
பொதுவாக மழைக்காலத்தில் சீதோஷ்ணம் குளுமையாக இருக்கும். வெயில் ‘சுள்’ என்று’ சுடாவிட்டாலும் புற ஊதா கதிர்கள் மேகங்கள் வழியாக ஊடுருவி நம் தோலையும் முகத்தையும் பாதிக்கவே செய்யும். மழைக்காலத்திலும் நம் தோலை பாதுகாப்பது மிக மிக அவசியம். பின்வரும் அழகு குறிப்புகளைப் பார்ப்போம்.
1. வெளியில் கிளம்புவதற்கு முன்பு தரமான சன் ஸ்கிரீன் லோஷனை முகம், கழுத்து கைகளுக்கு அப்ளை செய்து கொள்ளலாம். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து மறக்காமல் முகத்தையும் கைகளையும் சோப்பு போட்டு கழுவி விடுவது மிக மிக அவசியம். பலரும் அப்படி செய்ய மறந்துவிடுவதால் குளுமையான க்ளைமேட்டிலும் தேகம் கறுப்பாகி விடுகிறது. மேலும் லோஷனால் பக்க விளைவுகள் உண்டாகும்.
2. விளம்பரங்களில் காட்டப்படும் வாசனை மிகுந்த சோப்பு போடக்கூடாது. கெமிக்கல் அதிகம் இல்லாத சோப்பு முகத்திற்கு ஒரே ஒரு தடவை மட்டும் தான் போட வேண்டும். இல்லை என்றால் முகத்தில் வெயில் ஆழமாக இறங்கி முகத்தை கருக்கச் செய்யும். முகத்திலும், உடலிலும் சோப்புப் போடும்போது பாத்திரம் தேய்ப்பது போல அழுத்தி தேய்க்காமல், மென்மையாக போட வேண்டும்.
3. முகம் கழுவிய பின்பும் குளித்த பின்பும் மெல்லிய துண்டால் ஈரத்தை ஒற்றி எடுக்க வேண்டும். பரபரவென தேய்க்கக் கூடாது.
4. மழைக்காலத்தில் இரவு மட்டும் மாய்ஸரைசர் கிரீம் போடலாம். நிறைய பேர் பகலில் போட்டுக் கொண்டு செல்கிறார்கள். இதனால் தோல் மிகவும் கருப்பாகும். அதேபோல கை கால்களுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிக் கொண்டு வெளியில் சென்றாலும் தேகம் முகமும் கருக்கும். குளிப்பதற்கு முன் இவற்றை தடவி 15 நிமிடம் கழித்து குளித்து விட வேண்டும் .
5. விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஆரஞ்சு சாத்துக்குடி இவற்றில் ஏதாவது ஒன்றை அவசியம் சாப்பிட வேண்டும். சமச்சீர் உணவுகள், பழங்கள் காய்கறி களையும் எடுத்துக் கொள்வது அவசியம். அதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விட்டமின்கள், தோலை மிகவும் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்து சுற்றுப்புற சூழலில் இருந்து பாதுகாக்கும்.
6. மழைக்காலத்தில் பலரும் செய்யும் தவறு போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது தான். நமக்கு தாகம் எடுக்காதது போல தோன்றும். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடித்து நம் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது அவசியம். இதனால் உங்கள் தோல் பளபளப்பாக இருக்கும்.
7.மழைக்காலங்களில் முகத்தில் உருவாகும் சீபம், எண்ணெய் பசையுடன் வைத்து முகப்பருக்களை உண்டாக்கும். அதனால் பேக்கரி உணவுகள், எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்க்கலாம்.
8.மழைக்காலத்தில் உடலை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்துக் கொள்வது மிக அவசியம். ஈரப்பதத்துடன் இருந்தால் எளிதில் தொற்று உருவாகும். உடலில் வியர்க்கும் பகுதிகளான அக்குள் பகுதி, கால் விரல்களில் பூஞ்சை தொற்று உருவாகலாம். முகப்பவுடரோ ஆன்டிபங்கல் பவுடரோ போடலாம்.
9. அழுக்குக் கைகளால் முகத்தைத் தொடக்கூடாது. மிகவும் லேசான மேக்கப் போட்டால் போதும். அதிகமான மேக்கப் முகத்தில் உள்ள துளைகளை அடைத்துக் கொள்ளும். வீட்டிற்கு வந்ததும் மேக்கப்பை கலைப்பது அவசியம். இரவு தூங்கும் போது ஆன்டி ஏஜிங் க்ரீம் மட்டும் போடலாம்.
10. உடற்பயிற்சி, யோகா, வாக்கிங், ஏரோபிக்ஸ் என எதாவது ஒன்றை, நன்றாக உடல் வியர்க்கும் அளவு செய்வது அவசியம். இது உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றி, சருமத்துக்கு ரத்த ஓட்டம் தடையின்றி கிடைக்க செய்கிறது. இதனால் உடலும் தோலும் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும்இருக்கும்.