
கோடை காலத்திலும், மற்ற எல்லா மாதங்களிலும் கூட, நம் உடலின் ஒட்டு மொத்த சருமத்தையும் பாதுகாத்துப் பராமரிக்க நாம் பல வழிகளில் முயற்சிக்கிறோம். உதாரணத்திற்கு, முகம் மற்றும் கை, கால்களில் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காதிருக்க, பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பூசிக் குளிக்கிறோம். அதிகளவு வெப்பத்தின் காரணமாக வேர்குரு தோன்றும்போது
சந்தனப் பவுடரை உடலில் பூசி சருமத்தைக் குளிர்விக்கிறோம். இவ்வகையில் நம் சரும ஆரோக்கியத்திற்கு பேபி பவுடர் எவ்வாரெல்லாம் உதவும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக பேபி பவுடர் சருமப் பரப்பில் இருக்கும் ஈரப்பசையை உறிஞ்சவும், உராய்வைக் குறைப்பதற்கும் சிறந்த முறையில் உதவி புரியும். இதனால் சரும எரிச்சல் நீங்கும். வியர்வையினால் தோலில் தங்கும் அதிகப்படியான ஈரம் மற்றும் பிசுபிசுப்பு பேபி பவுடர் போடும்போது உறிஞ்சப்பட்டுவிடுவதால் சருமம் நாள் முழுக்க உலர் தன்மையுற்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
இப்பவுடரின் மிருதுத்தன்மை தோலுக்கிடையில் உருவாகும் உரசலைத்தடுத்து மென்மையும் இதமும் கலந்த ஓர் உன்னதமான உணர்வைத்தரும். சருமத்தில் தங்கும் ஈரப்பசையை பேபி பவுடர் உறிஞ்சி விடுவதால், உடலிலிருந்து வெளியேறும் வியர்வை நாற்றம் நீங்கிவிடும். பேபி பவுடரில் கலந்திருக்கும் நறுமணம் நம் உடலையும் நாள் முழுக்க வாசனையுடன் வைத்திருக்க உதவும். பிசு பிசுப்பின்றி சருமம் உலர் நிலையில் இருக்கும்போது தோலில் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்க் கிருமிகள் தங்கும் வாய்ப்பு குறையும்.
சருமத்தில் உண்டாகும் சிறு தடிப்பு மற்றும் வீக்கங்களை குணமாக்கவும் பேபி பவுடர் உதவி புரியும். பெண்கள் பேபி பவுடரை தங்கள் உடலின் வியர்வை நாற்றம் நீங்கவும் அந்தரங்க உறுப்புகளின் ஆரோக்கியம் பேணவும் பயன்படுத்தலாம்.
ஆண், பெண் இரு பாலரும், குளித்த பின், முழங்கால், முழங்கை, கணுக்கால் போன்ற வறண்ட, கரடு முரடான திட்டுக்கள் உள்ள பகுதிகளில் பேபி பவுடரைப் போட்டு அழுத்தித் தேய்த்துவிட்டால் போகப் போக அந்த இடத்து சருமம் மென்மையடையும்.
டால்க் (talc) சேர்த்து தயாரிக்கப்பட்ட பவுடர் சரும ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. இதை முகர்வது கூட பிரச்னை உண்டு பண்ணும் என்பதால் இதை அறவே தவிர்த்து விடுவது நல்லது.
டால்க்கம் பவுடருக்குப் பதிலாக, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு அதே அளவு நன்மைகள் தரக்கூடிய வேறு வகை பேபி பவுடரை பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும். தீங்கிழைக்கக்கூடிய கூட்டுப்பொருட்கள் இல்லாத தரமான பேபி பவுடரை தேர்ந்தெடுத்து, அளவோடு உபயோகப்படுத்தும்போது சிறந்த நன்மைகளைப் பெறலாம்.