

பருவமழை சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து நிவாரணம் தந்து புத்துணர்ச்சி ஊட்டினாலும், அதிகரித்த ஈரப்பதம் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் நம் சருமத்திற்கும், கூந்தலுக்கும் சவால்களை ஏற்படுத்தக் கூடும். ஈரப்பதம் அதிகரிப்பதால் நம் சருமத்தில் அழுக்கு, வியர்வை படிந்துவிடும். எனவே சருமத்தை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், தொற்றுகள் இல்லாமலும் வைத்துக்கொள்ள சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
சுத்தம் செய்தல்:
காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் முகப்பரு மற்றும் தொற்றுகள் ஏற்பட்டு சருமம் பொலிவிழந்து போகும். எனவே சரியான சரும பராமரிப்பு மூலமாக பளபளப்பான சருமத்தை மழைக்காலத்திலும் நம்மால் பெறமுடியும். அதற்கு முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை கழுவி, இலகுவான டோனர் பயன்படுத்துவது மற்றும் நம்மை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மழைக்காலத்தில் நம் சருமத்தை பாதுகாக்க உதவும்.
கிளென்சர் மற்றும் டோனர்:
சரும வகைக்கேற்ற மென்மையான கிளென்சரைக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை கழுவவும். இது வியர்வை மற்றும் அழுக்குகளை போக்க உதவும். அதன் பிறகு டோனரைப் பயன்படுத்தி மீதமுள்ள அழுக்குகளையும் நீக்குவதுடன் சருமத்தின் pH அளவை பராமரிக்கவும் உதவும். இதனால் சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.
லைட் மாய்ஸ்சரைசர்:
மழைக்காலத்தில் சருமம் ஈரப்பதமாக இருக்க லைட் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தில் இருக்கக்கூடிய வறட்சியை போக்க உதவும். கனமான எண்ணெய் பசையுள்ள தயாரிப்புகளை தவிர்த்து விடுவது நல்லது. மழைக் காலத்திலும் வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம்.
முடி பராமரிப்பு:
மழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பதற்கு தலைமுடியை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். முடியை அடிக்கடி அலசாமல் இருப்பதுடன், முடிஉதிர்வை கட்டுப்படுத்த ஹேர் சீரம் பயன்படுத்துவது நல்லது.
மேக்கப்:
மழைக்காலத்தில் முடிந்தவரை மேக்கப் போடுவதை குறைத்து விடுவது நல்லது. இது சருமத்துளைகளை அடைப்பதை தவிர்க்க உதவும். அத்துடன் நீர்ப்புகா ஒப்பனை பொருட்களையும் தவிர்த்துவிடலாம்.
நீரேற்றமுடன் இருப்பது:
சருமம் நீரேற்றத்துடன் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்த சத்தான உணவை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
மழைக்காலத்திற்கேற்ற வாசனை திரவியங்கள்:
சந்தனம் அல்லது தேவதாரு போன்ற நறுமணங்கள் கொண்ட வாசனை திரவியங்கள் மழைக்காலத்திற்கு ஏற்றவை.
எக்ஸ்ஃபோலைட்டிங் அல்லது ஸ்க்ரப்பிங்:
மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏராளமான இறந்த செல்கள் படிந்து இருக்கக்கூடும். இது சருமத்தின் அழகை கெடுத்துவிடும். எனவே வாரத்திற்கு இருமுறை சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்ற மென்மையான எக்ஸ்போலியேட்டரை பயன்படுத்துவது சருமத்தை ஃபிரஷாகவும், பளபளப்பாகவும் இருக்க வைக்கும்.