ஈரமாக இருக்கும் தலைமுடியை விரைவில் காய வைப்பதற்கு ஹேர் ட்ரையர் ஒரு சிறந்த சாதனம். அது தலைமுடியை அழகாக மாற்றும். ஆனால் அதிகப்படியான அல்லது முறையற்ற பயன்பாடு சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
ஹேர் டிரையரை தினமும் பயன்படுத்தும்போது ஏற்படும் விளைவுகள்;
1. வறட்சி;
ஹேர்ட்ரையரை பயன்படுத்தும்போது சூடான காற்று தலைமுடியில்படும். தலைமுடியின் இயற்கையான ஈரப்பதம் பறிபோய்விடும். முடி வறட்சியாகி, உடையக் கூடிய தன்மையாக மாறிவிடும். மேலும் நுனி முடி பிளவுபட்டுப் போகும். வெளியில் செல்லும்போது சூரிய ஒளி மற்றும் காற்றுப்பட்டு தலைமுடி இன்னும் அதிகமாக வறண்டுவிடும்.
2. முடி உதிர்வும், உடைதலும்;
அதிகமான வெப்பத்தில் முடியை உலர்த்துவதால் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். அதிக வெப்பம் முடியின் இயற்கைத் தன்மையை மாற்றி கரடு முரடாக ஆக்கி, முடி உடையவும் செய்துவிடும்.
3.பொடுகு;
ஹேர் டிரையரிலிருந்து வரும் நேரடியான வெப்பம் உச்சந்தலையை பாதிப்படைய செய்யும். தினமும் பயன்படுத்தும்போது உச்சந்தலை வறட்சியாகி பொடுகு தோன்ற வழி வகுத்துவிடும்.
4. நிறம் மங்குதல்;
அடிக்கடி ஹேர் கலரிங் செய்து கொள்பவர்கள், ஹேர் ட்ரையரை பயன்படுத்தும்போது ஹேர் கலரிங் மிக விரைவில் மங்கிவிடும். மேலும் அது இயற்கையான தலைமுடியின் நிறத்தை காலப்போக்கில் மாற்றிவிடும்.
5. மின் அபாயங்கள்;
தலைமுடி ஈரமாக இருக்கும்போது ஹேர் டிரையரை பயன்படுத்துவது மின் அபாயங்களை ஏற்படுத்தலாம். எனவே ஹேர் டிரையரை பாதுகாப்பான வறண்ட சூழலில் பயன்படுத்துவது அவசியம்.
6. தீக்காயங்கள்;
ஹேர் டிரையரில் இருந்து வரும் மிக சூடான காற்று அல்லது டிரையரின் முனை தற்செயலாக உடலில் பட்டுவிட்டால் தோல் அல்லது உச்சந்தலையில் தீக்காயங்களை ஏற்படுத்தும். எனவே பாதுகாப்பான தூரத்தில் வைத்துதான் அதை பயன்படுத்த வேண்டும்.
7. அதிக இரைச்சல்;
ஹேர் ட்ரையரை பயன்படுத்தும்போது அது அதிக இரச்சலை வெளியிடும். தினமும் அதிக இரைச்சலுக்கு உள்ளாவது காலப்போக்கில் கேட்கும் திறனை பாதிப்படைய செய்யும்.
8. சுற்றுச்சூழல் தாக்கம்;
பழைய மாடல் முடி உலர்த்திகள் அதனுடைய ஆற்றல் நுகர்வின் காரணமாக சுற்றுச்சூழலுக்கு தீமையை உண்டாக்குகிறது. அதிலிருந்து வெளிப்படும் கார்பன் சுற்றுச்சூழலை பாதிக்கும். எனவே சுற்றுச் சழலுக்கு பாதிப்பில்லாத மாடல்களை வாங்குவது அவசியம்.
9. இயற்கை அமைப்பு மாறுதல்;
சிலருக்கு சுருட்டையான முடி அமைப்பு இருக்கும். இன்னும் சிலருக்கு நீள வடிவத்தில் இருக்கும். தினமும் ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது காலப்போக்கில் முடியின் அமைப்பும் மாறலாம்.
10. முடி வளர்ச்சி பாதிப்பு:
நீண்ட நேரம் அதிக வெப்பம் தலைமுடியில் படும்போது அது மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். காலப்போக்கில் முடி வளர்ச்சியை பாதித்து அடர்த்தி குறையும். முடி வளர்வதும் மிகக் குறைவாக இருக்கும்.
11. இயற்கை எண்ணெய்களின் சீர்குலைவு:
உச்சந்தலையில் இயற்கையான எண்ணெய் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஹேர் டிரையர் இந்த இயற்கை எண்ணெய்க்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஆரோக்கியமான ஈரப்பதம் உச்சந்தலையில் இருந்து காலப்போக்கில் மறைந்துவிடும்.
12. ஒவ்வாமை;
சிலருக்கு ஹேர் டிரையரில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது ரசாயனங்களின் காரணமாக ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம். சென்சிடிவ்வான தோல் இருந்தால் இந்த ஒவ்வாமையின் அளவு அதிகமாக இருக்கும்.
எனவே தலைமுடியை இயற்கையாக அல்லது ஃபேன் காற்றில் உலர்த்தலாம். அவசரமான நேரங்களில் எங்காவது விசேஷங்களுக்கு செல்லும்போது மட்டும் ஹேர் ட்ரையரை உபயோகித்துக் கொள்ளலாம்.