கோடைக்கு ஏற்றது லினனா? காட்டனா? எதை அணியலாம்?

 linen vs. Cotton
linen vs. Cotton
Published on

வெயில் காலத்தில் அணிந்து கொள்ள பலரும் காட்டன் ஆடைகளை தேர்வு செய்வார்கள். லினன் ஆடைகளும் தற்போது பிரசித்தம். லினன் ஏன் பருத்தி ஆடைகளை விட விலை அதிகமாக இருக்கிறது? காட்டன் வெர்சஸ் லினன், இரண்டில் எது கோடை காலத்தில் அணிந்து கொள்ள பொருத்தமாக இருக்கும்? இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்தப் பதிவில் விடை காண்போம்.

லினன் என்றால் என்ன?

லினன் என்பது ஆளிச்செடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இழையாகும். ஆளிச் செடிகளை அறுவடை செய்து, நனைத்து, உலர்த்தி பின்னர் இழைகளை நெசவு செய்வார்கள்.

பருத்தி என்றால் என்ன?

பருத்திச் செடியின் பஞ்சு போன்ற காய்களில் இருந்து பருத்தி பிரித்து எடுக்கப்படுகிறது. அவை நூலாக நூற்கப்பட்டு பின்னர் துணியாக நெய்யப்படுகின்றன.

பருத்தி மற்றும் லினன் துணிகளுக்கு இடையேயிலான வேறுபாடுகள்:

அமைப்பு:

பருத்தியுடன் ஒப்பிடும்போது, நெய்யப்பட்ட பிறகு லினன் ஒரு கரடு முரடான அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு முறை துவைக்கும் போதும் மென்மையாகி அதன் தனித்துவமான அழகை அதிகரிக்கிறது. பருத்தி ஆரம்பத்தில் இருந்தே மென்மையாகவும் அணிந்து கொள்ள வசதியாகவும் இருக்கிறது

சுவாசிக்கும் தன்மை:

லினன் ஆடைகள் சிறந்த சுவாசிக்கும் தன்மை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மைக்கு பெயர் பெற்றவை. இவற்றை அணிந்து கொள்ளும் போது காற்று சுதந்திரமாக செல்ல அனுமதிக்கிறது. வெப்பமான கோடையிலும் கூட அணிந்திருப்பவரை குளிர்ச்சியாக வைத்திருக்கும். உடலில் இருந்து ஈரப்பதத்தை நீக்கி லேசாக உணர வைக்கும். பருத்தி ஆடைகள் சுவாசிக்க கூடியவை தான். ஆனால் லினனுடன் ஒப்பிடும்போது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. எனவே அணிந்திருக்கும் போது கனமாக உணர வைக்கும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்காலத்திற்கேற்ற காட்டன் புடவைகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான 1௦ விஷயங்கள்!
 linen vs. Cotton

ஆயுள்:

லினன் வலுவான நார்ச்சத்துக் கொண்டிருப்பதால் பல ஆண்டுகள் அதன் நீடித்துழைக்கும் தன்மைக்குப் பெயர் பெற்றது. காலப்போக்கில் மென்மையாகவும் வசதியாகவும் மாறும். பருத்தித் துணிகள் லினன் அளவுக்கு நீடித்து உழைக்காது. அடிக்கடி துவைக்கும் போது விரைவாக தேய்மானம் ஆகிவிடும். ஆனால் லினன் அதன் வலிமையையும் கவர்ச்சியையும் தக்க வைத்துக் கொள்ளும். எனவே இதனை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பு:

பருத்தியுடன் ஒப்பிடும்போது லினன் குறைவான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆளி இழைகளிலிருந்து தயாரிக்கப்படுவதால் குறைந்த தண்ணீரும் குறைவான பூச்சிக்கொல்லிகளும், ரசாயனங்களும் தேவைப்படுகின்றன. எனவே இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. குறைவான கழிவுகளையே உருவாக்குகிறது.

பராமரிப்பு:

பருத்தியை விட லினன் ஆடைகளுக்கு மென்மையான பராமரிப்பு தேவைப்படுகிறது. ஏனென்றால் இது எளிதில் சுருக்கம் அடையும் தன்மை கொண்டது. மேலும் காலப்போக்கில் அதன் மேம்பட்ட மென்மையை தக்க வைக்க, அதைத் துவைக்கும் போதும் அயர்ன் செய்யும் போதும் நிதானமாகக் கையாள வேண்டும். ஆனால் பருத்தியைப் பராமரிப்பது எளிதானது. அதை வாஷிங்மெஷினில் போட்டும் துவைக்கலாம்.

சரும உணர்திறன்:

இயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் லினன் ஹைப்போ அலர்கெனிக் தன்மை கொண்டது. எனவே உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு மிகவும் ஏற்றது. தோல் எரிச்சல் அபாயத்தை குறைப்பதால், லினனால் செய்த படுக்கை விரிப்புகள் ஒரு சிறந்த தேர்வாகும். பருத்தியும் ஹைப்போ அலர்கெனிக் தன்மை கொண்டது. ஆனால் பதப்படுத்தப்பட்ட பருத்திகள் உணர்திறன் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தோற்றம்:

லினன் அதன் இயற்கையான அமைப்பு மற்றும் அழகான, நேர்த்தியான தோற்றத்திற்கு பெயர் பெற்றது. சரியாக பராமரிக்கப்பட்டால் குறைவான சுருக்கங்களை கொண்டிருக்கும். அதனால் அதன் அதிநவீன கவர்ச்சியை அதிகரிக்கும். பருத்தி மென்மையாக இருப்பதால் பல்வேறு பணிகளுக்கு ஏற்ற பல்துறை தோற்றத்தை வழங்குகிறது.

பயன்பாடுகள்:

லினன் நவீன அலங்காரம் மற்றும் ஸ்டைலான ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதே நேரத்தில் பருத்தி தகவமைப்பு திறன் காரணமாக பாரம்பரிய உடைகள் முதல் வீட்டு அலங்காரங்கள் வரை ஏற்றதாக அமைகிறது.

பருத்தியை விட லினன் துணிகள் ஏன் விலை அதிகமாக இருக்கின்றன?

பருத்தி ஆடைகளை விட லினன் ஆடைகள் விலை உயர்ந்தவை. அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் தனித்துவமான பண்புகள் காரணமாகவும், உற்பத்தி செயல்முறை காரணமாகவும் லினனுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பருத்தி மலிவு விலையில் பரவலாகக் கிடைக்கிறது.

கோடைக்கு ஏற்றது லினனா? காட்டனா?

லினன் அதன் நீடித்து உழைக்கும் தன்மை, சுவாசிக்கும் தன்மை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புகளினால் காட்டன் ஆடைகளை விட கோடையில் அணிய மிகவும் சிறந்தவை. நீடித்து உழைப்பவை.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் வழியும் முகம் உங்கள் அழகை கெடுக்கின்றதா?
 linen vs. Cotton

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com