
விலை உயர்ந்த க்ரீம், லோஷன் என செலவு பண்ணாமல் வீட்டில் இருக்கும் எளிய பொருளைக் கொண்டே நம் சரும எழிலை மேம்படுத்திக் கொள்ளலாம். பாலுடன் சில பொருட்களை சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளபளப்பாகவும் சுருக்கம் இன்றி மென்மையாகவும் இருக்கும்.
பால் மற்றும் ரோஸ் வாட்டர்
முகத்திற்கு பாலை பயன்படுத்தும் விதங்களில் இது மிகவும் சிறந்த முறை.பாலுடன் சிறிது ரோஸ் வாட்டர், முல்தானி மட்டி சேர்த்து கலந்து முகத்தில் தடவி பின் சிறிது மசாஜ் செய்து கழுவிட சருமத்தில் துளைகளில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்கி சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்று ஆக்கிவிடும்.
ஓட்ஸ் மற்றும் பால்
இது ஒரு ஸ்க்ரப் மற்றும் ஃபேஸ் கிளன்சர். உடனே சருமத்தை அழகாக்க வேண்டுமெனில் அதற்கு ஓட்ஸ் பவுடரும் பாலும் சேர்த்து குழைத்து , முகத்தில் தடவி 15நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் சரும பொலிவு கூடும்.
பால் மற்றும் தேன்
தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்டு.முகத்திற்கு தேவையான பொலிவை தந்து மெருகூட்டும். .தேனுடன் பாலை சேர்த்து முல்தானி பவுடர் கலந்து முகத்தில் தடவி சிறிது ஊறியதும் கழுவி வர நல்ல பொலிவு கிடைக்கும்.
பால் மற்றும் பப்பாளி
பப்பாளி பேஸ்ட்டுடன் சிறிது பாலை விட்டு நன்றாக கலந்து முகத்தில் தடவி ஊறியதும் கழுவி வர கரும்புள்ளிகள், தேமல் போன்றவை அகன்று சரும ஆரோக்கியம் மேம்படும். பப்பாளி சருமத் துளைகளில் இருக்கும் இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டதால் வாரம் ஒருமுறை உபயோகிக்க சரும நிறம் கூடும்.
கேரட் மற்றும் பால்
கேரட்டை பால் சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் சருமம் இறுக்கமடைவதுடன், ஈரப் பசையுடன் இருக்கும்.கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
கற்றாழை ஜெல் மற்றும் பால்
கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஆவாரம்பூ பொடியை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முக கருமை நீங்கும். மேனியை மிருதுவாக்கி, புத்துணர்ச்சியைத் தரும்.
கஸ்தூரி மஞ்சள் மற்றும் பால்
பாலுடன் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து அரைத்து பேக்காக முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறியதும் கழுவி வர முக பளபளப்பு அதிகரித்து சரும தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.
சந்தனம் மற்றும் பால்
பாலுடன் சந்தனத்தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முக அழகு கூடுவதுடன் வாசனையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.