
சியா விதைகள் பால் கலந்து ஃபேஸ் மாஸ்க் போடுவது சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்கும். சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கும், முடி ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் பாதுகாக்கவும், இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
சியா விதைகளுடன் பால் சேர்க்கும் பொழுது பல நன்மைகள் ஏற்படுகின்றன. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்றி சருமத்தை பொலிவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவும். பாலில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சுருக்கங்கள், கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளை குறைக்க உதவுவதுடன் அதில் உள்ள புரதங்கள் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையையும் அதிகரிக்க உதவும்.
சியா விதை பால் மாஸ்க்:
சியா விதைகள் 2 ஸ்பூன்
காய்ச்சாத பால் அல்லது 1/4 கப்
பாதாம் பால்
சியா விதைகளை காய்ச்சாத பாலில் அரைமணி நேரம் ஊற விடவும். விதைகள் ஜெல் போன்ற தன்மையை அடைந்துவிடும். பிறகு இதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து முகம், கழுத்துப் பகுதிகளில் பூசி விடவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ சருமம் மென்மையாகவும், அழகாக பளிச்சென்று இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்வதுடன் பளபளப்பான தோற்றத்தையும் தரும்.
பாலிற்கு பதில் பாதாம் 4 எடுத்து சிறிது நீர் விட்டு அரைத்து அதில் சியா விதைகளை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்தும் பயன்படுத்தலாம்.
மற்றொரு முறை:
சியா விதைகளை ஊறியதும் மிக்சியில் அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் பால் சிறிது சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். விரும்பினால் சிறிது மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவ முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், முகப்பருக்களை குறைக்க உதவும்.