போலிப் பெருமை பேசினால் இப்படித்தான் மூக்கு உடையும்! பிக்காசோ கொடுத்த மரண மாஸ் பல்பு!

பெருமைக்காக ஓவியம் வாங்கிய பணக்காரர், அடிப்படை அறிவில்லாமல் பிக்காசோ ஓவியத்தை தலைகீழாக மாட்டி அவமானத்தில் சிக்கிய கதை
Picasso Painting
Picasso PaintingCredit: AI image
Updated on

பெருமைக்காக நாம் ஒரு சில விஷயங்களை இந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டியிருக்கிறது; அது தவறில்லை. ஆனால், அவ்வாறு நாம் பெருமைக்காகச் செய்யும் விஷயத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கண்டிப்பாக நமக்குத் தேவை. இல்லையென்றால், மூக்குடைபட்டுத்தான் போக வேண்டும். இதைத் புரிந்துகொள்ள ஒரு குட்டிக்கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் தன்னைப்போல பணக்காரர்கள் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் ஒரு விஷயத்தைக் கவனித்தார். அவர்கள் வீடுகளின் வரவேற்பறையில் பெரிய பெரிய ஓவியங்கள் மாட்டியிருப்பதே அது. இந்த ஓவியங்கள் அவர்களின் அந்தஸ்தை (Status) வெளிப்படுத்தும் ஒரு விஷயமாகக் கருதப்பட்டன. யார் அவர்கள் வீட்டிற்கு வந்தாலும், அந்த ஓவியத்தைக் காட்டிப் பெருமை பேசுவதை அவர் கண்டார். உடனே, தன் வீட்டிலும் இதுபோலவே ஓவியத்தை வாங்கி மாட்ட வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது.

உடனே அவர், தன் உதவியாளரை அழைத்துக் கணிசமான தொகையைக் கொடுத்து, "தற்போது யார் மிகவும் பிரபலமான ஓவியரோ, அவரிடம் சென்று ஒரு ஓவியத்தை வாங்கிக்கொண்டு வா!" என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அந்தச் சமயத்தில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ (Picasso) மிகவும் பிரபலமாக இருந்தார். அதனால், உதவியாளர் அவர் வரைந்த ஓவியம் ஒன்றை ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கிவந்து, பணக்காரர் வீட்டில் மாட்டினார். இப்போது யார் அவர் வீட்டிற்கு வந்தாலும், "இது யார் வரைந்த ஓவியம் தெரியுமா? உலகப் புகழ்பெற்ற ஓவியரான பிக்காசோ வரைந்தது! அவரிடம் இவ்வளவு தொகை கொடுத்து இதை வாங்கியுள்ளேன்!" என்று பணக்காரர் பெருமை பேசினார்.

ஒருநாள், பணக்காரர் தன் வீட்டில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்திற்குத் தற்செயலாக ஓவியர் பிக்காசோவே வருகை தந்திருந்தார். அவரைப் பார்த்த பணக்காரருக்கு மட்டற்ற மகிழ்ச்சி! அவரிடம் தன் வரவேற்பறைக்குச் சென்று அந்த ஓவியத்தைக் காட்டி, "இது உங்களுடைய ஓவியம்தான்! இவ்வளவு பெரிய தொகை கொடுத்து நான் இதை வாங்கிப் பாதுகாத்து வருகிறேன்," என்று பெருமையாகச் சொன்னார்.

இதையும் படியுங்கள்:
'நான் இல்லனா எதுவும் நடக்காது' - இந்த எண்ணம் ஆபத்தானதா?
Picasso Painting

அந்த ஓவியத்தை உற்றுப்பார்த்த பிக்காசோ, அவருக்குத் தன் நன்றியைக் கூறிவிட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார். அதைக் கேட்ட பணக்காரருக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது!

பிக்காசோ அப்படி என்ன சொன்னாரென்றால்... "ஐயா! இந்த ஓவியத்தை இப்படி மாட்டக் கூடாது, இதைத் திருப்பி மாட்ட வேண்டும். நீங்கள் தலைகீழாக மாட்டியிருக்கிறீர்கள்!" என்றார்.

இதற்குத்தான் சொல்கிறார்கள்: ஒரு விஷயத்தைப் பற்றிப் பெருமை பேசுவதற்கு முன்பு, அதைப் பற்றிய அடிப்படை அறிவாவது நமக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், இப்படிப்பட்ட தர்மசங்கடத்தைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்!

logo
Kalki Online
kalkionline.com