
என் தோழியின் மகளிடம் சில அழகு குறிப்புகளை கூறினால் இதெல்லாம் செய்தால் முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி வெள்ளையா ஆகிவிட முடியுமா ஆண்ட்டி என்றுதான் கேட்பார். அது போல் ஆக முடியாது என்றாலும், முகத்தில் ஒரு பொலிவு இருக்கும். இப்படிப்பட்ட முகத்தை எல்லோரும் விரும்புவது இயற்கைதானே. அதற்கான சில குறிப்புகள்தான் இது.
குங்குமப்பூ ஒரு சிட்டிகையுடன் அதிமதுரம் கலந்து எட்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு எடுத்து அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி முகம் தேஜஸ் உடன் விளங்கும்.
இரவில் தேவையான அளவு பாதாம் பருப்பை ஊறவைத்து மறுநாள் காலை அரைத்து பால் ஏட்டில் கலந்து முகம், கழுத்து, கை கால்களில் தடவி ஊறவைத்து குளித்தால் தோலின் நிறம் மாறும்.
கடல்பாசி ரெண்டு தேக்கரண்டி, பன்னீர் இரண்டு தேக்கரண்டி, சந்தன எண்ணெய் ரெண்டு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகம் கழுவி வர கருமை நிறம் மாறி சற்று வெளுத்த நிறம் தோன்றும்.
வெள்ளரிக்காய்ச்சாறு, பால் இரண்டையும் கலந்து உடல் முழுவதும் பூசி ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் உடல் பளபளப்படையும்.
உலர்ந்த மாங்கொட்டையை பொடி செய்து நீரில் குழைத்து கழுத்து மற்றும் இடுப்பில் மற்றும் முட்டிகள் போன்று எங்கெல்லாம் கருப்பாக இருக்கிறதோ அந்த இடங்களில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கருமை நிறம் மறைந்து தோல் மினுமினுப்பாக இருக்கும்.
இந்த சீசனில் தோல் வறட்சி அதிகமாக இருக்கிறது. அதற்கு ஒரு தேக்கரண்டி முட்டைக்கோஸ் சாறுடன் ஒரு தேக்கரண்டி ஈஸ்ட் மற்றும் தேன் இவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.
உலர்ந்த சருமம் உடையவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு எண்ணையை தடவி சரும வறட்சியைப் போக்கிக் கொள்ள வேண்டும் .இல்லையென்றால் அரிப்பு எடுக்கும். அதை சொரிந்து சொரிந்து புண்ணாக நேரிடும். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிது எலுமிச்சைசாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீக்கி முகம் பொலிவடையும்.
பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.
மசாஜ் செய்யும்போது மட்டும் இன்றி சாதாரண எப்பொழுது வேண்டுமானாலும் முகத்திற்கு பேக் போட்டுக் கொள்ளலாம். நீண்ட நேரம் பேக் போட்டு அப்படியே வைத்துக் கொள்ளாமல் 25 நிமிடத்திற்கு உள்ளாக முகத்தை கழுவி விடவேண்டும்.