உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்க ஜிம்முக்கு செல்வது பாராட்டுக்குரிய விஷயம்தான் என்றாலும், உங்களின் ஜிம் அனுபவத்தை சிறப்பாக மாற்றிக் கொள்ள சில அத்தியாவசிய விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் புதிதாக ஜிம்முக்கு செல்பவராக இருந்தாலும் அல்லது ஏற்கனவே பல காலமாக ஜிம்முக்கு செல்பவராக இருந்தாலும் இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இலக்குகளை சரியாக அமைக்கவும்: நீங்கள் ஜிம்முக்கு செல்வதற்கு முன் எதற்காக ஜிம்முக்கு செல்கிறீர்கள் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியம். ஜிம்முக்கு செல்லும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியான நோக்கங்கள் இருக்கும். உடல் எடையைக் குறைக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பல குறிக்கோள்களுடன் ஜிம்முக்கு செல்வார்கள். எனவே உங்களுடைய இலக்கு என்ன என்பதை நிர்ணயம் செய்து, அதை அடைவதற்கான உடற்பயிற்சிகளிலும் முயற்சிகளிலும் ஈடுபடுங்கள். ஒவ்வொரு வாரமும் இலக்குகளை நிர்ணயித்து உடற்பயிற்சிக் கூடம் செல்லுங்கள்.
ஒரு சீரான உடற்பயிற்சி வழக்கத்தை அமைத்துக் கொள்ளவும்: தினசரி ஏதோ ஜிம்முக்கு செல்கிறோம், ஏதோ ஒர்க்கவுட் செய்கிறோம் என்று இல்லாமல், ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் எதுபோன்ற உடற்பயிற்சிகள் செய்யப் போகிறீர்கள் என்பதை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன உடற்பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே நிர்ணயித்து ஜிம்முக்கு செல்லுங்கள். குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சி, ஹெவி வொர்க் அவுட் மற்றும் டியூரோபிளிட்டி பயிற்சிகள் உள்ளடங்கிய சீரான திட்டங்களுடன் உடற்பயிற்சி செய்யவும்.
உடற்பயிற்சிகளை சரியாக செய்யுங்கள்: ஜிம்முக்கு செல்பவர்கள் காயங்களைத் தடுக்கவும், எதிர்பார்க்கும் ரிசல்ட்டை விரைவாக அடையவும், உடற்பயிற்சிகளை சரியாக செய்வது அவசியம். முதலில் ஒரு ஒர்க்கவுட் செய்யப் போகிறீர்கள் என்றால், அதைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து கொண்டு, சரியாக எப்படி செய்வது என்பதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். எடுத்த எடுப்பிலேயே அதிக எடை தூக்கி, தான்தான் பெரிய ஆள் எனக் காட்டவேண்டும் என சிந்திக்காதீர்கள். இது நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
படிப்படியாக பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்கவும்: நீங்கள் ஜிம்முக்கு சென்று எந்த உடற்பயிற்சி செய்தாலும் அதில் முன்னேற்றம் மிக முக்கியம். அதாவது படிப்படியாக நீங்கள் எடை தூக்கும் விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே உங்களுக்கான ரிசல்ட்டை நீங்கள் விரைவாக எட்ட முடியும். இல்லையேல் எப்போதும் ஒரே மாதிரி எடையை தூக்கிக் கொண்டிருந்தால், சரியான பலன் கிடைக்காது. ஒன்று, எடையைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பழகுங்கள் அல்லது ஒரே எடையில் நீங்கள் போடும் எண்ணிக்கையைக் கூட்டுங்கள்.
ஓய்வு மற்றும் Recovery: உடற்பயிற்சிக்கூடம் செல்பவர்களுக்கு ஓய்வு மற்றும் Recovery-ன் முக்கியத்துவம் தெரிவதில்லை. அதிகப்படியான பயிற்சியை தவிர்ப்பதற்கும், காயங்களைத் தவிர்ப்பதற்கும் உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு எடுப்பது அவசியம். மேலும் வாரத்தில் ஒரு நாளாவது உடற்பயிற்சிக் கூடம் செல்லாமல் ஓய்வெடுப்பது உங்கள் தசைகள் Recovery அடைய உதவும். இதன் மூலமாகவும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
Consistency முக்கியம்: வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் கன்சிஸ்டெண்சி மிக முக்கியம். முடிந்தவரை அதிகமாக விடுப்பு எடுக்காமல் வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது ஜிம்முக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் ஜிம்முக்கு செல்கிறீர்கள் என்றால், எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்க நிச்சயம் நேரம் எடுக்கும். இதற்கு நிலையான உடற்பயிற்சிகள் மற்றும் இலக்குகள் தேவை. எனவே பாதியிலேயே விட்டுக் கொடுத்துவிடாமல் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது மூலமாக, நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை நிச்சயம் அடையலாம். எனவே ஜிம்முக்கு ஒவ்வொரு நாளும் உத்வேகத்துடன் செல்லுங்கள்.