
முடி உதிர்வுக்கு அடுத்தபடியாக எல்லோரும் கவலைப்படும் ஒரு பிரச்னை என்றால் அது தலையில் உள்ள பொடுகுதான். என்னதான் தினமும் தலைக்கு குளித்து சுத்தமான வைத்திருந்தாலும் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து விடும்.
தலையிலிருந்து ஒருவிதமான செதில்கள் உதிர்வதைதான் பொடுகு என்கிறார்கள். சிலருக்கு தலை மட்டும் இல்லாமல் முகம் முதுகு மார்பு என எங்கும் பொடுகு பரவலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை மிக அதிகமாக இருக்கும்.
இந்த பொடுகு பிரச்னையைப் போக்க இயற்கையாக சில வழிகள் உண்டு. அது என்ன என்று பார்ப்போம்!
வெந்தயத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகு போய்விடும். வாரம் ஒரு முறை இதை செய்யலாம்.
இஞ்சியைத் துருவி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி அதைத் தலையில் தேய்த்து ஊறவைத்தும் குளிக்கலாம்.
வால் மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்கவேண்டும்.
கற்றாழைச் சாற்றை தலையில் நன்கு ஊறுப்படி தேய்த்து கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும்.
தயிரை தலையில் தேய்த்து ஊறவைத்து கால் மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளிக்கலாம்.
பாசிப்பயிறு மாவை தயிர் உடன் கலந்து தலையில் ஊற வைத்து பின்குளித்தால் பொடுகு நீங்கும்.
ஆப்பிளை அரைத்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு வெங்காயச்சாறு கலந்து தலையில் ஊறவைத்து பின் குளித்தால் பொடுகு நீங்கும்.
துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து பின் குளித்தால்போதும் பொடுகு நீங்கிவிடும்.
அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து தலையை தேய்த்து பின்னர் குளித்தால் பொடுகு நீங்கும்.
தேங்காய்பால் எடுத்த பின் உள்ள சக்கையை தண்ணீர் தெளித்து பிசைந்து அதை தயிரில் ஊறவைத்து மிதமான சூடு தண்ணீரில் தலையை அலசினால் பொடுகு மறையும்.
காய்ந்த வேப்பம்பூ ஒரு டீஸ்பூன் எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி இளம் சூட்டில் இந்த எண்ணெயை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்த பின் குளித்தால் பொடுகு மறையும்.
வசம்பை நன்றாக அரைத்து பொடி ஆக்கி தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அதை தலையில் தேய்த்து ஊற வைத்து பின் குளித்தால் பொடுகு மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறுடன் சம அளவு வெங்காயச்சாறு கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி நல்ல பலனை தரும் .
வாரம் ஒருமுறை மருதாணி இலை அரைத்து சிறிது தயிர் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தாலும் பொடுகு போய்விடும்.
ஒரு கரண்டி ஆலிவ் எண்ணையை ஒருகரண்டி வெங்காயச் சாருடன் கலந்து தலையில் தேய்த்து சுடு தண்ணீரில் நனைத்துபிழிந்த டவைலை தலையில் அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு மிருதுவான ஷாம்புவால் தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு திரும்ப வராமல் இருக்கும்.
தலைக்கு குளிக்கும்போது கடைசியாக தலைக்கும் ஊற்றும் தண்ணீரில் கொஞ்சம் வினிகர் கலந்து குளித்தால் பொடுகு நீங்கும்.