
ஆண்களை விடவும் பெண்கள் சருமப் பாதுகாப்பு மற்றும் முக அழகுக்கு அதிக அக்கறைக் காட்டுவார்கள். இதற்காக பலவிதமான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதும், அடிக்கடி அழகு நிலையங்களுக்குச் செல்வதும் வழக்கம். சாதாரண நாட்களிலேயே அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், திருமண நாட்களில் அதிக பொலிவுடன் இருக்கவே ஆசைப்படுவார்கள். இதற்காக பல அழகுக் குறிப்புகளைக் பின்பற்றுவார்கள். ஆனால் திருமணம் நெருங்கும் நேரத்தில் அழகு சார்ந்த சருமப் பராமரிப்பு விஷயத்தில் பெண்கள் எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.
பெண்கள் பொதுவாக ஒருசில குறிப்பிட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி வருவார்கள். இருப்பினும் நண்பர்கள் மற்றும் அழகு நிலையங்களின் பரிந்துரைப்படியும் அழகு சாதனப் பொருட்களை மாற்றுவார்கள். இது சாதாரண நாட்களில் நடந்தால் பரவாயில்லை. திருமண நேரத்தில் புதிதாக ஒரு அழகு சாதனப் பொருளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறான செயல். இது உங்கள் சருமத்தில் முகப்பருக்களை உண்டாக்கி விடும்.
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்கு சில மாதங்கள் அவகாசம் இருக்கும். அவ்வகையில் அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு முன்பே சருமப் பராமரிப்பைத் தொடங்கி விட வேண்டும். ஒருவேளை நாட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாவது சருமப் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் முகத்தில் துளைகள் மற்றும் முகப்பருக்கள் இருந்தால், சரும மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை மேற்கொண்ட பிறகே சருமப் பராமரிப்பைத் தொடங்க வேண்டும். முகத்தில் இருக்கும் பிரச்சினையை சரி செய்யாமல், சருமப் பராமரிப்பைத் தொடங்குவது, சருமத்தில் சிக்கலை ஏற்படுத்தி விடும்.
திருமணத்திற்கு குறைந்த நாட்களே இருக்கும் சூழலில் புதிதாக எந்த கிரீமையும் வாங்கி, சுயமாகப் பயன்படுத்த வேண்டாம். அதோடு அடிக்கடி அழகு நிலையத்திற்குச் செல்வதையும் தவிர்த்திடுங்கள்.
சீரான அளவில் தண்ணீர் குடிப்பதும், ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் நல்லது. அதே நேரத்தில் சருமத்தில் அலர்ஜியை உண்டாக்கும் சில உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
நல்ல தூக்கம் முகத்தை மறுமலர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். திருமண நேரத்தில் மன அழுத்தமும், பதற்றமும் ஏற்படுவது இயல்பு தான். அதற்காக தூக்கத்தை தவிர்ப்பது உங்களை களைப்படையச் செய்து விடும். இது முகத்திலும் எதிரொலிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஹைட்ரோ ஃபேசியல் செய்து கொள்ளலாம். கெமிக்கல் பீலிங் செய்து கொண்ட பெண்கள் மஞ்சள், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கிரீம்களை முகத்தில் பூசுவதைத் தவிர்த்து விட வேண்டும்.
ஸ்டீராய்டு பயன்படுத்தப்பட்ட கிரீம்களை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. இதனைப் பயன்படுத்தினால் அப்போதைக்கு முகம் பளிச்சென இருக்கும். ஆனால், சில நாட்களுக்குப் பின் சருமத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
தங்களை அழகாக காட்டிக் கொள்ள நினைக்கும் பெண்கள், அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. ஏனெனில் சில போலியான அழகு சாதனப் பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. ஆகையால் விழிப்புடன் இருந்து, ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.