
நம் உடல் அழகு 'பளிச்' சென்று வெளியில் தெரிய, நம் முகம், கழுத்து, முழங்கை, கணுக்கால் மற்றும் கை கால்களில் உள்ள சருமம் பள பளவென அப்பழுக்கின்றி தோற்றமளிப்பது அவசியம். இந்த மாதிரி சருமத்தைப் பராமரிக்க எல்லோராலும் எந்த நேரமும் முடியாது என்பதே உண்மை.
சிலருக்கு முழங்கை, முழங்கால் மற்றும் கணுக்கால் போன்ற இடங்களில் சருமம் கருமை நிறம் கொண்டு, தடிமனாகவும், திட்டுக்களாகவும் தோற்றமளிக்கும். சருமத்திற்கு நிறத்தை அளிக்கக் கூடிய மெலனின் என்ற பொருள் உடலில் அதிகம் உற்பத்தியாகும்போது இந்த நிற வேறுபாடு உண்டாகிறது. சில வகை மருந்துகள் உட்கொள்ளும்போதும் இவ்வாறு கருமை நிறம் தோன்ற வாய்ப்புண்டு எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு தோன்றிய கருமை நிறம் மற்றும் கருந்திட்டுக்கள் மறைய இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே சில எளிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். அது எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப் பதமாக்கி நிறமியைக் குறைக்க உதவும். இந்த ஜெல்லை தினமும் சருமத்தில் தடவி வரலாம்.
2.எலுமிச்சைசாறு: லெமன் ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் நிறமியின் அளவைக் குறைக்க உதவும். லெமன் ஜூஸை சருமத்தில் தடவி வைத்து 15 நிமிடத்தில் கழுவி விட வேண்டும். அதற்கும் மேல் வைத்திருந்தால் சருமம் எரிச்சலடைய ஆரம்பிக்கும்.
3.தயிர்: தயிரிலுள்ள லாக்ட்டிக் அமிலம் சருமத்தில் நிறமியின் அளவைக் குறைக்க உதவும். பாதிப்படைந்த இடங்களில் தயிரைத் தடவி வைத்து 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.
4.தேன்: தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தில் நிறமியின் அளவைக் குறைக்கவும் உதவும். தேனை கருமையுற்ற சருமத்தில் தடவி வைத்து 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.
5.மஞ்சள்: மஞ்சளில் குர்க்குமின் என்றதொரு ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. மஞ்சள் தூளை தயிர் அல்லது தேனுடன் சேர்த்துக் கலந்து கணுக்களில் உள்ள கருந்திட்டுக்கள் மீது தடவி வர சிறந்த பலன் கிடைக்கும்.
6.உருளைக் கிழங்கு: உருளைக் கிழங்கில் உள்ள கேட்டகாலேஸ் என்ற கூட்டுப் பொருள் சருமத்தில் நிறமியின் அளவைக் குறைக்க உதவும். உருளைக் கிழங்கை அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை கருமையடைந்த கணுக்கள் மீது தடவி வைத்து 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.
சருமத்தில் கருந்திட்டுக்கள் அதிகம் இருந்தால் எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation) என்னும் சரும மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை பிரித்து நீக்கும் முறையையும் கையாளலாம்.
1.லெமன் ஜூஸுடன் பேக்கிங் சோடா அல்லது ஓட் மீல் சேர்த்துப் பேஸ்ட்டாக்கி பாதிப்படைந்த இடங்களில் தடவி வைத்து 15-20 நிமிடம் கழித்து மெதுவாக பேஸ்ட்டை உரித்தெடுக்கலாம்.
2.வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் ஓட் மீல் மற்றும் புளித்த தயிர் சேர்த்துப் பேஸ்ட்டாக்கி கருந்திட்டுக்கள் மீது தடவி வைத்து அரைமணி நேரத்திற்குப் பின் பிரித்தெடுத்து விடலாம்.
தேனுடன் லெமன் ஜூஸ் கலந்து கருமையுற்ற சருமத்தின் மீது தினமும் பத்து நிமிடம் மசாஜ் செய்யலாம். பால் மற்றும் ரோஸ் வாட்டரைக் கலந்து அதில் க்ரீன் டீ இலைகளைப் போட்டு அந்த கலவையை பாதிப்படைந்த இடங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.
சூரிய ஒளிக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க கருமையுற்ற சருமத்தின் மீது SPF-30 போன்ற உயர்தர சன்ஸ்கிரீன் வாங்கி உபயோகிக்கலாம்.
இயற்கை முறை சிகிச்சையைப் பின்பற்ற ஆரம்பிக்கும் முன் பாதித்த ஒரு சிறிய பகுதியில் பொருட்களைத் தடவி ஒவ்வாமை டெஸ்ட் செய்த பின் தொடர்வது நலம்
இயற்கை முறை வீட்டு வைத்தியத்தில் பூரண நலம்பெற நாட்களாகும். இடைவெளியின்றி தொடர்ந்து பொறுமையுடன் செயல்படுவது ஆரோக்கியம்.