கள் என்று சொன்னதாகவும் அப்போது வந்த அந்த பெண்ணிடம் 60% முன்னேற்றம் அதாவது சருமத்தில் கருமைகள் மறைந்து  பளபளப்பு உண்டானதும் குறிப்பிட்டிருந்தார்.
     

இதுதான் உண்மை. பலரும் தங்கள் சரும கருமைக்கு காரணம் பலவித நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு புறம் இருந்தாலும் நமது சருமத்தை சரியாக பராமரிக்காததாலும் இன்னும் குறிப்பாக சரியாக தேய்த்து குளிக்காததாலும் இது போன்ற கருமை நிறம் படிய வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்
      

இதை தவிர்ப்பதற்காக வீட்டிலேயே பல இயற்கை இயற்கைப் பொருட்கள் கலந்த குளியல் பொடியை சிரமம் பாராமல் செய்து வைத்து அதை தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் போல ஊறவைத்து பின் பீர்க்கங்காய் நார் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)கொண்டு நன்கு தேய்த்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாக மாறும் இது உறுதி என்கின்றனர் அழகுக்கலை வல்லுநர்களும் .
   

சரி எளிதாக செய்யக்கூடிய பளபளப்பான சருமத்திற்கான குளியல் பவுடர் குளியல் பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.  இது இயற்கையான பொருட்களால் தயாரிப்பதால் அனைத்து வகை சருமத்திற்கும் மென்மையானது.

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்

  • கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்

  • முல்தானி மிட்டி (Multani Mitti) – 2 டேபிள் ஸ்பூன்

  • பச்சை பயிறு மாவு – 2 டேபிள் ஸ்பூன்

  • ரோஜா இதழ்கள் பொடி – 1 சிறிய கப்

செய்முறை:


கடலை மாவு சலித்து மற்ற அனைத்துப் பொடிகளையும் ஒரு சுத்தமான பாத்திரத்தில் நன்கு கலந்து
நன்றாக கலக்கி காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். அனைத்து பொருட்களும் பிரெஷாக இருப்பது அவசியம்.

குளிக்கும் நேரத்தில் தண்ணீர் படாமல் தூய்மையான கரண்டியால் 2–3 ஸ்பூன் பவுடரை எடுத்து தண்ணீர், பால்
அல்லது ரோஸ் வாட்டர் கலந்து மை போன்ற தளர்வான பேஸ்ட் செய்யவும். இதை முகம் மற்றும் உடலில் பூசி 2–3 நிமிடம் விட்டு நன்றாக தேய்த்து கழுவவும். நீங்கள் கழுவும் போதே அழுக்குகள் கரைந்து போவதை காணலாம். 

இதனால் சருமம் இயற்கையாக பளபளப்பாகும். சருமத்தில் படிந்த தூசி, அதிகப்படியான எண்ணெய் போன்றவை நீங்கும். கருமைகள் குறையும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வு தரும்,
குளிர்ச்சி, மென்மை கிடைக்கும். இதை வாரத்தில்  3–4 முறை பயன்படுத்தலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
மிகவும் உலர்ந்த சருமம் என்றால் பால் அல்லது தயிர் கலந்து பயன்படுத்தவும். குறிப்பாக புதிய பொருட்களை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. கைகளால் தேய்த்துக் கழுவுவதை விட  இயற்கையான நார்க்கூடுகளால் தேய்த்தால் சருமம் மசாஜ் செய்வதற்கும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com