
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு பெரும்பாலும் மக்கள் இயற்கை பொருட்களையே விரும்புவார்கள். அப்படி இயற்கையாக கூந்தலை பளபளப்பாக்க உதவும் பொருள் தான் கற்பூரம். கற்பூரம் ஆன்மீகத்திற்கு மட்டும் பயன்படுத்துவற்கு இல்லாமல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். கற்பூரம் கூந்தலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். இதன் பயனைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்.
முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் தேங்காய் எண்ணெய் மிகவும் உதவுகிறது. இதனுடைய ஈரப்பதமூட்டும் பண்புகளுடன் கற்பூரம் சேரும் போது மேலும் நல்ல பலன்களைத் தரும்.
ஒரு சிறிய கற்பூர துண்டை சூடான தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து கலந்து தலை முடியில் தடவவும். இது முடியை பலப்படுத்தவும், மென்மையாக்கவும் உதவுகிறது.
கற்பூரம் மற்றும் கற்றாழை பேக்
கற்றாழையில் கற்பூரத்தை கலந்து புத்துணர்ச்சியூட்டும் பேக்கை தயரிப்பது கற்பூரத்தை பயன்படுத்த மற்றொரு வழியாகும். கற்றாழை ஜெல்லுடன் கற்பூரத்தை கலக்கினால் பேக் ரெடி. இதை தலையில் தடவுவதால் வறண்ட கூந்தல் ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
கற்பூரம் மற்றும் தயிர் பேக்.
ஊட்டச்சத்து அளிக்கும் பேக்கை தயாரிக்க கற்பூரத்துடன் தயிரை கலந்து கெட்டியான பேக்கை தயாரிக்கலாம். இந்த பேக்கை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் பயன்படுத்தவும். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசவும். இந்த கலவை முடி அமைப்பை மேம்படுத்தவும், முடியை இயற்கையாக பிரகாசமாக்கவும் உதவும்.
கற்பூரம் மற்றும் எழுமிச்சை பேக்
கற்பூரம் மற்றும் எழுமிச்சை கலந்த கலவை முடிக்கு பல அதிசயங்களை செய்யும். ஒரு கப் எழுமிச்சை சாற்றில் 1 துண்டு கற்பூரத்தை சேர்த்து தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பிறகு தலையில் போட்டு அலசவும். இந்த பேக்கை பயன்படுத்தும் போது தலை முடியில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் கூந்தலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
இந்த ஒரு இயற்கையான பொருளை தலைக்கு பயன்படுத்தி முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுங்கள்.