இந்த நவராத்திரி மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் இரவில் அதிக நேரம் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'தாண்டியா' மற்றும் 'கார்பா' போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆடை அலங்காரம், அணிகலன்களில் அதிக கவனம் செலுத்தி
அவற்றைத் தேர்ந்தெடுக்கவும், தலை அலங்காரம் மற்றும் மேக்-அப் போன்றவற்றிற்கும் அதிக நேரம் செலவிட வேண்டிவரும். உடல் சோர்வினால் நம் சருமத்தில் சில தவிர்க்க முடியாத கோளாறுகள் தோன்றும். அவை முகத்திலும் பிரதிபலிக்கும். இதற்கு நாம் பின் பற்ற வேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
முகம் ஜொலிப்புடன் தோற்றமளிக்க வேண்டிய நேரத்தில், விழா தங்கு தடையின்றி நூறு சதவிகிதம் சிறப்பாக நடைபெற வேண்டுமே என்ற கவலையிலும் ஸ்ட்ரெஸிலும் சருமத்தில் சோர்வின் அடையாளம் தென்படும். உலர் திட்டுக்கள், அதிகப்படியான எண்ணெய்ப் பசை, திடீர் வெடிப்பு, டல்னஸ் போன்ற கோளாறுகள் தோன்றும். இதற்காக பண்டிகை நேரங்களில் நம் சருமத்திற்கு கொஞ்சம் கூடுதல் டி.யல்.சி (Tender Love and Care) தர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
முதலாவதாக முகத்தில் படிந்து இருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு, மேக்-அப் கறை போன்றவற்றை கிளீன்சிங் பாம் (balm) உதவியால் சுத்தப்படுத்த வேண்டும். பின் தரமான சோப் போட்டு முகத்தைக் கழுவ வேண்டும். கழுவும்போது ரோஸ் வாட்டர், ஆலு வேரா மற்றும் ஊட்டச்சத்துக்கள் சேர்ந்த ஆயில் கலந்து கழுவினால் சருமத்தின் இயற்கைத் தன்மை குறையாமல் சமநிலையில் இருக்கும். மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை தினமும் முறையாக நீக்குவதும் அவசியம். இதற்கு மென்மையான தரமான ஃபுரூட் என்சைம், இயற்கையான களிமண் மற்றும் AHA (Alpha Hydroxy Acid) போன்றவற்றை உபயோகிப்பது சிறந்த பலனளிக்கும்.
சருமத்தை நன்கு சுத்தப்படுத்தியதும் அது தன் இயற்கையான சிம்பிள் தோற்றத்துடன் காணப்படும். இப்போது வெள்ளரிச்சாறு, ரோஸ் வாட்டர் ஆலுவேரா உபயோகித்து டோன் அப் (Tone up) செய்தால் சருமத்தில் உள்ள சிறு சிறு துவாரங்கள் அடைபடும். சருமத்திற்கு இதமான உணர்வும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். டோனர், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையையும், சிவந்த நிறத்தையும் சமன் செய்ய உதவி புரியும்.
ஹைலூரோனிக் (Hyaluronic) ஆசிட் அல்லது ஆல்மண்ட் ஆயில் மற்றும் அர்கன் (argan) ஆயில் போன்ற சருமத்திற்கு இதமளிக்கக் கூடிய பொருள்கள் அடங்கிய நீரேற்றம் தரும் கிரீம்களை உபயோகிப்பது சருமத்திற்கு தேவையான நீர்ச் சத்தை வளங்கும். இந்த முறை சருமத்தை மிருதுவாகவும் சற்றே உப்பலான தோற்றத்துடன் காணப்படவும் உதவும்.
பண்டிகைக் கால சீரியல் விளக்கு வெளிச்சத்தின் நடுவே உங்கள் முகம் பளிச்சென்று மின்னுவதற்கு எடுத்துக் கொண்ட படிப்படியான அழகு சேர்க்கும் வழி முறைகளில் கடைசியாக வருவது சீரம். முகம் பள பளப்பு பெற உதவும் வைட்டமின் C அல்லது ஹைலூரோனிக் ஆசிட் அல்லது சருமத்தின் ஃபைன் லைன்களை மறைக்க உதவும் ரெட்டினால் சீரம் போன்ற எதுவாயிருந்தாலும் சருமத்திற்கு அழகூட்டுவதில் சீரம் வகைகளின் பங்கு அளப்பரியது.
கொண்டாட்டங்களில் பங்கேற்று இரவில் வெகு நேரம் ஆன பின் கண்களுக்கு அடியில் கருவளையமும் கண்கள் சிறிது உப்பினாற் போன்றும் தோற்றம் தரும். இதற்கு வெள்ளரிசாறு அல்லது காஃபின் சேர்ந்த ஐ கிரீம் தடவினால் கருவளையம் மறையும்; உப்பின மாதிரி இருந்த கண்ணின் அடிப் பாகம் நார்மல் நிலைக்கு வந்துவிடும்.
புத்துணர்ச்சி பெற்ற தோற்றத்தோடு மீண்டும் பார்ட்டிகளில் கலந்து நடனத்தைத் தொடரலாம்.