
தயிர், கடலைமாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.
வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். தக்காளி பழச்சாற்றை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.
மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.
சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் துணியைக் பயன்படுத்தி முகத்தைத் துடைக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.
ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக்கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசையைக் தடுக்கலாம். வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.
கரும்புள்ளிகள் நீங்க குப்பைமேனி கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்து வரவேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும், அழகுகூடும்.
முடி உதிர்வை தடுக்கும் இயற்கை வைத்தியம்..!
கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிர்வானது தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும். சின்ன வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது.
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடிஉதிர்தல் தடுக்கப்பட்டு கூந்தல் கருமையாக வளர உதவுகிறது.
முட்டையின் வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளித்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படுகிறது. வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும். முடி கொட்டுவது நின்றுவிடும் அதுமட்டுமல்ல இந்த கீரை நரைமுடி ஏற்படுவதை தடுக்கும். கருகருவென முடி வளரதொடங்கும்.