
முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் என்று இருப்பவர்கள் சிலர், வீட்டிற்கு வரும் விருந்தினரை பார்க்கவே அச்சப்படுவார்கள். மேலும் பார்ட்டி ஃபங்ஷன் என்று வெளியில் செல்வதற்கும் விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் சில எளிய அழகு குறிப்புகளை பயன்படுத்தினால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்து முகம் பொலிவு பெறும். அதற்கான குறிப்புகள் சில:
தினசரி காலையில் எழுந்தவுடன் முகம் கழுவிய பின்பு சந்தனம் கரைத்த நீருடன் பாசிப்பயிரை மைய அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்த பின் குளித்து வரவேண்டும். அது போல் செய்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.
இரண்டு இஞ்சி துண்டுகள் எடுத்து நன்றாக இடித்து சாறு பிழிந்து தெளிய வைக்க வேண்டும். பிறகு அந்த தெளிவை மற்றவற்றிற்கு பயன்படுத்திக்கொள்ள எடுத்துக் கொண்டு, அடியில் உள்ள மண்டியை எடுத்து தேனுடன் கலந்து நன்றாக குழைத்து பருக்கள் மீது தடவி வர ஒரு வாரத்திலேயே நல்ல குணம் தெரியும்.
திருநீற்றுப்பச்சிலையுடன் வசம்பு சேர்த்து இளநீர் விட்டு மைய அரைக்க வேண்டும். அந்த விழுதை பருக்கள் மீது போட்டு வர பருக்கள் மறைய ஆரம்பிக்கும்.
கடற் சங்கை எடுத்து பசும்பால் விட்டு மைய அரைக்க வேண்டும். அவற்றை பருக்களின் மீது தடவி வர மூன்று நாட்களில் பருக்கள் மறைய ஆரம்பிக்கும்.
ஜாதிக்காய், சந்தனம், மிளகு இம்மூன்றையும் மைய அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு உடனே குணமாகும்.
மரப்பாச்சியை நீர் விட்டு கல்லில் நன்றாக உரைக்க வேண்டும் .அதை முகப்பருவில் போட முகப்பரு நீங்கும்.
சீரகத்தை எருமை பால் விட்டு நைசாக அரைத்து முகப்பருவின் மீது தடவி வர முகப்பரு மறையும்.
அதிகாலையில் தோட்டத்தில் உள்ள புல்களின் மீது படர்ந்து இருக்கும் பனித்துளிகளை பஞ்சில் ஒற்றி எடுத்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்புடன் இருப்பதுடன் நல்ல பொலிவுடன் திகழும்.
காலையில் எழுந்ததும் அவரை இலைச்சாற்றை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்து வர முகம் பளபளப்பாகும். கரும்புள்ளிகள் ஏதாவது இருந்தாலும் மறைந்து போகும்.
பூண்டை பாலில் வேகவைத்து அரைத்து பருக்களின் மீது தடவி வர விரைவில் மறைந்து போகும்.