குட்டையான முடி உள்ளவர்களுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதம் என்றால் அது சவுரி முடிதான். மேலும் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு பெண்களின் பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு அதிகமாக பயன்படுத்துவது சவுரி முடியைத்தான். அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
சவுரி முடியைப் பயன்படுத்தும்போது நல்ல சவுரியாகப் பார்த்து வாங்க வேண்டும். பல காலமாக வழக்கத்தில் இருந்து வருவது மான் முடிச்சவுரிதான். இது அவ்வளவாக இப்பொழுது கிடைப்பதில்லை.
சவுரி முடிக்கு சோப்பு போட்டு அலசுதல் கூடாது. சீயக்காய் அல்லது பச்சைப் பயறு மாவு போட்டு அலசலாம். தண்ணீரில் நன்கு அலசி எடுக்க வேண்டும். அப்படியே உலர வைத்து எடுக்க வேண்டும். இப்படி சவுரி முடியை பராமரித்து வந்தால்தான் அது நீண்ட நாட்கள் பயன்பாட்டுக்கு வரும். முதலில் சிறிதளவு எண்ணெய் தடவி சீப்பினால் சீவின பிறகு அதை தலைக்குப் பயன்படுத்தவேண்டும்.
இப்பொழுதெல்லாம் அதிகமாகக் கிடைப்பது கருப்புப் பட்டு நூல் சவுரிதான். அதையும் நன்கு பராமரித்து வரவேண்டும். இதை பூச்சிகள் அரிக்கக்கூடும். அதனால் இதை வைத்திருக்கும் இடத்தில் இரண்டு கற்பூர உருண்டைகளை போட்டு வைக்கவேண்டும். தலைமுடிக்கான தைலத்தில் பலவிதமான நறுமணங்களை சேர்த்துக் கொள்வதும் நல்லதே. இதனால் முடியின் சுத்தம் மேலும் பலப்படும். தலைமுடியில் கிருமிகளும் ஏற்படாது. இது சவுரியை அனுதினமும் பயன் படுத்துபவர்களுக்கு ஒரு வித புத்துணர்ச்சியைத் தரும்.
எப்பொழுதாவது பயன்பாட்டுக்குதானே என்று அப்படியே கழற்றி வைக்காமல், முறையாகக் கழுவி சுத்தம் செய்து வைத்தால் எப்பொழுது எடுத்து பயன்படுத்தினாலும் சுத்தமானதாக இருக்கும். இதை மற்றவர்களுக்கு இரவல் கொடுத்து வாங்குவதைத் தவிர்க்கவும்.
இன்னும் சிலர் உதிரும் தன் முடியை சேர்த்து வைத்திருந்து அதில் சவுரி செய்து கொள்வதும் உண்டு. மற்றும் சிலர் குடும்பத்தில் உள்ள அனைவரது முடியையும் ஒன்று திரட்டி கொடுத்தும் செய்து கொள்கிறார்கள். இப்படி செய்பவர்களில் பெரும்பாலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலையில் முடி இல்லாதவர்களுக்கு கொடுப்பதும் உண்டு.
இப்பொழுது நைலான் சவுரி வந்துவிட்டது. இதை பராமரிப்பது சுலபம் என்றாலும் இதை பயன்படுத்தி வருவதால் நாளடைவில் சொந்த முடிக்கு கெடுதல் செய்வதாகக் கூறுகிறார்கள். ஆதலால் அதைத் தவிர்ப்பது நலம்.
நீளமான சவுரி வாங்கி தலைமுடியின் ஆரம்பத்திலேயே வைத்து பின்னிக் கொள்வதே நல்லது. சவுரி முடி சற்று குட்டையாக இருந்தால் பின்னிக்கொள்ளும் சடையின் சரிபாதி ஆக வைத்துப் பின்னிக் கொள்ளவேண்டும். மேலும் அதை வைத்துப் பின்னத் தொடங்கிய இடம் வெளிப்படையாக மற்றவர் கண்ணுக்குப் புலப்படாமல் இயற்கையாக தோற்றமளிக்கும் வகையில் பின்னுவது தான் இதன் சிறப்பம்சம்.
சவுரியை வைத்துப் பின்னிக் கொள்ளும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது பின்னல் ஒரே சீராக இருக்கவேண்டும் என்பதே. அங்கங்கே திடீரெனப் பருத்தும் திடீரென கட்டையாக முடிவடைந்தும் காணப்படுவது அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆதலால் இதுபோல் ஒரே சீராக இருக்கும் சவுரியை தேர்ந்தெடுங்கள். பின்னி மகிழுங்கள்.