
‘ஸ்டைல்’ என்ற வார்த்தை பலருக்கும் பிடிக்கும். ஸ்டைல் நமக்குத் தெரிந்து பலரின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளது. ஸ்டைலில் அப்படி என்னதான் உள்ளது?ஸ்டைலுக்கும் நம் வாழ்க்கைக்கும் இருக்கும் பந்தம் என்ன?
ஸ்டைல் எப்படி அமைகிறது?
ஸ்டைல் என்பது ஒருவரின் தனித்துவம் (individuality), ஒரு நபரின் சுய வெளிப்பாட்டை (self-expression) வெளிக்காட்டும் ஒரு கருவி போன்றது. சரியான சிகை அலங்காரம் (hairstyle) அல்லது ஒட்டுமொத்த தோற்றம் (overall look) எப்படி இருக்க வேண்டும் என்று ஒருவர் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் அவரின் தனிப்பட்ட விருப்பங்கள், வாழ்க்கை முறை, கலாச்சாரங்களை வைத்துத்தான் தொடங்குகிறது.
முக வடிவம், முடி அமைப்பு, தேவையான பராமரிப்புகளை வைத்து ஒருவரின் சிகை அலங்காரம் முடிவு செய்யப்படுகிறது. அதேபோல், ஒருவரின் ஒட்டுமொத்த தோற்றத்திற்குத் தேவையான விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது பிடித்த வண்ணங்கள், உடல் அமைப்பு மற்றும் அவரின் தனிப்பட்ட பாணியை (personal style) புரிந்துகொள்வதன் மூலம் முடிவு செய்வார்கள். இதை இளம் வயதிலேயே பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது.
எப்போது இதைக் கவனிக்க தொடங்குகிறோம்?
பொதுவாக 13-19 வயதிற்கு இடைப்பட்ட டீன் ஏஜ் பருவத்தில்தான் மனிதர்கள் தங்களுடைய ஸ்டைலை உணரத் தொடங்குகிறார்கள். சமூக தொடர்புகள் மற்றும் ஊடக வெளிப்பாடுகளால் (media exposure) நம் சுய விழிப்புணர்வு தூண்டப்படுகிறது. இருப்பினும், அந்த வயதில் தொடங்கப்படும் நம் ஸ்டைல் உணர்வு வாழ்நாள் முழுவதும் தொடரப்படுமா? என்பது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்ததே.
பொதுவாக மனிதர்களின் 20-30 வயதின் இடைப்பட்ட தருணத்தில் அல்லது 30 வயதின் தொடக்கக் காலங்களில், குறிப்பாக தங்களின் அடையாளத்தையும் விருப்பங்களையும் நன்கு புரிந்து கொள்ளும்போதுதான் அவர்களின் ஸ்டைலில் தீர்வு காண முடிகிறது.
ஒரு சிலருக்கு வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஸ்டைல் தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கும். ஆனால், ஒரு சிலரோ இதுதான் எனது வாழ்க்கையின் அடையாளம் என்று கருதி அதையே தொடர்வார்கள்.
நம் ஸ்டைலை நாம் தீர்மானித்தால் என்ன பயன்?
ஒரு குறிப்பிட்ட ஸ்டைலை நாம் உணர்ந்து தொடரும்போது பல நன்மைகளைப் பெற முடியும். முதலில், நாம் தீர்மானித்த ஸ்டைலிலே உறுதியாக இருந்தால் அதற்குத் தேவையான சீர்ப்படுத்துதல் (grooming) அல்லது ஆடை அணிவதில் உண்டாகும் நிச்சயமற்ற தன்மையை (uncertainty) நீக்கி பிறர் முன் தன்னம்பிக்கையுடன் உலா வர முடியும்.
நாம் பின்பற்றும் ஒரு சீரான ஸ்டைல் நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. குழப்பங்களைக் குறைக்கிறது. மேலும், இது நம்மைப் பற்றிய சுயச் சந்தேகத்தையும் நீக்குகிறது.