

ஒருவரின் முக அமைப்பு வசீகரமாகவும், பார்ப்போரை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் இருந்தாலும், முகத்தின் புருவ முடி அடர்த்தி இல்லாமல் இருந்தால், முகம் களை இழந்தே காணப்படும். மேக்கப் மூலம் முக அழகை மேம்படுத்துவது சில மணி நேரமே நீடித்திருக்கும். முகத்தில், இயற்கை முறையில் புருவ முடிகள் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர நாம் எந்த வகையான எண்ணெய்களைப் பயன்படுத்தி நற்பலன் பெறலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக, நம் பாட்டி காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே நல்ல போஷாக் கிற்கும், முடி வளர்ச்சிக்கும் உடல் முழுவதும் விளக்கெண்ணெய் (Castor Oil) பூசி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, தற்காலத்திலும் விளக்கெண்ணெயுடன் கீழே கூறப்பட்டுள்ள ஐந்து வகை எண்ணெய்களை கலந்து உபயோகித்து அடர்த்தியான முடியை வளரச் செய்வது வழக்கமாக உள்ளது.
அர்கன் ஆயில் (Argan Oil): 'திரவ வடிவ தங்கம்' எனவும் அழைக்கப்படுகிறது இந்த அர்கன் ஆயில். இதற்கான காரணம், முடி அடர்த்தியாக வளர்வதற்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் E ஆகிய சத்துக்கள் இதில் அதிக அளவில் நிறைந்திருப்பதே ஆகும். விளக்கெண்ணெயுடன் சம அளவு அர்கன் ஆயில் கலந்து புருவங்களில் தடவி வர நாளடைவில் புருவ முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர்வதைக் காணலாம்.
ஜொஜோபா ஆயில் (Jojoba Oil): நம் சருமத்தின் அடிப் பகுதியில் இயற்கை முறையில் சுரக்கும் செபம் (Sebum) எனப்படும் ஒருவகை எண்ணெய்ப் பசை போன்ற திரவத்திற்கு சமமானது இந்த ஜொஜோபா ஆயில். செபம் நம் சருமப் பரப்பை மிருதுவாகவும், ஈரப்பசையுடனும் வைத்துப் பாதுகாக்க உதவும். ஜொஜோபா ஆயிலை விளக்கெண்ணெயுடன் கலந்து அடர்த்தி இல்லாத புருவ முடிகளின் மீது தடவி வந்தால், அது முடியின் வேர்க்கால்களுக்கு அருகில் உள்ள நுண்ணறைகளில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தமடையச் செய்யும். மேலும் முடி உதிர்ந்த இடங்களில் செயலற்று உறக்க நிலையிலிருக்கும் வேர்களை உசுப்பிவிட்டு மீண்டும் வளரவும், ஆங்காங்கே தோன்றும் வெற்றிடங்களிலும் முடி அடர்த்தியாக வளரவும் உதவி புரியும்.
தேங்காய் எண்ணெய் (coconut oil): தேங்காய் எண்ணெயில் உள்ள அதிகளவு நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின் E ஆகிய சத்துக்கள் விளக்கெண்ணெயுடன் சேர்ந்து சருமத்தின் உள் பகுதிக்கு ஊடுருவிச் செல்ல வல்லவை. அவை புருவப் பரப்பின் உட் பகுதியை நீரேற்றத்துடன் வைக்கவும், முடி அடர்த்தியாக வளரவும் உதவி புரியும்.
ஆலிவ் ஆயில் (Olive Oil): ஆலிவ் ஆயிலில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் A மற்றும் E போன்ற சத்துக்கள் முடியின் வேர்க் கால்களுக்கு சிறந்த ஊட்டமளித்து முடி செழித்து வளர உதவி புரிகின்றன. ஆலிவ் ஆயிலை விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் கலந்து, புருவ முடிகள் மீது தொடர்ந்து தடவி வர, அது சிதைவுற்ற வேர்ப்பகுதி நுண்ணறைகளை சீராக்கி முடி அடர்த்தியாகவும் அழகாகவும் வளரச் செய்யும்.
ஆல்மண்ட் ஆயில் (Almond Oil): புருவ முடிகள் செழித்து வளரத் தேவையான பயோடின், மக்னீசியம் மற்றும் வைட்டமின் E போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆல்மண்ட் ஆயிலில் நிறைந்துள்ளன. விளக்கெண்ணெயுடன் ஆல்மண்ட் ஆயிலை சேர்க்கும்போது, மென்மையான டெக்ச்சர் கொண்டதொரு கலவை கிடைக்கும். இதை புருவ முடிகள் மீது தேய்க்கும்போது, அது சுலபமாக சருமத்திற்குள் உறிஞ்சப்பட்டு, முடி உதிர்வை தடுக்கும். முடி அடர்த்தியாக வளரவும் உதவி புரியும்.
நீங்களும் மேற்கூறிய எண்ணெய்களில் ஒன்றை விளக்கெண்ணெயுடன் கலந்து தொடர்ச்சியாக புருவத்தில் தேய்த்துப் பாருங்க. பலன் பெறுங்க.