
அழகு என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்களுக்கும்தான். தெருவிற்கு ஒரு பியூட்டி பார்லர் போல் நவீன சலூன் கடைகளும் நிறைய வந்து விட்டது. ஆண்களும் இப்போதெல்லாம் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். விதவிதமான ஹேர் ஸ்டைல்கள், ஃபேஷியல், ட்ரெஸ்ஸிங் என்று தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள நிறைய மெனக்கிடுகிறார்கள்.
பெண்களுக்கு போட்டியாக இவர்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் களம் இறங்கி விட்டார்கள் என்றே சொல்லலாம். அழகுப் பொருட்கள் விற்பனையாகும் கடைகளில் முன்பு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ அந்த நிலை மாறி ஆண்களும் வந்து தங்களுக்கு தேவையானதை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. ஆண்கள் தங்களை அழகுடன் வைத்திருக்க எளிய குறிப்புகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம்.
முக பராமரிப்பு:
பொதுவாக ஆண்களின் சருமம் சிறிது கடினமானதாக இருக்கும். அதனை மிருதுவாக்க சந்தனப் பொடியுடன் சிறிது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
முகம் வறட்சியாக இருப்பவர்கள் சிறிது ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய சரும வறட்சி நீங்கும்.
பப்பாளிப் பழ ஃபேஷியல் சரும நிறத்தைக் கூட்டி வசீகரிக்கும் தோற்றத்தைக் கொடுக்கும். 2 துண்டு பப்பாளிப் பழத்தை மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவிட முகம் பொலிவு பெறும்.
வெயிலில் அதிகம் அலைவதால் ஏற்படும் கருமையை போக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், முன் கழுத்து மற்றும் பின் கழுத்து பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விட சருமத்தில் உள்ள கருமை நீங்கி பளிச்சிடும்.
சரும பராமரிப்பு:
சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பசையைப் போக்க தினமும் இரண்டு முறை முகத்தை லேசான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ சருமம் வறண்டு போகாமல் இருக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் எண்ணெய் சருமத்திற்கான ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.
வாரத்திற்கு ஒருமுறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது இறந்த சரும செல்களை நீக்க உதவும்.
ஈரப்பதமூட்டுதல்:
சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க தினமும் சருமத்தின் வகைக்கேற்ப மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனை வெளியே செல்லும் முன்பு பயன்படுத்துவது சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும்.
நீரேற்றமாக வைத்திருப்பது:
தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
மன அழுத்தத்தை குறைப்பதற்கு தியானம், யோகா போன்ற மன பயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம்.
தலைமுடி பராமரிப்பு:
அதிக அலைச்சல் காரணமாக வியர்வை, அழுக்கு, தூசி போன்றவை தலைமுடியில் படிந்து முடி உதிரக்கூடும். இதற்கு சிறிது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் மூன்றையும் சமஅளவு எடுத்து வெதுவெதுப்பாக சுட வைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர உடல் குளிர்ச்சி அடைவதுடன் முடி உதிர்வதும் குறையும்.
உணவு பழக்கங்கள்:
முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளவும். ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் ஆரோக்கியத்துடன் கூடிய அழகை தக்க வைத்துக் கொள்ள உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக அளவு சர்க்கரை, எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.
உடை தேர்வு:
ஸ்டைலிஷாக டிரஸ் பண்ணுவதை விட நமக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்து அணிவது சிறப்பு. ஆண்களுக்கு என்று சில நிறங்கள் மட்டும் ஒதுக்கி இருந்த காலம் போய் இன்று அனைத்து நிறங்களிலும் ஆடைகள் வந்துவிட்டன. நம் உடல்வாகிற்கு ஏற்ற நல்ல தோற்றத்தைக் கொடுக்கும், அதே சமயம் நம் உடல் அமைப்பிற்கும், நிறத்திற்கும் ஏற்ற வகையில் பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்து அணிவது நம்மை அழகுடன், மிடுக்காகவும் தோன்ற வைக்கும்.