
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் அழகு சாதனப் பொருள்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். நகர மக்களை ஒப்பிடும் போது, கிராமத்திலும் தற்போது அழகு சாதனப் பொருள்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நம் வாழ்வியலோடு கலந்து விட்ட இவற்றை வாங்கும் போது நாம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் சந்தையில் போலியான அழகு சாதனப் பொருள்களும் விற்பனைக்கு உள்ளன. இந்நிலையில் நீங்கள் வாங்கும் அழகு சாதனப் பொருள்கள் போலியானதா இல்லையா என்பதைக் கண்டறிய சில குறிப்புகளை இப்போது உங்களுக்கு வழங்குகிறோம்.
ஒவ்வொருவரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள நினைக்கும் எண்ணத்தால் தான், இன்று அழகு சாதனங்கள் அனைத்து வீடுகளிலும் நிரம்பியுள்ளன. நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமாவதால், இதன் சந்தை தற்போதைய காலத்தில் பெருமளவு விரிவடைந்துள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில போலியான நிறுவனங்கள், பிரபலமான பிராண்டுகளின் பெயரில் அழகு சாதனப் பொருள்களை விற்கத் தொடங்கி விட்டன. பொதுமக்களும் எது போலி, எது உண்மை என அறியாமல் வாங்கி விடுகின்றனர். சில குறிப்புகளைக் கொண்டு போலியான அழகு சாதனப் பொருள்களை நம்மால் மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
விலையைப் புரிந்து கொள்ளுங்கள்:
பிரபலமான பிராண்டுகளின் அழகு சாதனப் பொருள்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். இந்தப் பொருள்கள் சந்தையில் விலை குறைவாக கிடைத்தால் அது போலி என்பதை புரிந்து கொள்ளலாம். இவை உங்களுக்கு லாபகரமானதாக இருந்தாலும், தோலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
பேக்கேஜ் சரிபார்ப்பு:
உயர்தரமான அழகு சாதனங்களின் பேக்கேஜ் மற்றும் லேபிள்கள், நுகர்வோரை ஈர்க்கும் வகையில் அருமையாக இருக்கும். ஆனால், போலியான நிறுவனங்களின் பேக்கேஜ்கள் தரக்குறைவாகவே இருக்கும். மேலும் இதில் அச்சிடப்பட்ட வாசகங்கள் மங்கலாகவும், எழுத்துப் பிழையுடனும் இருக்கும். இதை வைத்தும் போலியான அழகு பொருள்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
மூலப்பொருள் சரிபார்ப்பு:
பிராண்டட் அழகு சாதனப் பொருள்களில், பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்களின் அளவு பட்டியலிடப்பட்டிருக்கும். அசல் தயாரிப்புகளில் பெரும்பாலும் நாம் அறிந்திருக்கும் உண்மையான பொருள்கள் தான் பயன்படுத்தப்படும். போலியான தயாரிப்புகளில் மூலப்பொருள்களின் பட்டியலைப் பார்த்தால், அதில் பொதுவான பொருள்கள் தான் இருக்கும். சிலவற்றில் இந்தப் பட்டியலே இருக்காது.
முத்திரை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு:
தலைமுடி மற்றும் சருமப் பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் தோல் மருத்துவர் சங்கத்தின் அங்கீகாரம் பெற்று, முத்திரையுடன் விற்பனைக்கு வரும். மேலும் தயாரிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வலைதள முகவரியில் சான்றிதழை சரிபார்த்துக் கொள்ளலாம். ஆனால், போலியான தயாரிப்புகளில் இதுபோன்ற முத்திரைகள் இருக்காது.
விமர்சனங்கள்:
ஆன்லைனில் அழகு சாதனப் பொருள்களை வாங்கினால், அப்பொருள்கள் குறித்த நுகர்வோரின் விமர்சனங்களை சரிபார்ப்பது அவசியமாகும். இந்த விமர்சனங்கள் நல்லவையாக உங்களுக்கு போதுமானதாக இருந்தால் மட்டுமே அப்பொருளை வாங்க வேண்டும். எதிர்மறை விமர்சனங்கள் இருந்தால், அப்பொருளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நேரடியாக சந்தையில் வாங்க நினைத்தால், முன்கூட்டியே அப்பொருளைப் பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்து விட்டு வாங்கலாம்.
இன்றைய உலகம் செயற்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால் போலியானவற்றை பணம் கொடுத்து வாங்கி நம் உடலைக் கெடுத்துக் கொள்ளாமல், விழிப்புடன் இருங்கள்.