
மல்லிகையின் மணமே மருந்துதான். மனக்கலக்கத்தை போக்கி புத்துணர்ச்சியைத் தரும் சக்தி மல்லிகையின் மணத்துக்கு உண்டு. சில அழகு பலன்களில் கை கொடுக்கும். மல்லிகையிலிருந்து கண் மை, மல்லிகை பவுடர், மல்லிகை தைலம், குளியல் பவுடர் தயாரிப்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அடிப்படையில் குளிர்ச்சியைத் தரும் தாவரமாக அறியப்படும் மல்லிகையின் இருந்து கண்மை தயாரிக்க :
ஒரு விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி, விளக்கின் பின்னால் இருக்கும் (கரி படியக்கூடிய பகுதி) ஸ்டாண்ட் பகுதியில், அரைத்து சுத்தமான சந்தனத்தை தடவவும். பிறகு விளக்கை ஏற்றி, ஸ்டான்ட் பகுதியில் கரி படிந்ததும் அந்தக் கரியை வழித்து ,அதில் மல்லிகைப்பூசாறு ஒரு டீஸ்பூன் விட்டு கலந்து கொள்ளவும். இதுதான் சுத்தமான நறுமணம் கொண்ட மை. இதை கண்களுக்கு இட்டு கொள்வதால் கண் குளிர்ச்சி பெறுவதோடு, பார்வையை பிரகாசமாக்கும்.
பிசுக்கு, பொடுகு, நுனி பிளவு போன்ற பிரச்னைகளுக்கு மல்லிகை எண்ணெய் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
உதிரி மல்லிகையை வாங்கி வெயிலில் உலர்த்தி அரைத்து கொள்ளவும். இந்த பவுடர் இரண்டு டீஸ்பூன், வெந்தயத்தூள் 2டீஸ்பூன் கலந்து தயிருடனோ, அரிசி கஞ்சியுடனோ சேர்த்து கலந்து தலைக்கு குளித்து வர மேற்கண்ட பிரச்னைகளை போக்குவதுடன் கூந்தலை மிருதுவாக்கி, செழிப்பாக வளரச்செய்யும்.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள், கால் கிலோ ந எண்ணையைக் காய்ச்சி, அதில் இரண்டு கப் ஃப்ரெஷ் மல்லிகைப் பூவைப் போட்டு வைக்கவும். இந்த ஊறிய எண்ணையை தலையில் தேய்த்து குளித்து வர தலை குளிர்ச்சியாக இருப்பதோடு, கூந்தலும் மணக்கும்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்சாகமூட்டும் மல்லிகை தைலமும், குளியல் பவுடர் தயாரிப்பதை தெரிந்து கொள்வோம்.
தைலம் தயாரிக்க
20கிராம் உலர்ந்த மல்லிகை பூவுடன் மனோரஞ்சிதம், ரோஜா, மகிழம்பூ, ஆவாரம்பூ இவற்றை தலா 10கிராம் கலந்து, அரை கிலோ தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி இறக்கவும். வடிகட்ட வேண்டாம். அடியில் தங்கும் பூவிதழ்களை விட்டுவிட்டு, மேலாக எண்ணையை மட்டும் ஊற்றி வைத்து கொள்ளவும். இதை உடலில் தடவி கால்மணி நேரம் கழித்து குளிக்க, உடலின் சுருக்கங்கள் மறையத் தொடங்கும். உடலுக்கு பொன்னிறத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
குளியல் பவுடர் தயாரிக்க
உலர்ந்த மல்லிகை பூ-100கிராம், புங்கங்காய் தோல்-50கிராம், ஓமம்-10கிராம், தவனம், ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து ஆகியவற்றை தலா 50கிராம் சேர்த்து பவுடராக்கிக் கொள்ளவும்.
இதைக் கொண்டு குளிப்பதால் குளிர்ச்சியும், வாசனையும் கிடைப்பதோடு சரும நோய்களைப் போக்கி மேனி எழிலை மேம்படுத்தும்.