சூரியக் குளியல் – முன்னெச்சரிக்கைகள்!

Sunbathing – Precautions!
beauty tips
Published on

- ஜி.எஸ்.எஸ்.   

ண்டனைச் சேர்ந்த சிரின் முராத் ஓர் அழகுக் கலைஞர். இவர்  25 வயது இளம்பெண்.  விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பதற்காக சமீபத்தில்  பல்கேரியா நாடு சென்றுள்ளார்.  அங்குள்ள கடலில் குளித்துவிட்டு, கடற்கரையில் முப்பது நிமிடங்கள் படுத்து ஓய்வெடுத்தார்.  (சன்பாத் எனப்படும் இந்த நிகழ்வு சகஜமான ஒன்றுதான்).  அப்போது வெப்பம் 21 டிகிரி செல்சியஸாக இருந்தது. அரை மணி நேரத்திற்குப் பிறகு எழுந்து பார்த்தபோது, அவரது முகம் முழுவதும் சிவந்து புண்ணானதுபோல் காணப்பட்டது. 

அடுத்த நாள் அவர் ​தூங்கி எழுந்தபோது தனது முகம் முழுவதும் ஏதோ ஒன்று இறுக்கிப் பிடித்ததுபோல உணர்ந்துள்ளார்.  தொட்டுப் பார்த்தபோது நெற்றிப் பகுதி இறுகிப்போன ‘ப்ளாஸ்டிக்’ போல் இருந்துள்ளது. இதன் காரணமாக கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தார் சிரின். சிறிது நேரத்தில், நெற்றியின் மேல் தோல் முழுவதும் உரியத் தொடங்கியது. 

“முதலில் இதனால் எனக்கு அந்தப் பகுதியில் வலி உண்டானது. அடுத்த நாள் இறுகிப்போன தோல் உரியத் தொடங்கியது. என் தோல் இப்போது நன்றாக இருக்கிறது. நெற்றி இப்போது புதுப்பிக்கப்பட்டதைப் போல உணர்கிறேன்” என்று கூறுகிறார் சிரின்.

நெற்றிப்பகுதி சரியாக கிட்டத்தட்ட ஏழு வாரங்கள் ஆகியுள்ளன.

நம் நாட்டிலும் கடற்கரைகளுக்குப் பஞ்சமில்லை.  விடுமுறை நாட்களில் அங்கு செல்பவர்களுக்கும் குறைவில்லை. சமீபத்தில் சூரியக்குளியல் பழக்கமும் இங்கு அதிகமாகிக்கொண்டிருக்கிறது.  எனவே, இது தொடர்பாக சில எச்சரிக்கைகளை நாம் எடுத்துக் கொள்வது அவசியம்.

கடற்கரையில் சூரியக் குளியல் செய்வது (அதாவது சூரிய வெப்பத்தில் அங்கு உட்கார்ந்திருப்பது மற்றும் படுத்துக்கொண்டிருப்பது) உடலுக்கு நல்லதுதான்.  சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி கிடைக்கிறது.  தவிர, தங்கள் உடல் கொஞ்சம் கருப்பாக வேண்டும் என்று மேலை நாட்டினர் இந்த சூரியக் குளியலில் தொடர்ந்து ஈடுபடுவதும் உண்டு.

இதையும் படியுங்கள்:
சங்ககால காதணி வகைகள் மற்றும் இலக்கியங்களில் காதணிகளின் முக்கியத்துவம்!
Sunbathing – Precautions!

மன இறுக்கம் இதனால் குறைகிறது.  சரியாகத் தூக்கம் வரும்.  எலும்புகள் உறுதியாகும்.  நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.  அல்சைமர் நோய் வருவதைக்  கூட இது தள்ளிப் போடுகிறதாம்.  இன்சுலின் உருவாவதற்கு வைட்டமின் டி-யும் ஒரு காரணம் என்பதை மறக்கவேண்டாம்.  அந்த விதத்தில் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கவும் தள்ளிப்போடவும் சூரியக்குளியல் உதவுகிறது.

ஆனால், மிக அதிக நேரம் சூரிய வெப்பத்தில் இருப்பதும் நல்லதல்ல (பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இது வேண்டாமே).

அப்படி ஓய்வு எடுப்பதற்கு முன்னால் உடலில் சன் ஸ்கிரீன் லோஷனை மறக்காமல் தடவிக்கொள்ளுங்கள்.  இந்த லோஷனின் மீது SPF எவ்வளவு என்பது எழுதப்பட்டிருக்கும்.  இது குறைந்த பட்சம் முப்பது என்று  இருக்கவேண்டும்.  சூரியக் குளியலுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் இதைத் தடவிக்கொள்வது நல்லது.  கை, கால், முகம் மட்டுமல்ல; தலையில் உள்ள வழுக்கைப் பகுதிகளிலும் இந்த லோஷனை தடவிக்கொள்ள வேண்டும்

மிக அதிக நேரம் சூரிய வெப்பத்தில் தொடர்ந்து இருந்தால் தோல் வெடிப்புகள் நேரலாம்.  உதடுகளில் கூட வெடிப்புகள் உண்டாகலாம். தோல் சிவந்து போதல், அரிப்பு உண்டாகுதல் போன்றவையும் ஏற்படலாம்.

ஒரே நாளில் நீண்ட நேரம் சூரிய வெப்பத்தில் ஓய்வு எடுப்பதைவிட, அதை, தினமும் கொஞ்ச நேரம் என மாற்றியமைத்துக்கொள்ள முடிந்தால் நல்லது.  உடல் அதிக வெப்பம் அடைவதாகத் தோன்றினால் நடுநடுவே சிறிது நேரம் நிழலுக்கு சென்றுவிடவும். அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள்.  தக்காளியும் சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு குளுமை தரும் தர்பூசணி பேஷியல்!
Sunbathing – Precautions!

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட நேரம் சூரியக் குளியலில் ஈடுபட்டால் அது கருவில் உள்ள குழந்தையின் வெப்பத்தை அதிகப்படுத்தி, அதன் நீர்ச்சத்தைக் குறைத்து விடலாம்.  எனவே, எச்சரிக்கை தேவை.

தீயின் வெளிச்சத்தில் கல்வியும் பயிலலாம்.  குடிசையையும் கொளுத்தலாம்.  எனவே, மேற்கூறிய ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் உடலுக்கு நல்லது மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் ​சூரியக் குளியல் எதிர் விளைவுகளை அடையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இக்கட்டுரை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com