
கிருமி நாசினிப் பண்புகளைக் கொண்ட மஞ்சள் தூள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பொருளாகும். மஞ்சள் கிட்டத்தட்ட அனைத்து வகையான சமையலிலும் சேர்க்கப்படும் முக்கியமான பொருளாகும். இது உணவுக்கு சுவையையும், நிறத்தையும் தருகிறது.
அத்துடன் மஞ்சள் உடலுக்கு அழகு சேர்க்கும் ஒரு அதிசயப் பொருளாகப் கருதப்படுகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், முகப்பருவைக் குறைப்பதிலும், சரும நிறத்தைப் பிரகாசமாக்குவதிலும், உதவுகிறது. கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் மஞ்சளை அரைத்து முகம் கை கால்களில் பூசிக் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறனர்.
ஆனாலும், மஞ்சளை நேரடியாக முகத்தில் தடவுவது நல்லதல்ல, அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தோல் எரிச்சல்;
மஞ்சளை தினமும் முகத்தில் பூசி வரும் போது அரிப்பு, எரிச்சல், முகம் சிவத்தல் போன்றவை ஏற்படுகிறது. முகப்பரு உள்ளவர்களுக்கு அதிகமான சரும பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஒவ்வாமை எதிர்வினைகள்;
தோல் அழற்சி போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை மஞ்சள் ஏற்படுத்துகிறது. இதனால் தோல் சிவந்து வீங்கி போகிறது. முகத்தில் செதில் செதிலான தோல் வடிவத்தை உண்டாக்குகிறது.
கறை;
மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்கிற வேதிப்பொருள் உடலில் பூசப்படும்போது தோலில் மஞ்சள் நிறத்தை அல்லது கறையை விட்டு செல்கிறது. இந்த கறையை உடனடியாக ஆற்றுவது கடினம். இது சருமத்திலிருந்து மறைவதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம்.
வறட்சியும், தடிப்பு தோல் அழற்சியும்;
மஞ்சளை தொடர்ந்து முகத்தில் பூசி வரும்போது அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றுகிறது. எனவே முகச்சருமம் இயற்கையான நீரிழப்பை இழந்து வறண்டு விடுகிறது. இதனால் முகம் வறட்சியாக காட்சி அளிக்கிறது. தோல் உரிந்து வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் இது அரிக்கும் தோல் அழற்சி, தடிப்பு தோல் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.
முகச்சுருக்கம்;
மஞ்சளை தொடர்ந்து முகத்தில் பூசினால், அது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுத்தி விடும். விரைவில் வயதான தோற்றத்தை தரும்.
முகம் கருத்துப் போதல்;
மஞ்சளை முகத்தில் பூசிவிட்டு, வெளியில் செல்லும்போது சூரிய ஒளியில்பட்டு, முகம் நன்றாக கருத்துப்போய் விடும்.
முகத்தில் மஞ்சள் பூச விரும்புபவர்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பேட்ச் டெஸ்ட்; முகத்தில் மஞ்சளை பூசுவதற்கு முன்பு, முன்னங்கையில் சிறிதளவு மஞ்சள் பூசி 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். தோல் அலர்ஜி அல்லது எதிர்வினை ஏதும் ஏற்படாமல் இருந்தால் மட்டுமே மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
தொழிற்சாலையில் இருந்து தயாராகும் பதப்படுத்தப்பட்ட மஞ்சள்தூளை உபயோகிப்பதை விட இயற்கையான மஞ்சள் தூளை தேர்ந்தெடுக்கலாம். அதில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லை.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மஞ்சள் தூளை ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து உபயோகிக்கலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் மஞ்சள் தூளை தேன் அல்லது பாதாம் எண்ணெயுடன் அல்லது தேங்காய் பாலுடன் கலந்து உபயோகிக்கலாம். மஞ்சளை முகத்தில் பயன்படுத்தி ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால், ஒரு சரும மருத்துவரை கலந்தாலோசிக்கலாம்.