
கோடைக் காலத்தில் ஏராளமான சருமம் சார்ந்த பிரச்னைகள் வரக் கூடும். வெயிலில் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க ஈரப்பதம் அதிகம் உள்ள தர்பூசணி பயன் உள்ளதாக இருக்கும். கோடையில் உங்கள் சருமத்தைப் பராமரிக்க விரும்பினால், நீர்சத்து மிகுந்த பழங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதால் அது சருமத்தின் ஈரப்பதத்தினை பராமரிக்கிறது. இந்த பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அமினோ அமிலங்களும் உள்ளன. தர்பூசணியில் லைகோபீன் என்ற தோல் அழற்சியைக் குறைக்கும் வேதிப்பொருள் உள்ளது. லைகோபீன் முகத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்க உதவுகிறது.
கோடையில் ஈரப்பதத்தை பராமரிக்க தர்பூசணியில் பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம். 4 தேக்கரண்டி தர்பூசணி சாற்றுடன் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து பேஸ் பேக்கை உருவாக்கவும். இந்த பேஸ்பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் நாள் முழுக்க முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உதடுகள் பராமரிப்புக்கும் தர்பூசணி பயனுள்ளதாக இருக்கும். தர்பூசணி சாற்றை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து உதட்டில் தடவி சிறிது நேரம் காயவிடவும். பின்னர் உங்கள் உதடுகளை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தர்பூசணி உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
தர்பூசணியைக் கொண்டு ஃபேஸ் ஸ்பிரே தயாரிக்கலாம். தர்பூசணி விதைகளை நீக்கி அதில் சாறு எடுக்கவும். தர்பூசணி சாற்றை வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். தர்பூசணி சாறு நிரப்பப்பட்ட ஒரு ஸ்ப்ரே பாட்டிலை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர் அந்த ஸ்பிரேவை தேவைப்படும்போது உங்கள் முகத்தில் அடித்துக்கொண்டால் சருமம் ஈரப்பதத்துடன் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் அவை சருமத்தை பிரகாசமாக்கவும் உதவுகின்றன.
தர்பூசணி சாறு கருவளையங்களை நீக்கும் தன்மை கொண்டது. கருவளையங்களை நீக்குவதற்கு தர்பூசணி ஒரு சிறந்த தீர்வாகும். ஒரு வாரத்தில் தர்பூசணி முகத்தில் உள்ள கருமைகளையும் , கண்ணை சுற்றியுள்ள கருவளையங்களையும் நீக்கும். தர்பூசணி சாற்றில் இரண்டு பஞ்சு நனைத்து கருவளையப் பகுதிகளில் அரை மணிநேரம் ஒற்றி எடுக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினசரி செய்து வந்தால் கருவளையம் குறையத் தொடங்கும்.
நீங்கள் தர்பூசணி சாற்றை உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளலாம். ஒரு ஐஸ் தட்டில் தர்பூசணி சாற்றை ஊற்றி ஐஸ் கட்டிகளை உருவாக்கவும். பின்னர் இந்த ஐஸ் கட்டியைத் சருமத்தில் ஒற்றி எடுங்கள். இது சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமப் பொலிவை அதிகரிக்கும்.