
கரும்புள்ளிகளுக்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.
அவற்றில் நார்ச்சத்து உள்ள உணவுகளும், சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொண்டால் கரும்புள்ளிகளை தவிர்க்கலாம் என்று பியூட்டிஷியன்கள் கூறுகின்றனர்.
அதற்கு எளிமையான வீட்டு சிகிச்சைகைளையும் சொல்கிறார்கள். அவை என்ன என்று பார்ப்போம்.
முருங்கை இலை சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, தேன் சிறிது கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். இப்படி சில நாட்கள் செய்து வரலாம்.
ஒரு தக்காளியும் ஒரு வெள்ளரிக்காயும் சமஅளவு எடுத்து கூழாக அரைத்து முகத்தில் பூசி கால்மணி நேரம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நாளடைவில் குறையும்.
முற்றிய வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் போட்டு அந்த நீராவியில் ஆவிபிடித்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
வெள்ளரிச்சாறு, புதினாச்சாறு எலுமிச்சம்பழச்சாறு மூன்றையும் சம அளவில் கலந்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி பத்து நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் நாளடைவில் மறையும்.
சந்தனத்தூள், மஞ்சள் தூள் சமஅளவு எடுத்து அதை பாலில் கலந்து பசை போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் தடவி சில நிமிடங்கள் காயவிட்டு பின் கழுவி வந்தால் காலப்போக்கில் கரும்புள்ளிகள் மறையும்.
பாதாம் பருப்பு ஊறவைத்து தோல் நீக்கி மையாக அரைத்து அதனுடன் தேனும், தயிரும் சமஅளவு கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழிவினால் கரும்புள்ளிகள் சிறிதுசிறிதாக மறையும்.
ஊறவைத்த பாதாம் பருப்புடன் ரோஜா இதழ் கலந்து அரைத்து இந்த பசையை முகத்தில் பூசி குளித்தாலும் கரும்புள்ளிகள் மறையும்.
வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் பூசி சில நிமிடங்கள் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.
பப்பாளி பழத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
முல்தானிமெட்டியுடன் வெள்ளரிசாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பேஸ் பேக் போல கனமாக போட்டு நன்றாக காயவிட்டு வெது வெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகளை நீக்கி மிக்க பலன் தரும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.