மழை பெய்யும் போது காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் நம்முடைய கூந்தலின் வேர்களை மிகவும் பலவீனமாக்கி விடும். இந்தக் காலக்கட்டத்தில் முடி உதிர்வைத் தடுத்து அபாரமான முடி வளர்ச்சி பெற நமது பாட்டிகள் பயன்படுத்திய ஆமணக்கு எண்ணெய் என்கிற விளக்கெண்ணெய் ஒரு மிகச்சிறந்த மருந்து.
ஆனால், இது பார்ப்பதற்குத் தேன் போல மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதை அப்படியே தலையில் தடவினால் முடி பிசுபிசுப்பாகிச் சிக்கு விழுந்துவிடும். எனவே, உங்களின் கூந்தல் வகைக்கு ஏற்ப இதை எந்தெந்த எண்ணெய்களோடு கலந்து பூச வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வறண்ட முடிக்கு தேங்காய் எண்ணெய்!
உங்களுடைய முடி வைக்கோல் போலச் செம வறட்சியாக இருந்தால், இந்த ஐடியா உங்களுக்குத்தான். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து லேசாக வெதுவெதுப்பாக்கித் தலையில் மசாஜ் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் முடியின் ஆழம் வரை சென்று ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். இது வறட்சியைப் போக்கி கூந்தலைப் பட்டுப்போல மாற்றும்.
பிசுபிசுப்பான முடிக்கு கற்றாழை!
தலையில் எப்போதுமே எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் நபர்கள், விளக்கெண்ணெயுடன் பிரெஷ்ஷான கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு சொட்டு தேயிலை மர எண்ணெய் கலந்து அப்ளை செய்யலாம். இது மண்டையோட்டில் உள்ள அதிகப்படியான பிசுபிசுப்பை உறிஞ்சுவதோடு, முடிக்கு நல்ல லேசான தன்மையைக் கொடுக்கும்.
பொடுகு முடிக்கு வேப்ப எண்ணெய்!
மழைக்காலத்தில் காற்றில் வரும் பூஞ்சைத் தொற்றால் பொடுகுத் தொல்லை அதிகமாகும். இதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெயுடன் சம அளவு வேப்ப எண்ணெய் மற்றும் சில சொட்டு எலுமிச்சை சாறு கலந்து வேர்களில் தடவ வேண்டும். இது பொடுகை அடியோடு அழித்துத் துரத்திவிடும்.
உடையும் முடிக்கு பாதாம் எண்ணெய்!
முடி சீவும் போதெல்லாம் பாதியில் துண்டு துண்டாக உடைகிறதா. கவலையே வேண்டாம், விளக்கெண்ணெயுடன் வைட்டமின் இ நிறைந்துள்ள பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்துக் குளியுங்கள். இது முடியின் வேர்களுக்கு இரும்பு போன்ற அசுர பலத்தைக் கொடுக்கும்.
சேதமடைந்த முடிக்கு ஆலிவ் ஆயில்!
அடிக்கடி ஹேர் ஸ்ட்ரெயிட்டனர் மற்றும் டை பயன்படுத்தி முடி பாழாகி இருந்தால், விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயில் கலந்து தலையில் ஸ்பா செய்வது போல மசாஜ் செய்யுங்கள். இது சேதமடைந்த செல்களைப் புதுப்பித்துத் தலைமுடிக்கு ஒரு புதிய உயிரோட்டத்தைக் கொடுக்கும்.
விளக்கெண்ணெய் கூந்தலுக்கான ஆரோக்கியமானது. ஆனால் இதை வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதேபோலத் தலையில் தேய்த்து இரவு முழுவதும் ஊற வைக்கும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்; அப்படிச் செய்தால் மழைக்காலத்தில் சளி பிடித்துக்கொள்ளும். குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தடவி, வீரியம் குறைவான ஷாம்பு போட்டு அலசினாலே போதும்.
உங்களின் கூந்தல் வகைக்கு ஏற்ற இந்தச் சரியான காம்போவை இன்றே தேர்ந்தெடுங்கள், இந்த சீசனில் உங்கள் முடி வளர்ச்சி யாரும் அசைக்க முடியாத அளவுக்கு சூப்பராக இருக்கும்.