கோடை காலம் வந்துவிட்டாலே நாம் நமது சருமத்தை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அதிகப்படியான சூரிய வெப்பத்தால் சருமம் பாதிக்கப்படலாம். குறிப்பாக கரும்புள்ளிகள் மற்றும் ஹைபர் பிக்மென்டேஷன் போன்ற பாதிப்புகள் பொதுவான ஒன்றாக இருக்கும். சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட்டாலும், கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு சுற்றுச்சூழல் காரணிகளை காரணமாக உள்ளன. கோடைகாலத்தில் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு பல இயற்கையான வழிகள் உள்ளன.
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு கரும்புள்ளிகளை குறைக்க உதவும் ஒரு இயற்கையான பிளீச்சிங் பொருளாகும். எலுமிச்சை சாற்றைப் பிழிந்து பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாகத் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். இது சருமத்தை ஈரப்பதமாக்கி சூரிய ஒளியைத் தவிர்க்க உதவுகிறது.
கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல் முகத்துக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி சருமத்தை புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டுள்ளது. இது கரும்புள்ளிகளை நீக்கும் சிறந்த இயற்கை நிவாரணையாகும். கற்றாழை ஜெல்லை அப்படியே எடுத்து நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் சரும மென்மையாகி காலப்போக்கில் கரும்புள்ளிகளை மறைய உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது கரும்புள்ளிகளை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவினால், கரும்புள்ளிகள் விரைவில் மறையும். முகப்பரு இருப்பவர்கள் இதைத் தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால் தவிர்த்து விடவும்.
மஞ்சள் பேஸ்ட்: மஞ்சள் சருமத்தை பிரகாசிக்கும் பண்புகளுக்கு பிரபலமானது. இதன் காரணமாகவே அந்த கால பெண்கள் மஞ்சளை முகத்தில் பூசிக் கொள்வார்கள். சிறிதளவு மஞ்சள் தூளை பால் அல்லது தண்ணீர் பயன்படுத்தி பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவி விடவும். இது தற்காலிகமாக முகத்தில் மஞ்சள் கரையை ஏற்படுத்தினாலும், கரும்புள்ளிகள் மறைய பெரிதளவில் உதவும்.
உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்கு சாறு கரும்புள்ளிகளைக் குறைக்க உதவும் இயற்கை என்சைம்களைக் கொண்டுள்ளது. உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை பிரித்தெடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். ஒரு வாரம் இப்படியே செய்தால், கரும்புள்ளிகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
சூரிய பாதுகாப்பு: ஏற்கனவே கரும்புள்ளிகள் தோன்றி விட்டால் அவை மேலும் தீவிரமடையாமல் இருக்க உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்கு வெளியே செல்லும்போது கட்டாயம் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். முடிந்தவரை நிழலிலேயே இருக்க முயற்சி செய்யுங்கள். அகலமான விளிம்பு கொண்ட தொப்பி, சன் கிளாஸ் அணிவது உங்கள் முகத்திற்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.