
பொடுகு பொதுவாக உச்சந்தலையில் உலர்ந்ததாகவும், செதில்களாகவும் தோன்றும். சில நேரங்களில் இளம் சிவப்பு தோல் கொண்ட பகுதிகளைக் கொண்டு வீக்கம், அரிப்பு ஏற்படும். சிலருக்கு வெள்ளை நிற செதில்களாக உதிரும்.
சிலர் அடிக்கடி தலையில் கை வைத்து சொரிந்து கொண்டே இருப்பார்கள். தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு தொல்லைக்கு சிறந்த மாஸ்குகள் உள்ளன. இவற்றை செய்து பயன்படுத்த விரைவில் பொடுகு தொல்லை நீங்குவதுடன் அரிப்பும் போய் முடி உதிர்வையும் குறைக்க முடியும்.
தயிர் ஹேர் மாஸ்க்:
தயிர் 2 ஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
கருவேப்பிலை 1 ஆர்க்கு
இஞ்சியையும், கருவேப்பிலையும் நசுக்கி தயிரில் கலக்கவும். இதனை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து தலையில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து தலையை அலச பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பை போக்கும். சிம்பிள் ஆனால் பலன் தரக்கூடிய மாஸ்க். செய்துதான் பாருங்களேன்.
தயிர் ஒரு இயற்கையான கண்டிஷனர். புரதம் நிறைந்த தயிர் முடி உதிர்வை தடுப்பதுடன், பிளவு பட்ட முனைகளையும் குறைத்து கூந்தலை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
இஞ்சி மற்றும் கறிவேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும், ஆன்ட்டி செப்டிக் பண்புகளும் நிறைந்துள்ளதால் இந்த ஹேர் மாஸ்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் மாஸ்க்
வறட்சியால் ஏற்படும் பொடுகை நீக்கி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவும். தோல் அழற்சி மற்றும் அரிப்பை நீக்கி பொடுகுத் தொல்லையையும் போக்கும். காலையில் தேங்காய் எண்ணையை வெதுவெதுப்பாக சுட வைத்து உச்சந்தலை மற்றும் முடிகளில் தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து சாதம் வடித்த கஞ்சியில் தேய்த்து அலச அரிப்பு, பொடுகு காணாமல் போய்விடும்.
எலுமிச்சை மாஸ்க்
நிரந்தரமாக குணப்படுத்தப்பட முடியாவிட்டாலும் பொடுகினால் ஏற்படும் அரிப்பு, முடி உதிர்தல் போன்றவற்றை கட்டுப்படுத்த எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறில் உள்ள அமிலத்தன்மை பொடுகுக்கு காரணமான பூஞ்சையை எதிர்த்து போராடவும், தலையில் எண்ணெய் உற்பத்தியை குறைக்கவும் உதவுகிறது. 2 ஸ்பூன் எலுமிச்சை சாறை உச்சந்தலை மற்றும் மண்டையில் படும்படி தேய்த்து மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து முடியை அலச அரிப்பு மற்றும் பொடுகு தொல்லை குறையும்.
கற்றாழை மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்
சதைப்பற்றுள்ள கற்றாழை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளால் பிரபலமானவை. கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் நேரடியாக தேய்த்து பயன்படுத்தலாம் அல்லது கற்றாழை கொண்ட இயற்கையான ஷாம்புகளை பயன்படுத்தலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும். ஆப்பிள் சைடர் வினிகரை சம அளவு நீரில் கலந்து உச்சம் தலை, மண்டைப் பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து அலச நல்ல பலன் கிடைக்கும். அல்லது குளிக்கும் நீரில் சில துளிகள் சேர்த்து குளிக்கவும் செய்யலாம்.
ஆரோக்கிய உணவு
தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், பச்சை காய்கறிகள், ஆளி விதை, சியா விதைகள், புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
அதிக எண்ணெய் சுரப்பு, வறண்ட சருமம், மலாசீசியா எனப்படும் ஈஸ்ட் போன்ற பூஞ்சையின் வளர்ச்சி ஆகியவை பொடுகு ஏற்பட காரணமாக உள்ளன. இதற்கு சுத்தமாக முடியை பராமரிப்பதும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் பொடுகு வராமல் தடுக்க உதவும்.