
மூக்கில் முடிகள் இருப்பது ஒரு சிறந்த வடிகட்டியாக செயல்பட்டு காற்றில் உள்ள தூசு துகள்கள், ஒவ்வாமையை ஏற்படுத்தும் மகரந்தம் மற்றும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. அத்துடன் மூக்கில் உள்ள முடி காற்றில் ஈரப்பதத்தை சேர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகிறது. சிலருக்கு மூக்கில் உள்ள முடிகள் நீளமாக வளர்ந்து மூக்கிற்கு வெளியேயும் நீட்டிக் கொண்டிருக்கும்.
இது சுகாதாரத்தை பாதிப்பதுடன் அசௌகரியமாகவும் இருக்கும். மூக்கில் நீளமான முடி இருந்தால் கிருமிகள் சேருவதற்கு இடம் கொடுப்பதுடன் தொந்தரவாகவும் இருக்கும்.
முக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அடிக்கடி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முடியை ட்ரிம் செய்து கொள்வார்கள். ஆனால் ஒரு சில ஆய்வு குறிப்புகள் என்ன கூறுகிறது என்றால் மூக்கில் முடி அதிகமாக உள்ளவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் தொற்று நோயால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவு என்கிறது. இதற்கு காரணம் முடி சிறந்த வடிகட்டியாக செயல்படுவதுதான் என்கிறார்கள். மூக்கு முடியில் ஒட்டிக் கொள்ளும் தூசி துகள்கள் தும்மலின் மூலம் வெளியேற்றப்பட்டு விடுகின்றன.
மூக்கில் முடியை வெட்டுவதற்கு என்று பல கருவிகள் உள்ளன. இவை மூக்கில் உள்ள முடியை பாதுகாப்பாக வெட்டுவதற்கு உதவுகின்றது. ட்ரிம்மர்கள் மூலம் பாதுகாப்பாக நாசி துவாரத்தில் உள்ள முடிகளை வெட்டலாம். இது ஒருமுறை மட்டும் செய்யக்கூடிய வேலை இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மூக்கில் உள்ள முடி மீண்டும் மீண்டும் வளரும் தன்மை கொண்டவை. அவற்றை தாறுமாறாக பிடுங்குவது என்பது தொற்றுகளுக்கு வழிவகுக்கும். மூக்கின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முடியை அகற்ற கத்திரிக்கோல் அல்லது ட்ரிம்மர் பயன்படும். ஆனால் அவற்றை சரியாக கையாள வேண்டும். எக்காரணம் கொண்டும் முடியை முழுவதுமாக அகற்ற முயற்சிக்க வேண்டாம். இவை காயத்தை உண்டாக்கும்.
மூக்கில் உள்ள முடியை அகற்றுவதற்கு முன்பு மூக்கு ஈரப்பதமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் ட்ரிம்மிங் முறையில் முடியை அகற்றும் பொழுது மூக்கை தண்ணீரில் கழுவாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் இவை தொற்றுக்களை உண்டாக்கலாம். மூக்கில் உள்ள முடியை வெட்டும்போது வெளியே தெரியும் முடியை மட்டும் காயம் ஏற்படாமல் கவனமாக வெட்ட வேண்டும்.
மூக்கின் உள்பகுதியில் சளி ஜவ்வுகள் உள்ளன. முடியை அகற்றும் பொழுது கவனக்குறைவாக இருந்தால் அது சளி ஜவ்வுகளை சேதப்படுத்தும். எனவே ஆழமாகச் சென்று முடி அகற்றுவதை தவிர்க்கவும். மூக்கின் தோல் மிகவும் மென்மையானது. லேசர் மூலம் முடியை அகற்றுவது ஒரு நிரந்தர தீர்வாக அமைந்தாலும் அதனை தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவரிடம் செய்து கொள்வது நல்லது.